ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 21, 2016

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் நிம்மதி இல்லை,...! ஏன்...?

இன்று நாம் கோவிலுக்குச் சென்றால் எப்படிச் செல்கிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். தேங்காய் பழத்தை உடைப்பதிலும், சாமிக்கு அபிஷேகம் செய்வதிலும் தன் குறைகளைச் சொல்லி அழுவதிலும் தான் இருக்கின்றோம்.

நான் அப்படியெல்லாம் அழுக மாட்டேன் என்று சொல்வார்கள். இவர்கள் உணர்வுகள் வீட்டில் நடக்கும் கஷ்டங்களைப் பார்த்தவுடன் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே..,” என்று தன்னாலே இந்த உணர்ச்சி கொண்டு பேசத் தொடங்குவார்கள்.

முதலில் நன்றாக இருப்பார்கள். வீட்டில் கஷ்டம் வந்தவுடன் “என்னை இப்படியெல்லாம் சோதிக்கின்றாயே.., நான் உன்னை வணங்காத நாள் இல்லையே..,” என்பார்கள்.

ஆக, தன்னை அறியாமல் இந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது? இதைப் போன்ற கடும் தீமைகளிலிருந்து நாம் எப்படி மீள வேண்டும்? என்பதற்குத்தான் இந்த உபதேசங்களை உங்களுக்குள் இந்த உணர்வினைச் செலுத்தி அருள் ஞானிகளின் உணர்வுடன் ஒன்றச் செய்து அதனைப் பருகும் நிலைகளுக்கு உபதேசிக்கின்றோம்.

உங்களை அறியாது வந்த இருளைப் போக்குவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவினை அங்கே கூர்மையாகச் செலுத்தி அதைப் பெறவேண்டும் என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி நீங்கள் தியானியுங்கள்.

இவ்வாறு தியானித்து அதன் வழியில் பேராற்றல்களை நீங்கள் பெறுவீர்கள் என்றால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி மெய்ஞானிகளின் உணர்வுடன் ஒன்றி இனி நாம் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

அந்த மெய்ஞானிகள் சென்ற பாதையில் நாம் செல்ல முடியும். எத்தகைய கொடுமையான நிலைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள முடியும்.

ஒரு புழுவைக் குளவி கொட்டிய பின் புழுவின் ரூபம் இல்லை. கொட்டிய குளவியின் ரூபமே வந்தது.

இதைப் போல அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஊட்டிய பின் இந்த உணர்வுகள் ஒளியாகத் தான் மாறுன்றது. அதன் உணர்வின் நினைவினைக் கூட்டும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.

வேதனைப்படும் உணர்வை நம்முடைய நண்பன் பால் எண்ணி எனக்கு உபகாரம் செய்தான் என்ற எண்ணத்தில் வலு சேர்த்துவிட்டால் அந்த எண்ணத்திற்கு அந்தக் கூட்டிற்குள் அழைத்துச் சென்று நம்முடைய தீமையின் உணர்வைத் தான் அங்கே செலுத்த முடியும்.

ஆகவே, இந்த இயற்கையின் நிலைகளிலிருந்து நாம் நம்மை எவ்வாறு மீட்ட வேண்டும் என்பதற்குத்தான் கடவுளின் அவதாரம் பத்து என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நம் உயிர் ஒளியின் தன்மையாக விண்ணிலே உருவானது. அந்த விண்ணிலே தோன்றிய உணர்வுகள் புவியில் வருவதை உணர்வாக நுகர்ந்து உணவாக எடுத்து பல உடல்கள் மாறி இன்று மனித உடலாக நம்மை மாற்றி உள்ளது.

மனித உடலாக மாற்றிய நிலையில் உணர்வின் எண்ணங்களாக இயக்கி அந்த எண்ணத்தின் வலிமை கொண்டு விண்ணின் ஆற்றலைத் தனக்குள் செருகி அந்த உணர்வின் நினைவு கொண்டு தனக்குள் உருமாற்றும் உணர்வை இந்த மனித உடலில்தான் உருவாக்கிக் கொள்ள முடியுமே தவிர மற்ற உடல்களிலிருந்து நாம் உருவாக்க முடியாது என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள்.

அதன் வழியில் நாம் சென்றோம் என்றால் நிச்சயம் அந்த ஞானிகள் இருக்கும் எல்லையை அடைய முடியும். இந்த மனித உடல் நமக்குச் சொந்தமல்ல.

கோடிச் செல்வம் இருந்தாலும் இன்று நிம்மதி இல்லை. அதே சமயத்தில் செல்வம் இல்லாதவருக்கும் நிம்மதி இல்லை. செல்வம் வைத்திருந்தாலும் அவர்களுக்கு நிம்மதி இல்லை.

நிம்மதி தேட வேண்டுமென்றால் ஒவ்வொரு நிமிடமும் நாம் என்ன செய்யவேண்டும்?

நம் கையில் அழுக்குப் படுகின்றது. அடுத்து நன்னீரை விட்டுக் கழுவுகின்றோம்.

இதைப் போல நமக்குள் ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்க்கையில் குறைகள் வந்து தாக்குகின்றது. நம் நல்ல குணங்கள் மறைகின்றது. அருள்ஞானியின் உணர்வைக் கொண்டு இதைத் துடைக்க வேண்டும். இதைத் தான் நாம் தியானம் என்று சொல்கிறோம்.

அதன் வழி நாம் செயல்பட்டோம் என்றால் தீமைகளிலிருந்து விடுபட்டு தீமையற்ற உலகை இந்த உடலுக்குள் உருவாக்கலாம்.

என்றும் தீமையில்லாத உலகாக நமக்குள் உருவாக்கிக் கொள்ளலாம். என்றுமே ஒளியின் சரீரமாக நிலை பெற முடியும்.