ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2016

நம் கண்ணின் நினைவாற்றலுக்குண்டான சக்தி

வீட்டிலே மிளகாயை வறுக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே கருக்கல் வாசனை வந்து நாம் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டால் நமக்குள் துடிப்பு வருகின்றது, திகைப்பு வருகின்றது, அந்த இடத்தை விட்டு நகர்ந்து போகும்படிச் செய்கின்றது.

ஆனால், நாம் பார்ப்பதோ மிளகாயின் நெடிதான் என்று எண்ணுகின்றோம். இதைச் சாதாரணமாக நினைக்கின்றோம். நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே பட்டபின் அந்த உணர்வுகள் எரிச்சலாகின்றது அல்லது தும்மலாகின்றது, நமக்குள் நெடி கிளம்புகின்றது.

இது நம் உயிரிலே பட்ட பின் “ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றிவிடுகின்றது. எந்த வகையில் நுகர்ந்தாலும் முதல் முதலிலே நுகர்வதை ஜீவ அணுவாக மாற்றுகின்றது.

அந்த அணுவான பின் மீண்டும் அது நினைவாகின்றது. நினைவாகப்படும் பொழுது நம்மை என்ன செய்ய வைக்கின்றது? நம்முடைய நினைவினைக் கூர்மையாக எண்ண வைக்கின்றது.

பக்கத்து வீட்டில் மிளகாய் வறுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் இங்கே பேசிக் கொண்டிருந்தால் அந்த நெடி வந்தபின் இதை விட்டுவிடுவோம். அந்த நெடி மேல் கூர்மையாக நினைவைச் செலுத்துவோம்.

அந்த உணர்வின் தன்மையைச் சிறிது நேரம் அதைப் பாய்ச்சி விட்டால் அது அணுவாகவே மாறிவிடுகின்றது. அதற்கு ஆகாரம் அந்த நெடி கலந்த உணர்வுதான்.

அந்த மாதிரி நெடி கலந்த உணர்வுகள் நமக்குள் சேர்ந்துவிட்டால் நம்மையறியாமலே சில நேரங்களில் நமக்குத் தும்மல் வரும். மூக்கில் தண்ணீராக வரும்.

அந்த நெடி கலந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது எந்தெந்த உணர்வு வருகின்றதோ இவை அனைத்தும் அணுவாக உருவாகிவிட்டால் அதற்கு உணவு தேவை.

நாம் சோர்வடைந்திருக்கும் பொழுது அது உணர்வின் தன்மை உந்திவிட்டால் அந்த அணு அதற்கு வேண்டிய ஆகாரத்திற்கு உந்தும். அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

இந்த உடல் வழியாகக் காற்றிலிருப்பதை அந்த நெடி கலந்த உணர்வை அது கவரும்.

ஏனென்றால் மிளகாயை வறுத்து வைத்தாலும் அந்த உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகத் தான் மாற்றுகின்றது. அதனுடைய வேலை அது.

நாம் நுகரப்படும் பொழுது அணுவாக மாற்றுகின்றது நமது உயிர். அந்த அணுவின் மலம் தான் நம் உடலாக மாறுகின்றது. உடலாக மாற்றுகின்றது உயிர்.

நன்மையானாலும் தீமையானாலும் நமக்குள் எப்படி வருகின்றது? அது எப்படி உடலுக்குள் விளைகின்றது என்ற நிலைகளை நாம் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

ஆகவே, அருள்ஞானிகளின் உணர்வுகளை உற்று நோக்கி அதன் மேல் நினைவினைக் கூர்மையாகச் செலுத்தினால் அது நமக்குள் அணுவாக உருவாகும்.

அப்படி உருவான அணு அது தன் பசிக்கு அந்த அருள்ஞானிகளின் உணர்வை உணவாக எடுத்து வளரும். அருள் ஞானம் நமக்குள் விளையத் தொடங்கும்.