ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 26, 2016

மெய்ஞானிகளுடன் ஒன்றும் பாதையை குருநாதர் தெளிவாகக் காட்டினார்

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் உருவாக்கினாலும் இந்தப் பேரண்டத்தில் வந்த உணர்வின் துணை கொண்டுதான் ஒரு பிரபஞ்சமாக உருவாகின்றது.

பிரபஞ்சத்தில் உருவானதை ஒரு உயிரணு நுகர்ந்து உணர்வின் எண்ணங்கள் கொண்டு இயக்கும் தன்மை வந்து அதன் வழி கொண்டு மனிதனாக உருவாகின்றது.

மனிதனான பின் அகண்ட அண்டத்தில் பரவிக் கிடந்த உணர்வை தான் நுகர்ந்தவர்கள் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அவர்கள் அகண்டு சென்று எந்த அண்டத்திலிருந்து நுகர்ந்ததனரோ அதன் வழி வழி தொடர்ந்து என்றும் அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலையாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தச் சூரியன் அழியலாம். ஆனால், மனித உயிர் இந்த உணர்வின் தன்மையைப் பெற்றுவிட்டால் என்றும் அழியா நிலைகள் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

அந்த நிலை பெறுவதற்காகத் தான் ஞானிகள் அனைவரும் சென்றார்கள்.

அதிலே வீழ்ந்தவர்களும் ஏராளம். பின் அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தால் இன்று ஏங்கி இருப்போரும் ஏராளம்.

ஆனால், பாதை தவறிச் செய்து கொண்டிருப்போர் சாங்கியங்களைச் செய்துவிட்டு அதைப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்போர் பலர்.

நூற்றுக்கு ஒன்று இரண்டு என்று கூடச் சொல்லலாம். பத்து சதவீதம் தேறுவது கூட மிகக் கடினம். இதை குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

பல இன்னல்கள் எப்படிச் சேருகின்றது? நுகர்ந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது? இதிலிருந்து நீ விடுபடும் மார்க்கங்கள் என்ன?

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீ ஏங்கு. அதன் வலிமையை உனக்குள் சேர்த்துக் கொள். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உனக்குள் வளர்த்து அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வை நீ செலுத்து.

அவர்கள் வளர நீ அதைக் கண்டு மகிழ்ச்சி பெறு. அதன் நிலைகளே உனக்குள் வளரும்.

அதை நீ  பெறுவாய். அனைவரையும் பெறச் செய்வாய் என்று குரு அருளை எமக்குள் பாய்ச்சிய நிலைகளைத் தான் உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றேன்.

இன்றைய செயல் நாளைய சரீரம். இன்று எந்த உணர்வை நாம் சேர்க்கின்றோமோ அடுத்து ஒளிச் சரீரம் பெறலாம்.

அதே சமயத்தில் இன்று வேதனை என்றால் வேதனையை உருவாக்கி அதைக் கொண்டு வேதனையை உணவாக உட்கொள்ளும் அந்தச் சரீரத்தைப் பெறலாம்.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு இன்று அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்ப்போம். நாளை ஒளியின் சரீரம் பெறுவோம்.

இந்த உடல் நமக்குச் சதமல்ல. ஆனால், இந்த உடலின் துணை கொண்டு தான் நாம் சப்தரிஷி மண்டலம் செல்ல முடியும்.

எனவே இந்த உடலில் இருக்கும் பொழுதே நம் நினைவின் ஆற்றலை மகரிஷிகளின் பால் செலுத்தி அதன் வலிமையை நமக்குள் வளர்ப்போம். தீமைகள் நம்மை நாடாது தடுத்துக் கொள்வோம்.

மெய்ஞானிகளுடன் ஒன்றுவோம். அந்த மெய்ஞானிகளுடன் ஒன்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

முந்திச் செய்யத் தவறிய நிலைகளிலிருந்து நம் மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

கூட்டுத் தியானத்தின் மூலம் ஆயிரக்கணக்கோர் சேர்ந்த உணர்வுகளின் வலிமை கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்.

உடல் பெறும் உணர்வைக் கரையச் செய்வோம்.

அதன் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பெறும் தகுதியைப் பெறுவோம். அந்த அருள் ஞானத்தைப் பெறுவோம்.

அழியா ஒளியின் சரீரம் பெறுவோம் என்று உறுதி கொள்வோம்.