ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 4, 2022

குருநாதர் காட்டிய வழியில் “ஒளியாக மாறும்... ஒளியாக மாற்றும்...” நுண்ணிய வழி முறை

விறகுக் கட்டை இருக்கின்றது அதை எரித்தால் ஒளியாக (வெளிச்சம்) மாறுகின்றது... நன்மை செய்கின்றது.

அதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் தீமை என்ற உணர்வுகள் நம் மீது மோதினாலும்... அருள் ஒளி என்ற உணர்வை எடுத்துக் கலந்து அதை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

எப்படி...?

தீமை என்றாலும்...
1.அதிலே தொக்கி உள்ள விஷம் தான் அதனின் இயக்கத்திற்கு வருகிறது.
2.ஆக அதற்குள் மகரிஷிகளின் உணர்வை இணைத்து இயக்கப்படும் பொழுது “ஒளி...” என்ற உணர்வாக மாறுகின்றது.

அதாவது... கட்டையை எரித்தால் அது கருகுகின்றது... ஆனால் “வெளிச்சம்...” கொடுக்கின்றது. அந்த “வெப்பத்தால்...” மற்றொன்றைச் சமைக்க முடிகின்றது

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் வரும் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் எல்லாம் கதிரியக்கப் பொறிகளால் (அதற்குள் இருக்கும்) தான் இயக்கப்படுகின்றது.

ஆனால் அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை அதற்குள் சேர்த்து
2.நல்ல முறையில் அதை இயக்கப்படும் பொழுது கருகிய உணர்வுகளை நீக்கிவிடுகிறது.
3.அப்போது நமக்குச் சமைக்கும் பக்குவமும் அந்த வெப்பமும் உணர்வைப் பக்குவப்படுத்தும் வலிமையும் கிட்டும்.

இதை நாம் செய்து பழகுதல் வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதையெல்லாம் உங்களிடம் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

உங்களுக்குக் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்தை உற்றுப் பார்த்துத் தியானிக்கும் போது அதிலிருந்து வெளிச்சம் வரும்... உங்களுக்கு நல் வழி காட்டும்... நல்ல சிந்தனைகள் வரும்.

அதிலே ஆசைகளை மட்டும் அதிலே கூட்டி விடாதீர்கள்.

ஆசை என்றால் அது எதுவாக இருக்க வேண்டும்...?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த ஒரு ஆசையை மட்டும் கூட்டிக் கொள்ளுங்கள். உடல் ஆசையைக் கூட்டி இருக்க வேண்டாம். எல்லாம் செய்து... எனக்கு இப்படி வருகிறது...! என்று வேதனையை மட்டும் எடுத்து விடாதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும்
1.என் செயல் நல்லதாக இருக்க வேண்டும்... மற்றவர்களைப் புனிதப்படுத்தும் சக்தியாக அது வரவேண்டும்
2.குழந்தைகள் நல்ல பண்புள்ளவர்களாக வாழ வேண்டும்... உயர்ந்த நிலை பெற வேண்டும்
3.கணவனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்... மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
4.நாங்கள் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று
5.இது போன்று செய்து வாருங்கள்... உங்களை அது பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும்.

உயிருடன் ஒன்றுகின்றோம் உணர்வில் கலந்த இருளை அகற்றுகின்றோம்... ஒளியாக நாம் வளர்கின்றோம். என்றுமே நாம் அழியாது ஒன்று சேர்த்து மகிழ்ந்து வாழும் நிலை பெறுகின்றோம்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள். நான் (ஞானகுரு) உங்களுக்கு அருளைப் பாய்ச்சுகின்றேன்... நீங்கள் எனக்கு அருளைப் பாய்ச்சுகின்றீர்கள்.

இந்த உணர்வு ஒன்றாகி ஒளியின் உணர்வுகளாக வலுப் பெறும் போது இருளை அகற்றும் வலிமை பெறுகின்றது. என்றும் அழியாத அந்த ஒளியின் சக்தியைப் பெறுகின்றோம்.

அந்த நிலையை நாம் அனைவரும் அடைதல் வேண்டும்.