ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2022

துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சாதாரணமாகவே நாம் பெற முடியும்

காலையிலிருந்து இரவு வரையிலும் நல்லவர்களையும் பார்க்கின்றோம் அதே சமயத்தில் கெட்டவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

நல்லது கெட்டது என்று இந்த உணர்வுகள் அனைத்தும் நம் இரத்தங்களிலே கலந்து கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் இரத்தத்தில் உள்ள சில அணுக்கள் கெட்டதை ஏற்க முடியாமல் மறுக்கின்றது.
1.அந்த அணுக்கள் மறுக்கும் பொழுது நம் உடலில் சோர்வு வருகின்றது.
2.சோர்வு அதிகமாகும் பொழுது வேதனைப்படுகின்றோம்.
3.இந்த வேதனையின் உணர்வுகள் அடுத்து விஷமான அணுக்களாக உடலுக்குள் மாறுகின்றது.

சலிப்புப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ நாம் பார்த்து அவர்களுடைய உணர்வுகளை நுகர்ந்தால் நம் இரத்தங்களில் அத்தகைய அணுக்கள் நிச்சயம் வளரத்தான் செய்யும். அது வெளியே செல்வதில்லை.

நாளுக்கு நாள் இதிலே எது பெருகுகின்றதோ உடலில் அணுக்களாக மாற ஆரம்பித்து விடும்... நாளடைவில் நோயாக மாறிவிடும். இது எல்லாம் நம்மை அறியாமலே உடலுக்குள் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

இதையெல்லாம் நாம் தூய்மைப்படுத்த வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்... எங்கள் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் என்று ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலுக்குள் பெருகப் பெருக தீமை செய்யும் அணுக்களின் வலுவை அது குறைத்துவிடும்.

உதாரணமாக நாம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது சந்தோசமான செய்தியை யாராவது நம்மிடம் வந்து சொன்னால் ஏற்க முடிகின்றதா...? வேதனை அதை ஏற்க விடுகின்றதா...! இல்லை.

அதே போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் அதிகமாக பெருக்கிக் கொண்ட பின்
1.தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி
2.தீமையான அணுக்கள் விளையாதபடி அதைத் தள்ளி விட்டு விடுகின்றது
3.தீமைகளை நுகர்வதற்கும் வழியில்லை... தீமை உள்ளே புகுவதற்கும் வழியில்லை.

அதற்கடுத்து நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்... தெளிவான மனிதர்களாக அவர்கள் வரவேண்டும்... குடும்பத்தில் அனைவரும் பற்றுடன் பரிவுடன் அருள் ஞான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இதைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

இத்தகைய அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க...
1.சிந்தித்துச் செயல்படும் உணர்வுகளாக மற்றவர்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும்
2.நமக்குள் சிந்தித்துச் செயல்படும் தன்மையாக மாற்றிக் கொள்கிறோம்... தீமைகள் சிறுத்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் பிறருடைய தீமைகள் நம் மீது மோதினாலும் அதை மாற்றித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
1.அந்தந்தக் குணங்களில் எல்லாம்
2.அதாவது வேதனை வெறுப்பு சலிப்பு கோபம் ஆத்திரம் சங்கடம் போன்ற குணங்களில் எல்லாம்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கலந்து கொண்டே வருகின்றது.

இப்படி நாம் சாதாரண வாழ்க்கையின் நிலைகள் கொண்டே சக்தி வாய்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்க முடியும்.

அதற்குண்டான பக்குவ முறைகளைத் தான் உணர்த்திக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).