உதாரணமாக கோப குணத்தை நாம் நுகர்ந்து விட்டால் உடலுக்குள் என்ன நடக்கிறது...?
ஒரு மிளகாயை வாயிலே போட்ட பின் நாம் எப்படி அலறுகின்றோமோ இதைப் போல் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் அதே உணர்ச்சிகளைத் தூண்டும்.
அதைத் தாங்காத நிலைகள் கொண்டு அந்தக் கார உணர்வுகள் அதிகமானால் இந்த அணுக்கள் அந்தக் காரத்தையே ஏற்று காரமான மலத்தை அது வெளிப்படுத்தும் தன்மை வருகிறது.
இப்படி நமது வாழ்க்கையில் சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து வந்தாலும்
1.கோபத்தின் உணர்வு கொண்டு கோப (கார) உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது
2.நரம்பு மண்டலங்களில் அதனுடைய இயக்கம் நாளுக்கு நாள் சேர்ந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது
3.அப்பொழுது நம்முடைய உடல் அங்கங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.
இந்த உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகி விட்டால் அந்த உணர்ச்சிகள் நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றி... இந்த உணர்வின் இயக்கம் நரம்பு மண்டலங்களில் மாற்றப்படும் பொழுது “கை கால் அங்கங்களைச் சுருக்கி விடுகின்றது...”
ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் அந்தக் கோப குணம் உடலை எப்படிப் பாதிக்கின்றது என்பதைக் காட்டுவதற்காகக் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காட்டியுள்ளனர் ஞானிகள்.
புலி எப்படி இரக்கமற்று மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுகின்றதோ அதே போல
1.பிறிதொருவர் மீது வெறுப்புகள் வரப்படும் பொழுது
2.அந்தக் கார உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது
3.சிந்தனை அற்றவனாக ஆக்கி வெறித் தன்மை கொண்டு இயக்கப்பட்டுவிடுகிறது.
நண்பனாகப் பழகினாலும் கூட தான் எண்ணிய வழி அவன் சரியான நிலைகளில் வரவில்லை என்றால் ஆத்திரங்கள் அங்கேயும் வருகின்றது.
ஆத்திரம் அதிகரிக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது. யாரைப் பார்த்து இந்த உணர்வைச் சேர்க்கின்றோமோ “தாக்க வேண்டும்...” என்ற உணர்வுகளை உண்டாக்கிடுகின்றது.
ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன நடக்கின்றது…?
தாக்குபவனின் உணர்வுகளும் தாக்கப்பட்டவனின் உணர்வுகளும் அங்கே அவர்களுக்கு முன்னாடி இருக்கின்றது. அந்தக் கார உணர்ச்சிகள் உயிரிலே மோதினால் அது நம் உடலில் காளியாக மாறுகின்றது.
உயிரிலே மோதப்படும் போது அதே வேக உணர்வுகள் மோதியவுடனே உடலை இயக்கத் தொடங்கி விடுகிறது. இதைத்தான் “சிவன் - ருத்ர தாண்டவம் ஆடுகிறான்...” என்று காட்டினார்கள்.
1.ஆக… நாம் ஆடுகின்றோமா...!
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மை ஆட்டுவிக்கின்றதா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
தாக்கப்படுபவன் நண்பனாக இருக்கும் பட்சத்தில்... அவன் மீது அன்பைச் செலுத்தி அவன் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அவன் படும் வேதனை நம்மை இயக்குகின்றது. ஆஅனால் வேதனை என்பதே விஷம்.
நண்பனைத் துன்புறுத்தும் உணர்வு கொண்டு எதிராளி தாக்குகின்றான். நண்பனின் வேதனையை நுகர்ந்து விஷத்தின் தன்மை உடலுக்குள் சென்று விட்டால் நமக்குள் என்ன நடக்கிறது...?
காற்று மண்டலத்தில் சில செடி கொடிகள் விஷத்தின் தன்மை கொண்டதாக இருக்கும். அந்தச் செடி கொடிகள் உமிழ்த்தும் மணங்கள் காற்றில் கலந்து வருவதை நாம் சுவாசித்தால் நமக்கு மயக்கம் வருகின்றது.
அதைப் போல் நண்பனின் வேதனையை நாம் சுவாசித்தவுடன் உடல் முழுவதும் பரவி சிந்தனை இழக்கச் செய்து விடுகின்றது.
சிந்தனை இழந்த பின் யார் மீது பற்று இருக்கின்றதோ அவனைத் தாக்குவோர் மீது எதிர் நிலையாகி “அவரைத் தாக்க வேண்டும்...” என்ற வேக உணர்வு வருகின்றது.
வேதனை வரும் பொழுது “முதலில்” சிந்தனையை இழக்கச் செய்கின்றது... சோர்வடையச் செய்கின்றது. ஆனால் கார (கோப) உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது விஷமும் கார உணர்வுகளும் வேக நிலையில் கலந்து ஏதிராளியைத் தாக்கும் உணர்ச்சிகளே நமக்குள் கூடுகின்றது.
நாம் தவறே செய்யவில்லை என்றாலும் நண்பருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது இதைப் போன்ற நிகழ்ச்சிகள் தான் வாழ்க்கையில் நடக்கின்றது.
நமக்கு வேண்டியவரை ஒருவர் தாக்கி விட்டால் நமக்கு எப்படி இருக்கும்…? வேதனைப்படும்போது அலறுகின்றோம். ஏன் எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை..! ஆனால் தாக்கிவிட்டான் என்று அடுத்தவன் மீது கோபப்படுகின்றோம்.
இப்படி... நமது வாழ்க்கையில்
1.நாம் தவறு செய்வதும்...
2.நாம் தவறு செய்யாமல் இருப்பதும்...
3.நம்மைத் தவறு செய்ய வைப்பதும்... “பிறருடைய நிலைகளை வைத்துத் தான்...”
இந்த உணர்வுகள் அணுக்களாக மாறி விட்டால் உணர்ச்சிகளைத் தூண்டிக் கண் வழி கவர்ந்து உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் உமிழ் நீருடன் கலந்து இரத்தத்திலே கலந்து விடுகின்றது... தீமைகளாக விளைகின்றது.
இதை எல்லாம் மாற்ற வேண்டுமா இல்லையா…!