ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2016

நம் நல்ல உணர்வுகளை மறைக்கும் தீமையான உணர்வுகளை “சிறு திரையை” நீக்கிப் பழக வேண்டும்

நமது வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற நிலைகளில் நாம் நல்ல குணம் கொண்டு பார்த்துப் பிறருக்கு உதவி செய்தாலும் வேதனைப்படுபவரை நுகர்ந்தறிந்து அவருக்கு உதவி செய்கிறோம்.

உதவி செய்தாலும் நம் நல்ல குணத்தை விஷம் என்ற அந்த உணர்வுகள் நமக்குத் திரை மறைவாக்கி விடுகின்றது. பின் அந்த வேதனை என்ற உணர்வுதான் நமக்குள் வருகின்றது.

உதாரணமாக, இன்று ஒரு நல்ல பலகாரம் இருக்கிறதென்றால் மேலே மிளகாயைத் தூவிவிட்டால் அந்த வாசனை தான் வரும். விஷத்தைத் தூவிவிட்டால் அந்த நிலை தான் வரும்.

ஆனால், அதற்கு மேலே நல்ல நறுமணத்தை இட்டால் அந்த நறுமணத்தின் தன்மை வரும். உணர்வைச் சுவைத்தால் தான் வித்தியாசமாக இருக்கும்.

ஆகவே, மேலெழும் மணங்கள் நம் உடலின் அணுக்களில் படும்பொழுது மேலெழுந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது. சிறு திரையாக நல்ல உணர்வு இயங்காதபடி தடைப்படுத்துகின்றது.

சித்திரை, இந்தப் புது வருடம் சிறு திரையை நீக்கி பூரண பௌர்ணமி என்பது போல நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களையும் தூய்மையாக்கி எல்லாவற்றையும் அறிந்திடும் ஒளியாக நாம் மாற்றுதல் வேண்டும்.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்குத்தான் சித்ரா பௌர்ணமி. பூரண நிலவாக வெளிச்சத்தில் பொருள் அறிவது போல நிலாவின் தன்மையில் குளிர்ந்த நிலைகள் பெறுவது போன்று நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பேரின்பமும் பெருவாழ்வும் பெறும் நிலையும் அழியா ஒளிச் சரீரம் என்ற உருவாக்கும் நாள் சித்ரா பௌர்னமி.

இந்த நாளில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று நமக்குள் சலிப்போ, சஞ்சலமோ, வேதனையோ, வெறுப்போ குரோதமோ இதைப் போன்ற உணர்வுகள் தூண்டச் செய்வதை நல்ல உணர்வுகளை மறைத்திடும் உணர்வை (சிறு திரையை) நீக்குதல் வேண்டும்.

ஆகவே, அருள் ஒளிச் சுடராகப் பெருக்கி என்றும் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலையைப் பெறும் அந்தத் தகுதியைப் பெறுவோம். இனி பிறவியில்லா நிலை என்ற நிலை அடைவோம்.