ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 19, 2016

உயிர் பிரிந்து செல்லும் பொழுது நம் எண்ணத்தை எங்கே கூர்மையாகச் செலுத்த வேண்டும்....?

ஞானிகள் காவியங்களில் பேருண்மைகளைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். அந்த ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி நம் உடலுக்குள் இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபடும் எண்ணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தவில்லை என்றால் நாம் எந்த வேதனை உணர்வை அதிகமாக எடுத்தோமோ அதனின் உணர்வைத் தனக்குள் வளர்த்து மீண்டும் தேய்பிறையாகி எந்த விஷத்திலிருந்து மீண்டு மனிதனாக வந்தோமோ மீண்டும் விஷமான தன்மைக்குச் சென்றுவிடுவோம்.

ஒரு விஷமான பாம்பு தீண்டிவிட்டால் விஷம் நம் உடலுக்குள் பரவிவிட்டால் “ஐயோ.., பாம்பு தீண்டிவிட்டது..,” என்ற எண்ணங்களை எண்ணினால் போதும்.

இந்த உடலைவிட்டுச் சென்றபின் மனிதனின் நினைவலைகள் இழக்கப்படுகின்றது. மயக்கமடைகின்றது. சிந்தனைகள் முழுமையும் மறைகின்றது. பாம்பின் நினைவே கடைசியில் மிஞ்சுகின்றது.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் பல கோடிச் சரீரங்களில் நாம் தீமைகளை வென்று வென்று தீமைகளை வென்றிடும் உடல் பெற்ற நாம் இந்தப் பாம்பு தீண்டிவிட்டால் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்து உடலை விட்டுச் சென்றபின் பாம்பின் உடலுக்குள் சென்று, ஊர்ந்து செல்லும் அந்தப் பாம்பின் நிலையைத் தான் பெற முடியும்.

விஷத்தின் அணுக்கள் நமக்குள் சென்று அதன் மேல் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்தப்படும் பொழுது இந்த விஷத்தின் தன்மை அதிகமான பின் அதன் வலுவின் துணை கொண்டு விஷமான அந்த உடலுக்குள் அழைத்துச் சென்று மனித உருவையே மாற்றி விடுகின்றது நமது உயிர்.

அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டியுள்ளார்கள்.

ஆக, கீதையைச் சொல்வது யார்? இந்தக் கண்கள் தான்.

இப்பொழுது நாம் ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்று நினைவினைக் காட்டும் பொழுது அந்த எண்ணத்தின் தன்மை கொண்டு நமது கண் இங்கே வழி நடத்திச் செல்கின்றது.

“என்னை இப்படிச் செய்தானே பாவி...,” என்று ஒரு மனிதனை எண்ணி எண்ணி அந்த உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டுச் சென்றபின் இதே உணர்வின் துணை கொண்டு அந்த மனித உடலுக்குள் அழைத்துச் சென்று அங்கே விஷத்தை ஊட்டுகின்றது.

மீண்டும் இந்த விஷத்தை ஊட்டி மனிதனல்லாத உருவினைத் தான் அங்கே உருவாக்குகின்றது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் நல்லது.

நமது எல்லை அந்த மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலம் என்று உறுதிப்படுத்தி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடையும் நிலையாக நாம் வழி அமைத்துக் கொள்ள வேண்டும்.


எந்த நேரம் உடலை விட்டுப் பிரிந்தாலும் எந்தச் சப்தரிஷி மண்டலத்தைக் கூர்மையாக எண்ணினோமோ நாம் அங்கே சென்று பிறவியில்லா நிலை அடைய முடியும்.