ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2016

ஞானிகள் காட்டிய நேரான வழிகளில் நாம் செல்லவில்லை, தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிட்டார்கள்

கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம் இதிலே நம் நினைவினைச் செலுத்தச் செய்கின்றார்கள்.

தன் வாழ்க்கையின் நிலைகளில் மனிதன் நாம் எப்படி உருவானோம்?

மனிதனாக உருவான பின் பரமபதம் என்ற நிலையில் சொர்க்கத்தை அடைந்துள்ளார்கள். பல கோடி இன்னல்களிலிருந்து கடந்து இன்று துருவ நட்சத்திரமும் அதன் வழி பின்பற்றிச் சென்றவர்கள் அனைத்தும் இன்று சப்தரிஷி மண்டலங்களாக ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் அடைந்துள்ளார்கள்.

இதைத் தெளிவாக்குவதற்காக பரமபதம் என்ற அட்டையையே வைத்துக் காட்டியுள்ளார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று இதை விளையாடுவார்கள். அதை எடுத்துத் தாயத்தை உருட்டுவார்கள். விடிய விடிய முழித்துக் கொண்டிருப்பதற்காக இதை விளையாடுவார்கள்.

விடிந்தபின் தூக்கமில்லாமல் சொர்க்க வாசல் என்று கோவிலுக்குள் சென்று தெய்வத்திற்கு அபிஷேகங்கள் செய்து சமையல் செய்து அவனுக்குக் கொடுத்துவிட்டால் சொர்க்கத்திற்கே நம்மை அழைத்துச் செல்வான் என்று செல்வார்கள்.

அதாவது வழக்கமாகப் போகும் பாதையை விட்டுவிட்டு இடைமறித்து குறுக்குக் பாதையில் சென்று சொர்க்க வாசல் என்று அதன் வழியில் சென்று அபிஷேகம் செய்வார்கள்.

குறுக்குப்பாதை வழியாகச் செல்வதை இதுதான் சொர்க்க வாசல் என்று ஆலயங்களில் காட்டியுள்ளார்கள். தவறாக யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் நம்மைத் தவறான வழிகளில் அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

ஞானிகள் காட்டிய நேரான வழிகளில் நாம் செல்லவில்லை. அந்த நேரான பாதைகள் அடைபட்டுவிட்டது. இன்றும் அந்தப் பாதையைத் திறக்க முடியாத நிலையில் இருக்கின்றது.

திறக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தாலும், “என்னமோ.., சாமி கதை விடுகிறார்..,” என்று சொல்பவர்களும் உண்டு. ஆக, நம்மால் முடியுமா என்று பலவீனப்படுத்துவோரும் உண்டு.

உண்மையின் இயக்கத்தைத் தெரிந்து கொள்வதற்கு குருநாதர் கடவுளின் அவதாரம் பத்து என்ற நிலைகளை எமக்குத் தெளிவாகக் காட்டினார்.

சாக்கடையிலிருந்து ஒரு பன்றி தன் உணவை எப்படி எடுக்கிறது என்றும் இந்தக் கூர்மையின் நிலைகள் எப்படி விளைந்தது என்றும் காட்டினார்.

இந்த உயிரணு உன்னை மனிதனாக்குவதற்கு எத்தனை இன்னல்கள் பட்டது? நீ எத்தனை வேதனைகள் பட்டாய்? புழுவிலிருந்து மனிதனாக எப்படி வந்தது? என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

ஏனென்றால், நாம் புழுவிலிருந்து மனிதனாகப் பெற்ற அந்த ஒவ்வொரு உணர்வுகளும் இன்று இந்தப் பூமியில் உண்டு அது மறைந்துவிடவில்லை.

அதே சமயத்தில் வளர்ச்சியில் அதன் உணர்வின் துணை கொண்டு மனிதனாக வந்தாய். மனிதனாக வந்தாலும் இந்த வாழ்க்கையிலே நீ எதைக் கூர்மையாக எண்ணி உனக்குள் அதிகமாகச் சேர்க்கின்றாயோ அதன் வழி கொண்டு “மீண்டும் கீழே எப்படிப் போகின்றாய் பார்..,” என்று குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டினார், உணர்த்தினார்.

நாம் நினைக்கின்றோம்…, மனிதனாகப் பிறந்தபின் வேறு வழிக்குப் போகமாட்டார்கள் என்று சில பேர் சொல்வார்கள்.

இதிலே விஷத்தின் அளவுகோல் எதுவோ அணுவின் தன்மை எப்படி மாற்றுகின்றது? என்று தெளிவாக எடுத்துக் காட்டினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அதைத்தான் உங்களுக்கு இப்பொழுது உபதேச வாயிலாகச் சொல்லி குரு காட்டிய வழியில் சாஸ்திரங்களில் காட்டிய பேருண்மைகளை உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

நமக்குச் சொர்க்கவாசல் நம் உயிர் தான். நம் குரு காட்டிய அருள் வழியினைப் பின்பற்றி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உயிர் வழியாகச் சுவாசியுங்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்யுங்கள். அருளாற்றலை உங்களுக்குள் விளையச் செய்யுங்கள். அருள் உணர்வுகள் நமக்குள் விளைந்தால் நேராக நம்மை அந்த ஞானிகள் இருப்பிடத்திற்கே அழைத்துச் செல்லும்.

அந்த ஞானிகள் காட்டிய வழியில் செல்வது கடினமல்ல எளிதானது தான்.