அகஸ்தியன் உண்மையான நிலைகள் தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன். அவன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.
யார் ஒருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெறுகின்றார்களோ அவர் வாழ்க்கையில் வரக்கூடிய இருளான நிலைகளை ஒவ்வொன்றாக… அடுக்கடுக்காக… ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
அதற்குத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இதை யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது. கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ எதைப் பார்த்தாலும்… அல்லது நுகர்ந்தாலும்…
1.அடுத்த நிமிடம் அந்தத் தீமைகள் உடலுக்குள் புகாதபடி ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்திவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை முந்தி
4.இந்த உணர்வுகளை உடலுக்குள் வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.
இப்படி வலு ஏற்றியவுடன் தீமைகளைப் பிரித்து விடுகிறது.
அடுத்து நாம் எந்தத் தீமை செய்வோரைப் பார்த்தோமோ… அவர்கள் அறியாத தீமையிலிருந்து விடுபட வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும்… என்று இந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டோம் என்றால் “புதிய உணர்வின் அணுக்களாக” நமக்குள் உருவாகின்றது.
ஒவ்வொரு உடலிலும் எத்தனையோ விதமான நிலைகள் இருந்தாலும் நாம் அந்த அருள் ஒளியைக் கூட்டிப் பேரொளியாக மாற்றுதல் வேண்டும்.
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்… தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைப் பார்த்துச் சுவாசித்து… ஒன்றை ஒன்று கொன்று தின்று மற்றதுக்கு இரையாகி… வலிமையான உடலுக்குள் சென்று தான் பரிணாம வளர்ச்சிக்கு வந்தது.
ஆனால் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும் விஷத்தின் தன்மை கூடி தேய்பிறையாகும் நிலையில் இருந்து மாற வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஞானத்தின் உணர்வை
2.ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு குணத்திலும் நாம் சேர்த்துச் சேர்த்து
3.நாம் இந்த உடல்களில் அதை நன்மை செய்யும் சக்தியாக மாற்றி மாற்றி
4.எல்லாவற்றையும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.
எதன் வழி கொண்டு…?
நம் உயிரின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் பாய்ச்சி… தீமை செய்யும் உணர்வுகளை மாற்றி… தீமைகள் வராது தடுக்கக்கூடிய கவசமாக “ஒவ்வொரு குணத்திலும் அதைச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்…”
அப்பொழுது அது நம்மை காக்கக்கூடிய உணர்வாக வரும்.