ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 22, 2022

ஆறாவது அறிவை வைத்து நாம் உருவாக்க வேண்டியது எதை…?

மனிதனின் ஆறாவது அறிவைப் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்று சொல்வார்கள். காரணம் நாம் உருவாக்கும் சக்தி பெற்றவர்கள். ஆறாவது அறிவு கொண்டு இன்று…
1.எத்தனையோ உயிரினங்களை உருவாக்கியுள்ளோம்
2.மிருக இனங்களை மாற்றியுள்ளோம்…
3.எத்தனையோ தாவர இனங்களை மாற்றி உள்ளோம்…
4.எத்தனையோ இயந்திரங்களையும் உருவாக்கி உள்ளோம்.

ஆனாலும் இந்த மனித வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் உதாரணமாகக் கோப உணர்வுகளை அதிகமாக நுகர நேர்ந்தால்… அந்தக் கார உணர்ச்சிகள் நம் உடலிலே இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.

அந்தச் சந்தர்ப்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்தத் தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

அதைத்தான் ஓ…ம் என்ற பிரணவத்தை முருகன் சிவனுக்கே ஓதினான்…! என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அதாவது…
1.கோபப்படுவோர் உணர்வுகளை நுகர்ந்தால் அது ஓங்கார உணர்வாக இயக்கினாலும்
2.அந்த ஓங்காரத்தை அடக்கிய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
3.நம் புருவ மத்தியில் எண்ணினால் கோப உணர்வுகளை இது தடைப்படுத்திவிடுகிறது.

அடுத்து அந்த உணர்வை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
1.எங்கே நம் கண்ணின் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்கியதோ
2.மீண்டும் அதைப் பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அதே இடத்தில் பதிவாகின்றது
3.அந்தக் கோபம் என்ற ஓங்காரத்தைத் தடைப்படுத்தி விடுகின்றது.

நம்முடைய வாழ்க்கையில் இதற்கு முன்னாடி எத்தனையோ தீமைகள் உடலிலே சேர்ந்திருந்தாலும் எதிர்காலத்தில் வரக்கூடிய வேதனை வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் பாய்ச்சாதபடி… தனக்குள் உருவாகாதபடி… அதை எல்லாம் தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவாற்றலைப் பெருக்குவதற்கு தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

தியானம் என்றால் என்ன…?

திட்டியவனை நாம் மீண்டும் மீண்டும் எண்ணுகின்றோம்… அதுவும் தியானம் தான். என்னைத் திட்டினால் அவனைச் சும்மா விடுவதா… அவனை விடக்கூடாது…? என்று எண்ணினால் அந்தக் கோப உணர்வுகளை நமக்குள் அது எப்படி மீண்டும் மீண்டும் தூண்டுகின்றதோ அதுவும் தியானம் தான். இவை எல்லாம் நமக்குத் தீமை செய்யக்கூடியது.

ஆனால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணத்தால் எண்ணி
2.நமக்குள் மீண்டும் மீண்டும் எடுத்து வளர்த்துக் கொண்டால் இந்தத் தியானம் நமக்குள் பல நன்மைகளைச் செய்கின்றது.

குருநாதர் அனைத்தையும் அறிந்தார்… அவருக்குள் விளைய வைத்தார்… எனக்குள் பதிவு செய்தார். குரு காட்டிய அருள் வழியில் நான் எனக்குள் விளைய வைத்தேன் உங்களுக்குள் அந்த நல்ல ஞான வித்தைப் பதிவாக்குகின்றேன்.

இந்தப் பதிவை நினைவாக்கினால் உங்கள் ஞானத்தால் தீமைகளைப் போக்க முடியும். உங்களைக் காத்துக் கொள்ள முடியும் யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று எண்ண வேண்டாம்.

ஆகவே ஆறாவது அறிவால் உங்களுக்குள் ஒளியான உணர்வுகளை உருவாக்க முடியும்.

மனிதன் என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட இந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் தெளிந்து வாழலாம்.