ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2016

நான் யார்? இந்தப் பிள்ளை யார்? என்று தெளிவாக உணர்த்தியவன் அகஸ்தியன்

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தங்கள் கோள்கள் வெளிப்படுத்தும் உணர்வலைகளிலும் நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சக்தியிலும் சந்தர்ப்பத்தால் மோதுண்டு  அணுவாகி, உயிரணுவாகின்றது.

பூமியின் சுழற்சியில் உயிரணு சிக்கி பூமியில் படர்கின்றது.

அப்படிச் சிக்கிய உயிரணு தான் புழுவாகி பூச்சியாகி தவளையாகி பாம்பாகி பறவையாகி, பரிணாம வளர்ச்சியில் இன்று மனிதனாக உருப்பெறச் செய்கின்றது.

வலுவற்றதை வலுவானது விழுங்குகின்றது. வலுவானதின் உணர்வை இது கவர்கின்றது.

கவர்ந்த நிலையில் இதன் உணர்வுகள் மாறுகின்றது. சேர்த்துக் கொண்ட வினையான உணர்வுக்கொப்ப மறு உடல் பெறுகின்றது.

உதாரணமாக புழுவை தவளை விழுங்குகின்றது. தவளையைப் பாம்பு விழுங்குகின்றது. பாம்பினைக் கருடன் ஆகாரமாக விழுங்குகின்றது.

புழுவைத் தவளை விழுங்கினாலும் புழுவின் தசைகள் உணவாகின்றது. புழுவின் உயிரான்மா தவளையின் ஈர்ப்பில் சென்று அதனின் உணர்வு கொண்டு வளர்ச்சியின் நிலையில் தவளையாக உடல் பெறுகின்றது.

இப்படிப் பல கோடிச் சரீரங்கள் பெறுகின்றது. ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்திடும் உணர்வுகள் பதிவாகின்றது. அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு உணர்வுகள் விளைந்து விளைந்த உணர்வுக்கொப்ப உடல்கள் மாற்றமாகின்றது.

உணர்வுகள் வளர வளர எண்ணங்களும் செயல்களும் வளர்ச்சியாகின்றது. வளர்ச்சியின் முழுமை நிலையாக ஆதியில் புழுவான உயிர் தான் மனிதனாக உருவாக்கியிருக்கின்றது.

பரிணாம வளர்ச்சியில் நாம் மிருக நிலையிலிருந்து மனிதனாக உருப்பெற்று இருக்கின்றோம்.

இதனை நாம் உணரும் வண்ணம் மனித உடலில் யானையின் தலையைப் பொருத்தி விநாயகனாக உருவாக்கி “நாம் யார்..,? எப்படி மனித உடலைப் பெற்றோம்..,? என்பதனைத் தான் தெளிந்து தெளிந்த நிலையில் உணர்ந்து “இந்தப் பிள்ளை யார்...,? என்று உணர்த்தியவர் அகஸ்தியமாமகரிஷி.

விநாயகனை ஆதிமூலம் என்பார்கள். ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக உடல்கள் மாறி மாறி இன்று மனித உடலைப் பெற்றோம்.

இவை அனைத்திற்கும் மூலமாக இயக்கியது நமது உயிர் தான். உயிரே கடவுள். நாம் எண்ணும் எண்ணங்களுக்கு ஏற்றபடி நம்மை இயக்குகின்றது. இயக்கும் உணர்வுக்கொப்ப செயல்பட வைக்கின்றது நம் உயிர்.

கிடைப்பதற்கு அரிய மனித உருப் பெற்றிருக்கின்றோம். ஆறாவது அறிவின் துணை கொண்டு சிந்தித்துச் செயலாற்றும் திறன் கொண்டவன் மனிதன்.

உடலின் உணர்வுக்கும் தீமையை விளைய வைக்கும் உணர்வுகளுக்கொப்ப நாம் நமது மனித வாழ்க்கையில் வாழ்வோம் என்றால் நாம் இந்த மனித சரீரத்தை இழந்து எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்குத் தகுந்தப்படி மிருக நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும் நம் உயிர்.

வைரம் விஷம் கொண்டது தான். விஷத்தினை அடக்கி அதனை அது ஒளியாக மாற்றுகின்றது.

மகரிஷிகள் மனிதனாக இருந்த காலங்களில் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்று தீமைகளை விளைவிக்கும் உணர்வுகளை ஒடுக்கி உணர்வுகளை ஒளியாக்கி இன்றும் சப்தரிஷி மண்டங்களாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மகரிஷிகள் மெய்ஞானிகள் உணர்த்திய வழியில் நமது எண்ணங்களைச் செலுத்தி மகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல்களைக் குரு வழியில் கவரப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் மனித வாழ்க்கையில் ஏற்படும் வேதனைகள மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு மாய்த்து நாமும் நம் உயிரை ஒளியாக்கலாம். உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரம் பெறமுடியும்.

உயிரின் இயக்கத்தையும் அதற்கொப்ப உடலின் செயலை அறிந்து நமது ஆறாவது அறிவின் துணை கொண்டு உணர்வுகளைப் புனிதப்படுத்துங்கள்.

உயிரை ஈஸ்வரனாக மதியுங்கள்
இயக்கத்தை விஷ்ணுவாக மதியுங்கள்
உடலைச் சிவனாக மதியுங்கள்
கண்ணைக் கண்ணனாக மதியுங்கள்.