ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2022

நல்லதைச் செய்தாலும் “அதைத் தடைப்படுத்துகின்றார்களே...” என்று எண்ணினால் இரு மடங்கு வேதனையாகிவிடும்

தியானம் செய்து நல்லதையே வளர்த்துக் கொண்டு வரும் பொழுது ஒருவன் கடுமையான தவறு செய்தால் எப்படி நினைக்கின்றோம்...?

1.நான் இவ்வளவு நல்லது செய்து கொண்டிருக்கின்றேன்...
2.இப்படித் தவறு செய்கின்றானே...! என்று “இரண்டு மடங்கு” வேதனைப்படும் நிலைகள் வந்து விடுகின்றது.

அதாவது... தியானம் செய்து நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வந்தாலும்... வேதனைகளை வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக இணைந்து விடுகின்றார்கள்.

ஆனால் வாழ்க்கையில் வரும் வேதனைகளை நீக்கும் நிலைகளுக்குத் தான் இங்கே உபதேசம் கொடுக்கின்றோம்.
1.நல்லதைச் செய்தாலும்... தர்மத்தைச் செய்தாலும்
2.எத்தனையோ பல நன்மைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று செயல்பட்டாலும்
3.வாழ்க்கையின் நிமித்தம் இடையில் வரக்கூடிய தவறுகளையும் தீமைகளையும் வேதனைகளையும் சுத்தப்படுத்தும் நிலைக்கு வர வேண்டும்.

பரிவு கொண்டு பண்பு கொண்டு பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகளை எடுத்து நம்மையே படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையாக வந்து விடுகிறது.

அது போன்று ஆகாதபடி தடுப்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். அந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

திட்டியவனை மட்டும் இப்படித் திட்டினான்... திட்டினான்... என்று நினைவுக்குக் கொண்டு வருகின்றோம். அப்பொழுது அது கோப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது.

அந்த நேரத்தில்
1.நம் குழந்தை ஏதாவது அழுதால் கூட “போடா நாயே...” என்று திட்டும்படி செய்யும்.
2.யாராவது நல்லது செய்தால் அட போய்யா...! என்று கோபமாகப் பேசும்படி வரும்... ஆக நல்லது செய்தாலும் கூட வெறுப்போம்.

என்ன இவர் இப்படிச் சீறிப் பாய்கிறார்...? என்று அவர்கள் நினைப்பார்கள்.

வேலை செய்யும் இடங்களிலே “மேலதிகாரி” தன்னிடம் வேலை செய்பவர்களை இது போன்று கடுமையாகத் திட்டினால் அது பய உணர்ச்சிகளைத் தூண்டி அவர்கள் சிந்திக்கும் வலுவை இழக்கச் செய்யும். கடைசியில் தவறு செய்யும் நிலையில் கொண்டு போய் விட்டுவிடும்.
1.நீங்கள் அதிகாரியாக இருந்து உங்களிடம் வேலை செய்பவர்களை மிரட்டிப் பாருங்கள்.
2.அடுத்து... அவர் செய்யும் வேலைகளில் தவறுகளை அதிகமாகச் செயல்படுத்துவார்கள்.

ஒரு சிலர் அவன் அப்படிச் செய்தான்... இப்படிச் செய்தான்... என்று ஆத்திரத்துடன் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இரத்தக் கொதிப்பு நிச்சயம் இருக்கும்.

இது போன்ற நிலைகள் எல்லாம் நாம் மாற்ற வேண்டும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவசியம் எடுத்து ஆக வேண்டும்.

காரணம் கோபப்பட்டுக் கொண்டிருந்தால் நம் காரியங்கள் தடைப்படுகின்றது யாரைப் பார்த்து நாம் கோபித்தோமோ அவனுக்கும் இதே உணர்வுகள் ரிமோட் செய்து அவனையும் இயக்கும்.

ஏனென்றால் காற்றிலே இருக்கின்றது... இந்த உணர்வின் வேகங்கள் அவனை இயக்கி...
1.கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் அதைத் தப்பாக்கி விடுகின்றது...
2.இயந்திரத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் என்றால் அதைத் தவறாக இயக்கச் செய்யும்...
3.வாகனத்தில் சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை இழந்து விபத்து ஆகிவிடும்.

இது எல்லாம் எதனால் வருகிறது...? சந்தர்ப்பம்...!

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இருந்து நாம் எப்படி மீள்வது...?

சந்தர்ப்பங்களில் இது போன்ற உணர்வுகள் மோதல் ஆனாலும்...
1.அடுத்த கணம் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் எண்ணி...
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தீமை புகாது தடைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் யாரால் நமக்குக் கோப உணர்ச்சிகள் தோன்றியதோ அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால் கோப உணர்ச்சிகள் வருவதைத் தடைப்படுத்தும்.

நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.