ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2016

அருள் உணர்வுகளை யாம் உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்வதற்குக் காரணம் என்ன?

வருடா வருடம் இராமாயணத்தைப் பற்றிச் சொல்பவர்கள் மாற்றிச் சொல்கிறார்களா?

இல்லையே.

அதைத் திருப்பித் திருப்பிச் சொல்லும்போது கூர்மையாகக் கவனித்து அந்தக் காவியங்களை நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

மகாபாரதத்தை இன்றைக்குப் படிப்பார்கள். மறுபடியும் அடுத்த வருடம் கேட்டாலும் அதையே தான் சொல்வார்கள். நாம் அதைப் பதிய வைத்துக் கொள்கிறோம் அல்லவா.

அதைப் போன்று தான் யாம் இப்பொழுது இந்த உணர்வோடு அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பதிவு செய்கிறோம்.

அந்த மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கு இந்த நினைவைத் திரும்பத் திரும்பக் கொண்டு வருகின்றோம்.

இதைக் கேட்கிற வரையிலும் கேட்கிறார்கள்.

ஏனென்றால், எல்லோருமே நாம் பல சங்கடங்களில் இருக்கின்றோம். கடலில் பெருங்காயத்தைக் கரைத்தால் அந்த இடத்தில் வாசனை வருகின்றது. அப்புறம் மங்கிவிடுகின்றது.

கடலைப் போல நமக்குள் எத்தனையோ நம்மை வெறுக்கும் உணர்வுகள் ஜாஸ்தியாக இருக்கின்றது.

அதற்குள் இப்பொழுது யாம் அருள் உணர்வுகளை உபதேசிக்கும் பொழுது முன்னாடி இந்த மணம் இருக்கும். அப்புறம் இது உள்ளுக்குள் போய் மறைந்து போய்விடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் இந்த அருள் சக்தியை காடு மேடெல்லாம் அலையச் சொல்லி பல சந்தர்ப்பங்களை உருவாக்கி இந்தக் கஷ்டங்களெல்லாம் உனக்குள் எப்படி வருகின்றது என்று நேரடியாகக் காட்டினார்.

எனக்குள் பல கஷ்டங்களை உருவாக்கி கஷ்டத்திலிருந்து மீள்வதற்கு அணுக்கள் எப்படி உருவாகிறது? உணர்வுகள் எப்படி மாறுகின்றது? என்று இதையெல்லாம் அனுபவத்தில் கொடுத்தார்.

தீமைகளிலிருந்து மீட்டிடும் நிலைகளை குருநாதர் காட்டிய வழியில் யாம் அனுபவித்து அதில் உருவான உணர்வின் வித்தை அந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ள நீங்கள் எந்தெந்த வழிகளில் செய்ய வேண்டும் என்று சொல்லித்தான் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

கோவிலுக்குப் போனால் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் விநாயகரை வணங்கும் பொழுது யாம் சொல்லும் முறைகளில் நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களைக் காக்கும்.