குடும்பம் ஒரு
கோவில் போன்றது.
அங்கே அன்பும்
ஒற்றுமையும் மிகுந்திருக்கும் பொழுது அருளும் பொருளும் தேடி வரும். இல்லறத்தில் நல்லறத்தை
வளர்க்கும் பொழுதுதான் பேரின்பப் பெருவாழ்வான அழியா ஒளிச் சரீரத்தை எளிதில் நாம் பெற
முடியும்.
நம் முன்னோர்கள்
நல்ல பண்புகளை நமக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். அதில் ஒன்று காலையிலும் மாலையிலும்
வீட்டைப் பெருக்கி வாசலைத் தெளித்துக் கோலமிடும் பழக்கம்.
வீட்டைப் பெருக்கி
வாசலைத் தெளித்து அழகான கோலங்களைப் போட்டு வைப்பது வீட்டில் நிலவும் மகிழ்ச்சியையும்
ஒற்றுமையையும் வெளிப்படுத்தும்.
அது மட்டுமில்லாமல்
வீட்டிற்கு வருகை தரும் நண்பர்களிடத்திலும் விருந்தினர்களிடமும் மகிழ்வான உணர்வுகளை
வெளிப்படுத்தச் செய்யும். அந்த வீட்டில் அனைவரின் மகிழ்ந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது
அந்த உணர்வுகள் வீட்டில் பதிந்து அந்த வீட்டிற்கு வருகை தரும் அனைவரயும் மகிழச் செய்திடும்
நிலை அங்கே நிலவும்.
எனவே வீடுகளில்
கோலமிடும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்,
எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும்
பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
மேலும் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் எங்கள் குடும்பத்திலுள்ள
அனைவரும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
எங்கள் குடும்பத்தில்
உள்ள அனவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும்
வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற எண்ணத்துடன் கோலமிடுங்கள்.
இத்தகைய எண்ணங்களை
எண்ணிக் கொண்டு கோலமிடும் கோலப்பொடியைத் தொடும் பொழுது அந்த உணர்வுகள் அந்தப் பொடிக்குள்
படர்கின்றது. அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் மன
மகிழ்ச்சி
பெற இது உதவுகின்றது.