குருநாதர் காட்டிய வழியிலே எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்கு இருபது வருடம் அனுபவப்பட்டேன். ஆனால் அதையெல்லாம் நீங்கள் இப்போது சமமாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள்.
1.உங்களிடம் பதிவு செய்கின்றேன்…
2.நீங்கள் இந்த நினைவைக் கூட்டினீர்கள் என்றால் நான் பெற்ற எல்லாச் சக்திகளையும் பெற முடியும்.
ஆனால் நான் காட்டிற்குள் சென்று தெரிந்து கொண்ட மாதிரி நீங்களும் காட்டிற்குள் போய்த் தெரிந்து கொள்ள முடியுமா…? உங்கள் பிழைப்பு என்னாகின்றது…?
மனைவி பிள்ளைகள் எல்லாம் விட்டுவிட்டு காட்டிற்குள் சென்ற பின் அவர்கள் எத்தனை வேதனைப்பட்டு இருப்பார்கள்…! விட்டுச் சென்ற பின் அவர்கள் வேதனை என்ன செய்யும்…?
குருநாதர் இதை எல்லாம் சொல்லுகின்றார். வீட்டை விட்டு வந்து விட்டாய்… உன் பிள்ளைகள் என்ன செய்கிறது என்று பார்…! இமயமலையில் இருக்கும் பொழுது குருநாதர் இதைக் காட்டுகின்றார்.
என் கடைசிப் பையன் தண்டபாணி… அவனுக்குப் பேச்சு அப்போது முழுமையாக வராது நானா… நானா… என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
இவனுடைய அம்மா (என் மனைவி) திட்டிக் கொண்டிருக்கின்றது. நான் தான் அவனுக்கு பிஸ்கட்டோ மற்றதுளை வாங்கிக் கொடுப்பேன். என்னுடைய எண்ணம் தான் அவனுக்கு இருக்கும். அவன் அம்மா மீது எண்ணம் இருக்காது.
“ஆளைக் காணோம்…” என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
நானோ குருநாதர் கட்டளையிட்ட நிலையில் இமயமலையில் இருக்கின்றேன். இங்கே தெருவிலே நானா… நானா… என்று சொல்லிக்கொண்டு அது உஷ்ணமாகி இரத்த இரத்தமாக அவனுக்கு வெளியேறிக் கொண்டிருக்கின்றது.
இந்த உணர்வுகள் அங்கே காட்சியாகத் தெரிய வருகின்றது. வீட்டில் மனைவி “தொலைந்து போன உங்கப்பன் இப்படிச் செய்து விட்டான்…” என்று சொல்கிறது.
இப்படிப் பண்ணிவிட்டாரே…! என்று என் மாமியார் அந்த மாதிரிப் பேசுகின்றது. இந்தம்மா “என்னை இந்த இடத்தில் கொண்டு போய்க் கட்டி வைத்துக் கஷ்டப்படுத்தி விட்டாய்… என்னை விட்டுச் சென்று விட்டார்…!” என்று இந்த மாதிரிச் சொல்கின்றது.
ஒன்றுக்கொன்று இந்த வேகங்கள் எப்படி மாறுகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர். நடந்த நிகழ்ச்சி இது.
பையனுக்கோ இரத்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இமயமலையில் இருந்து இதை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அங்கே பனி மலையில் இருப்பதால் இதைப் பார்த்தவுடன் குருநாதர் சொல்லிக் கொடுத்ததை மறந்து விட்டேன்.
காரணம் அந்தப் பனி என்னைத் தாக்காது இருப்பதற்காக… என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு யுத்தியைச் சொல்லிக் கொடுத்திருந்தார். மனைவி பையன் மீது எண்ணம் வந்த உடனே இதயம் கிர்…ர்ர்ர்ரென்று இரைய ஆரம்பித்துவிட்டது.
ஏனென்றால் என் பையன் சிரமப்படும் உணர்ச்சிகளையும்… ஏங்கிக் கொண்டிருக்கும் உணர்வையும் எண்ணிய பின் எனக்கு இந்த நிலை வருகின்றது.
அப்பொழுதுதான் குருநாதர் பாடலைப் பாடுகின்றார்…
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!
உன்னுடைய எண்ணங்கள் எல்லாம் இப்பொழுது மறையப் போகின்றது நீ யாரைக் காக்கப் போகின்றாய்…?
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? என்று பாடுகின்றார்.
நீ இங்கிருந்து எதை எண்ண வேண்டும்…? என்று அந்த இடத்தில் உணர்த்துகின்றனர்
பையன் மீது ஆசையாக இருக்கின்றோம். அப்பொழுது நம்மையும் காக்க முடியவில்லை.
உன்னையே காக்க முடியாது போகும் பொழுது அவனை நீ எப்படிக் காக்கப் போகின்றாய்…? என்று குருநாதர் வினா எழுப்புகின்றார்.
1.இந்த உணர்வோடு உடலை விட்டு நீ சென்றால் அவன் உடலுக்குள் தான் செல்வாய்.
2.அந்த உடலுக்குள் சென்ற பின் அவனையும் பைத்தியக்காரனாக ஆக்குவாய்…
3.அவனைக் கொல்வாய்… அதற்குத்தான் உதவும்…! என்று அந்த இடத்தில் இப்படி உணர்த்துகின்றனர்.
குருநாதர் உணர்த்திய பின் ஈஸ்வரா…! என்று மறுபடியும் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த இரைச்சலை அடக்குகின்றேன்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் பையன் உடல் முழுதும் படர வேண்டும். அவன் உடல் நோய் நீங்க வேண்டும். என் மனைவிக்கு மன உறுதி வர வேண்டும்… நல்ல சிந்தனைகள் வர வேண்டும்… சிந்தித்துச் செயல்படும் அந்த வலிமை பெற வேண்டும்…! என்று குருநாதர் சொன்னபடி எண்ணுகின்றேன்.
இது போன்று செய்த பின் அவர்களுக்கு அங்கே வருமானமும் தெளிந்து செயல்படக்கூடிய வழிமுறைகளும் கிடைக்கிறது. காசு இல்லாதபோது காசு கிடைக்கிறது.
1.நான் சொன்ன முறைப்படி செய்தால் உன்னையும் காக்கலாம் அவர்களையும் காக்கலாம்…! என்று
2.குருநாதர் இமயமலையில் வைத்துத் தெளிவாக்கினார்.