ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 3, 2016

போற்றுவதற்குரிய நிலைகளைச் சொல்லி தூற்றிவிட்டுப் போகிறோமே தவிர அகத்திற்குள் ஆற்றலைப் பெருக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வரவில்லை

நம் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பின் தன்மை வந்தால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் வெறுக்கும் அணுக்களாக விளைந்து ஒன்றுகொன்று போர் செய்யும் நிலைகளாக உடலுக்குள் வரும்.

அப்பொழுது மேல் குத்தல், கை கால் குடைச்சல் என்ற கொடிய நோய்களை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

கோபத்தின் தன்மை வந்தால் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது. புலி எவ்வாறு மற்றதை இரக்கமற்றுக் கொன்று சாப்பிடுகின்றதோ இதைப் போலத்தான் நாம் கோபிக்கும் உணர்வுகள் காளியாகின்றது. அதனால் தான் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

ஆகவே, நாம் நுகரும் உணர்வுகள் நம் உயிரில் பட்டபின் கோபம் எல்லை கடந்து வேகத்தை ஊட்டும் உணர்வின் அணுக்களாக விளைந்தபின் அதன் உணர்வின் தன்மை ஒவ்வொன்றும் தன் அருகிலே இருப்பதைப் புலி எப்படிக் கொல்கின்றதோ இதைப் போல அந்த அணுக்களின் வளர்ச்சி நல்ல அணுக்களைக் கொன்று சாப்பிட ஆரம்பிக்கும்.

அதனால் மனிதன் உணர்வின் சிந்தனைக்கும் உடலின் அங்கங்கள் இயக்குவதற்கும் உருவாகும் அந்த அணுக்கள் மடிந்துவிட்டால் நமக்குள் உதவி செய்யும் அந்த அணுக்கள் மடிந்து விட்டால் நம் அங்கங்கள் குறுகிவிடும்.

ஆக, இரத்தக் கொதிப்பாக வருகின்றது. வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியாது போகின்றது.

நல்ல அணுக்களைக் கொன்று விட்டால் அடுத்து மனிதனல்லாத நிலைகள் கொண்டு புலி எப்படிக் கொன்று புசிக்கின்றதோ இதைப் போல உணர்வின் தன்மை கொண்டு அதன் ஈர்ப்புக்குச் சென்று நம்மைப் புலியாகப் பிறக்கச் செய்யும்.

மற்றொன்றைக் கொன்று புசிக்கும் உடலாகத்தான் வரும்.

இங்கே உடலுக்குள் ஆகின்றது. இந்த உணர்வை வளர்த்துவிட்டால் உயிர் வெளியே சென்றபின் இந்த உணர்வின் தன்மை கொண்டு அசுர உணர்வுகள் செயலாக்கும் மிருகமாக நம் உயிர் மாற்றுகின்றது.

இதைத் தெளிவாக்குவதற்குத்தான் காளிக்கு முன் புலியும் மாரியம்மனுக்கு முன் இதைப் போன்று தீமைகள் இருக்கும் இடத்தில் அக்னி குண்டங்களை அமைத்து இறங்கச் செய்வார்கள்.

எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றோமோ அதைச் சுட்டுப் பொசுக்கி அருள் உணர்வை நுகர்ந்தால் அந்த உணர்வுகள் நமக்குள் தீமைகள் வளராது தடுக்கும் என்பதைத் தெளிவாக்கப்பட்டுள்ளது நமது சாஸ்திரங்கள்.

அதை நாம் யாரும் பின்பற்றவில்லை. இன்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் பருவமில்லை.

சாமி பிரமாதமாகப் பேசுகிறார். போற்றுவதற்குரிய நிலைகளில் தூற்றிவிட்டுப் போகின்றோமே தவிர அகத்திற்குள் ஆற்றலைப் பெருக்கி நமக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை இன்றும் வரவில்லை.

நீங்கள் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உருவாக்குகின்றது நம் உயிர். மறக்க வேண்டாம். நாம் உருவால் எண்ணிய உணர்வைத்தான் உருவாக்கப்பட்டு இன்று மனிதனாக உருவாகியுள்ளது

ஆகவே, அருள் ஞானிகள் காட்டிய நிலைகளைப் பின்பற்றுவோம். இந்த நம்பிக்கை உங்களுக்குள் ஊட்ட வேண்டும் என்பதற்குத்தான் நமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து எப்பொழுது தீமைகள் வருகின்றதோ நினைவாற்றல் பெருக்கித் தீமைகள் வராது நீங்கள் தடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனின் தன்மை ஊட்டுவதற்குத் தான் இங்கே ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள். ஆகவே, நாம் எதை வினையாக்க வேண்டும்?

அருள் ஒளியை வினையாக்க வேண்டும் என்றும் விநாயகரை வணங்காமல் கோவிலுக்குள் சென்றால் பலன் ஏதுமில்லை.

ஏனென்றால், இந்த உடலே ஒரு கோவில். உடலுக்குள் இருக்கும் சக்திகள் நம்மை மனிதனை உருவாக்கியது, சிவமாக்கியது. சிவத்திற்குள் இந்த வினையின் தன்மைகளைச் சேர்க்கும் போது மனித உருவை உருவாக்கியது என்று இவ்வாறு தெளிவாக்கப்பட்டது.