ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 19, 2022

நாம் இந்த உடலில் வாழும் காலத்தைக் காட்டிலும் ஆவி உலகில் தான் அதிக காலம் வாழ நேருகிறது

இந்த உலகில் தோன்றிய மனிதர்கள் தன் எண்ணத்திலும் சுவாசத்திலும் பல துவேஷங்களையும் ஆசைகளையும் வளர்த்து
1.நாம் இருக்கும் காலம் வரை எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்…
2.இறந்த பின் நமக்கு என்ன தெரிகிறது…? என்ற மனப்பான்மையிலே தான் ஊறி வாழ்கிறார்கள்.

நாம் இறந்த பிறகு தான் நம் ஆத்ம நிலை நாம் இந்தப் பூமியில் வாழ்ந்த நாட்களைக் காட்டிலும் “அதிகக் காலங்கள்” ஆவி உலகில் சஞ்சரிக்கின்றது.

பூமியில் வாழ்ந்த காலங்களை வைத்தே அவ்வெண்ணத்தில் ஒரு சிறு அணுவும் தான் விட்ட சுவாச நிலை மாறிடாமலே சுற்றி வருகின்றது.

தன் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த உடல் கிடைக்கும் நாள் வரை
1.எந்த ஆசையில் இந்த உடலை விட்டு ஆவி பிரிந்ததோ அந்த ஆசை நிலை கொண்டே
2.பல நூறு வருடங்களும் தன் எண்ணத்திற்கு ஏற்ற பிறப்பிடம் கிடைக்கும் நாள் வரை இருந்து தான் பிறக்கிறது.

நாம் நம் தாய் தந்தையரை முதலில் வணங்குவதும் இந்நிலை வைத்துத்தான். முதல் ஜென்மத்தில் விட்ட குறையை வைத்து ஆவி உலகில் பல காலம் சஞ்சரித்து
1.நம் எண்ணத்தைச் செயல்படும் இடமாக வந்து சேருமிடம் தான்
2.நம் முதல் தெய்வமாக வணங்குவதின் உண்மை நிலையும் அதுவே.

யாரும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லோருமே அந்த ஆண்டவனின் சக்தியில் அச்சூரியனின் சக்தியில் வந்து உதித்த தனித் தனி பிம்பங்கள் தான்.

1.நாம் பல பிறவிகள் எடுத்து
2.ஒவ்வொரு பிறவியிலும் பல வகைச் சொந்தங்களை அடைந்து
3.”சொந்த பந்தங்களுடன் வாழ்கிறோம்…” என்பதல்ல சொந்தமும் பந்தமும்…!

எல்லோருக்குமே ஒரே சொந்தம்… “அவ்வாண்டவனின் சக்தி தான்…!”

சொந்தம் பந்தம் எல்லாம் கூடும் நாள் ஒரே நாள்… அவ் ஈஸ்வர சக்தியில் இருந்து இம்மனித வாழ்க்கையில் வாழ்ந்துவிட்டு.. நிறைவுடன் வாழ்ந்து விட்டு.. அந்தச் சூட்சம உலகிற்குச் சென்றிடல் வேண்டும்.

அங்கே சென்று அந்நிலையில் சகல நிலையையும் பெறும் பாக்கியம் பெற்று… அந்த சப்தரிஷிகளின் சக்தியுடன் சக்தியாகக் கலந்து
1.இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் ஞானிகள் இந்நிலை உள்ளவர்களுடன் நாமும் கலந்து
2.அவர்களுடன் வாழும் நாட்கள் தான் நாம் சொந்த பந்தங்களுடன் வாழும் வாழ் நாட்கள்.