ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 8, 2016

உணவை உட்கொள்ளும் பொழுது எந்த எண்ணம் கொண்டு உட்கொள்கிறோம்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

சுவையான உணவைச் சாப்பிடுகின்றோம். ஆனால், அந்த நேரத்தில் எதையெல்லாம் எண்ணுகின்றோம்? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் சேர்க்கப்படும் பொழுது உணவாக அந்த வேதனைப்படும் உணர்வுகள் இணைக்கப்படுகின்றது.

இந்த உணர்வின் ஆற்றலை எதனுடன் இணைக்கின்றோமோ அதற்குத் தக்க நமக்குள் உமிழ்நீராகி உடலுக்குள் சென்று அணுக்கள் உருவாகின்றது.

சாப்பிடும் பொழுது ஒரு நான்கு நாளைக்குச் வேதனையாகவே சொல்லிப் பாருங்கள். உணவுடன் கலந்து அந்த இரண்டாவது நாள் வந்தவுடன் “அம்மா.., அப்பா...,” என்று வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஒரு சில பேர் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பார்த்தால் இதைப் போன்ற வேதனைப்படும் நிலைகளை உற்றுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அடுத்தவர்கள் படும் கஷ்டங்களை எல்லாம் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த உணர்வுகள் சேரச் சேர என்ன ஆகும்?

கஷ்டமான உணர்வின் சேர்க்கை அமிலமாக மாறி அது உணவுடன் சேர்த்து அவர் எந்தெந்தக் கஷ்டத்தைப் பட்டாரோ அதையெல்லாம் இவருக்குள் உருவாக்கும் தன்மையாக மாற்றிவிடும்.

நண்பராகப் பழகியவர் இப்படி எண்ணினார், திடீரென்று விபத்தாகி இப்படிச் செத்தார், அதனால் குடும்பத்தில் இப்படியெல்லாம் சிரமப்பட்டார்கள், அதனால் ரொம்பவும் வேதனை ஆகிவிட்டது என்று சொன்னால் போதும்.

எல்லாவற்றையும் “உம்” கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார். இதைச் சொல்லும் பொழுது உற்றுக் கேட்டு இரசித்து உணவை உட்கொள்வார்.

இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் போன பிற்பாடு அங்கே அவர் விபத்தில் சிக்கிய உணர்வு இங்கே இயக்கும். இவர் சாப்பிட்டுச் சென்ற பின் விபத்தின் தன்மையை இங்கே உருவாக்கும்.

இந்த இயற்கையின் இயக்கம் எப்படி இருக்கிறது என்று நீங்கள் பார்க்கலாம்.

என்னதான் சீராக இருப்பவர்களையும் பாருங்கள். சாப்பிடும் போது பார்த்தோம் என்றால் கஷ்டப்பட்டது, வேதனைப்பட்டது, சிரமப்பட்டது போன்ற நிலைகளையே அவர்களை அறியாமல் பேசச் செய்யும்.

பின் ரொம்பவும் வேதனைப்படுவார்கள். ஏனென்றால் வேதனை என்பது விஷமான உணர்வு. நன்றாக இருக்கும் குடும்பத்தில் எதிர்பாரத நிலைகள் ஏற்படும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் நல்லது.

ஆகவே, உணவு உட்கொள்ளும் பொழுது கூடுமான வரையிலும் இதைப் போன்ற நிலைகள் வராது தடுத்துக் கொள்தல் வேண்டும். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் சாப்பிடும் இந்த உணவு முழுவதும் படர வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த உணவு அமிர்தமாக மாறி என் உடலுக்குள் இணைய வேண்டும் ஈஸ்வரா என்று வேண்டி அந்த ஏக்க உணர்வுடன் உணவை உட்கொண்டால் நமக்குள் அதற்குத்தக்க உமிழ்நீராக மாறி அது நல்ல அமிலமாக உடலுக்குள் இணையச் செய்கின்றது..

அதனால் உடல் உபாதைகளையும், வலிகளையும், அதே சமயத்தில் எதிர்பாராது இயக்கும் தீமையான உணர்வின் நிலைகளிலிருந்தும் நம்மை நாம் மீட்டிக் கொள்ள முடியும்.