ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 11, 2022

ஆயுள் மெம்பர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழி முறை

பேரருளை நமது குருநாதர் பெற்றார். அந்தப் பேரருள் பெறும் முறையை எனக்குக் (ஞானகுரு) கற்றுக் கொடுத்தார். “துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக எப்பொழுதுமே இருக்க வேண்டும்…” என்று என்னிடம் சொன்னார்.

அதைப் போன்றே உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர்த்து அதன் வழியில் நாம் கிளைகளாக இருக்கின்றோம்.

ஆனாலும்… உண்மைகளை எல்லாம் தெரியப்படுத்தி ஆயுள் மெம்பராகச் சேர்ப்பதற்கு வெகு காலம் ஆகிவிட்டது.

காரணம்
1.அதிலே பற்றும் பாசமும் வளரப்படும் பொழுது… உங்களுக்கு உபதேசிப்பதும்… ஏற்றுக் கொள்ளும்படி செய்வதும்…
2.ஏற்றுக் கொள்பவர்களுக்கு அந்தச் சக்திகளைக் கொடுப்பதும்… எல்லாமே செயல்படுத்தியது.

ஆனால் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்குப் பேருக்கு ஆயுள் மெம்பர் என்று சொல்லிக்கொண்டு போவதில் பிரயோஜனம் இல்லை.

1.ஆயுள் மெம்பராக இருப்பவர்கள் ஒவ்வொருவருமே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும்
2.குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழும் நிலையைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.

குடும்பத்திலோ அல்லது தொழில் செய்யும் இடங்களிலோ நாம் எதிர்பாராத நிலைகளில் சில சிக்கல்கள் வரும். நம்மை வேதனைப்படும்படியாக ஒருவன் செயல்படுவான். உற்றுப் பார்த்து அவன் உணர்வுகளை நுகர்ந்தறிவோம்.

“இப்படிச் செய்கின்றானே…” என்ற நிலை வந்துவிடும். வந்தபின் அதைச் சுத்தப்படுத்தாது விட்டு விட்டால் தீமையின் விளைவுகளுகே நம்மை இட்டுச் சென்றுவிடும்.

அது போன்று ஆகாதபடி ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி… நமது குருநாதர் காட்டிய முறைப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்…” என்று எண்ணி உடனடியாக நாம் தூய்மைப்படுத்தவேண்டும்.

உயிரிலே பட்ட பின் தான் அவர் செய்யும் தவறான உணர்வு அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகின்றது. நம் இரத்தங்கள் முழுவதிலும் அது கவரப்படுகின்றது.

இரத்தங்களிலே கலந்து கொண்ட பின்
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் நல்ல உணர்வை ஈர்க்க விடாதபடி தடைப்படுத்தி விடுகின்றது.
2.அந்த வெறுப்பான காரமான உணர்வுகளை நல்ல உணர்வுகள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
3.வெறுப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது கொதிப்பு என்று வருகிறது.
4.அந்தச் சந்தர்ப்பங்களிலே உடலிலே ஒரு விதமான நடுக்கம் வரும்.

ஏனென்றால் நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குச் சரியான ஆகாரம் இல்லை என்றால் பதட்டமான நிலைகள் வரும். அந்த நடுக்கம் சிறிதளவு உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்ந்து விட்டால் அடுத்து… தவறு செய்யும் உணர்வை எடுத்து அதுவும் வளர ஆரம்பித்து விடும்.
1.நல்ல அணுக்களுடைய செயல்கள் மறைந்து விடும்
2.நல்லதை நுகர விடாதபடி அதனுடைய இனப்பெருக்கமாக ஆகிவிடும்
3.அந்த அணுக்கள் அது இடக்கூடிய மலம் உறுப்புகளில் படும் பொழுது அதனுடைய வளர்ச்சி குன்றிவிடுகிறது
4.அங்கே ஒன்றுக்கொன்று போர் முறையாகி வலியும் வேதனையும் வருகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஒருவர் செய்த தவறான உணர்வை நுகர்ந்த்தால் இந்த நிலை ஆனது. அதே சமயத்தில் இந்த உணர்வுகள் நம் ஆன்மாவிலே முன்னணியில் இருக்கும்.

வீட்டிற்குள் நுழைந்த பின் குழந்தை ஏதாவது ஒரு பாத்திரத்தைக் கீழே போட்டால் போதும். அல்லது சத்தம் போட்டுப் பேசினால் போதும்…!

மனைவியைக் கூப்பிட்டுப் பிள்ளையை வளர்த்திருப்பதைப் பார்…! என்று அங்கு வெறுப்பாகப் பேசும்படி வந்துவிடும்… நம்மை அறியாமலே இப்படி இயக்குகின்றது அல்லவா…!

காரணம் நாம் பிறரின் உணர்வுகளை நுகர்ந்தது இவ்வாறு இயக்குகின்றது. அப்படி இயக்கும் அந்த உணர்வை…
1.உங்களுக்குக் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு
2.ஆயுள் மெம்பராக இருக்கும் நீங்கள் அந்த நிமிடமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இரத்தங்களில் கலக்கச் செய்து தூய்மைப்படுத்தவேண்டும்.

சமையல் செய்யும் போது குழம்பை ருசியாக மாற்றுவது போல் மாற்ற வேண்டும்.

தவறு செய்பவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்றுப் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… தெளிந்த மனம் பெற வேண்டும்… ஒன்று சேர்ந்து வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று நல்லதாக இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கப்படும் போது தீமையின் உணர்வை இங்கே தணிக்கிறது. அருள் உணர்வுகளை உயிர் கருவாக்கி… உடலில் அணுவாக மாற்றி நமக்குகந்ததாக மாற்றுகிறது.

“ஆயுள் மெம்பர்கள் இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்…”