ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 18, 2016

“உயிரே கடவுள்” என்று சொன்னால் எப்படி ஆகும்? என்று சட்டம் பேசுகிறார்கள்

மனிதனாகப் பிறந்த நாம் (விஞ்ஞானிகள்) பல செடிகளில் உள்ள அணுக்களை எடுத்து ஒவ்வொரு செடிகளிலும் இணைத்துச் செடிகளின் ரூபங்களை மாற்றுகின்றோம். அதில் வரும் மலர்களின் ரூபங்களையும் மாற்றியமைக்கின்றோம்.

இதே போல ஒரு உடலில் உருவாகும் அணுக்களை எடுத்து இன்னொரு உடலில் இந்த அணுக்களைச் செலுத்தப்படும் பொழுது எத்தனயோ விதமான ஆடு, மாடு, நாய் இவைகளைப் பல ரூபங்களை இப்பொழுது மனிதனாக இருக்கும் நாம் மாற்றியமைக்கின்றோம்.

இதையும் நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.

ஒரு ஆமை கூர்மையாக விஷம் கொண்ட ஒரு நரியை உற்றுப் பார்த்த பின் அதன் உணர்வைத் தனக்குள் பதிவாக்கப்படும் பொழுது தன் உடலுக்குள் இருக்கும் (ஆமையை உருவாக்கிய) அணுக்களில் இது அதிகமாகச் சேர்ந்த பின் நரியின் உணர்வுகள் ஆமையின் உடலுக்குள் அதிகமாக வலு சேர்ந்துவிடுகின்றது.

ஆமையோ தன்னை மறந்து நரியின் நினைவாகவே வந்துவிடுகின்றது.

ஆக, இந்த ஆமையின் உடலுக்குள் நரியாக மாற முடியாது. நரியின் உணர்வுகள் ஆமைக்குள் வந்த பின் இந்த உடலை விட்டுப் பிரிந்து நரியின் நினைவாக ஆமையின் உயிரான்மா வெளியில் செல்கின்றது.

அப்படி வெளியில் செல்லப்படும் பொழுது இந்த நரியின் உணர்வுகள் ஆமையின் உடலிலுள்ள அணுக்களுக்குள் பட்டபின் இது வெளிவரப்படும் பொழுது அதற்குக் காரணப் பெயரைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

அர்ச்சுனனுக்குக் கண்ணன் உபதேசித்து, அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கிறான் என்று காட்டுகின்றார்கள்.

இந்தக் கண் எந்த நரியின் உணர்வை வலுவாக எடுத்து ஆமையின் உடலுக்குள் அந்த வலுவின் தன்மை இணைத்து வலுவாக்கிவிட்டதோ அந்த வலுவிற்குப் பெயர் அர்ச்சுனன் என்று வைக்கின்றனர்.

அர்ச்சுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றான்.

எந்த நரியின் வலுவான உணர்வை ஆமையின் உணர்வின் அணுக்களுக்குள் சேர்த்ததோ இந்த உடலை விட்டுச் சென்றபின் எதைப் பார்வையாகப் பார்த்ததோ இதுவே சாரதியாக அமைந்து அந்த நரியான உடலின் வியூகத்தைத் தகர்த்து அதன் உடலுக்குள் சென்று “நீ அதுவாகு” என்று உபதேசிக்கின்றான்.

இதை நாமெல்லாம் தெரிந்து கொள்வதற்காகக் கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம் என்று காவியத்தைத் தெளிவாகப் படைத்துள்ளார்கள்.

இப்படி வளர்ந்தது தான் நமது உயிர்.

கடவுளாக நின்று ஒவ்வொரு சரீரத்திலேயும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து அந்த எண்ணத்தால் இந்த உடலை இயக்கி நம்மைக் காத்துக் கொள்ளும் நிலைகள் செய்தது என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது நமது சாஸ்திரங்கள்.

இன்று உயிரே கடவுள் என்று சொன்னால் எப்படி ஆகும் என்று சட்டம் பேசுகிறார்கள்.

கீதையைப் படித்தவர்களும் மகாபாரதத்தைக் கற்றுக் கொண்டவர்களும் கடவுளின் அவதாரம் பத்து என்று தெரிந்து கொண்டவர்களும் அதைப் படித்தார்களே தவிர மூலக் கூறை அறிந்து கொள்ளவில்லை.

காவியமாகப் படிக்கின்றார்கள், கருத்துக்களை அள்ளி வீசுகின்றார்கள் அவரவர்களின் சந்தர்ப்பத்திற்கொப்ப நிலையைத்தான் பேசுகின்றார்களே தவிர அந்த ஞானிகள் காட்டிய பேருண்மைகளை அறிய முற்படவில்லை.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கு ஒவ்வொரு நிலைகளுக்குக் காரணப் பெயரை வைத்து அவைகளின் இயக்கத்தின் பேருண்மைகளை நாமெல்லாம் அறிந்து இந்த வாழ்க்கையில் நம்மையறியாமல் வரும் தீமைகளிலிருந்து எவ்வாறு மீள வேண்டும் என்பதற்குத்தான் இந்தக் காவியத் தொகுப்புகளைத் தெளிவாகக் காட்டினார்கள்.