நம்முடைய பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் என்ன நினைக்கின்றோம்…? இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்… எதிர்காலத்தில் என்ன ஆகப் போகின்றானோ…! என்று வேதனைப்படுவோம்.
வேதனையாக எண்ண… எண்ண… கை கால் குடைச்சல் ஆகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து பையனை உதைக்கும் நிலைக்கு வருகின்றது. கடைசியில் நாசமாகப் போடா…! என்று சொல்கின்றோம்.
பையனால் இப்படி வேதனை ஆகிவிட்டது என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் இறந்தால் எங்கே போகிறோம்…?
1.பையன் உடலுக்குள் தான் செல்ல வேண்டி இருக்கும்.
2.பையன் உடலுக்குள் சென்ற பின் வேதனையை அங்கே கூட்டி அவனைக் கெடுத்து அவனையும் வாழ விடாது செய்யும்.
சம்பாதித்த சொத்தைக் காக்க ஞானம் வேண்டுமா இல்லையா…! ஞானம் இல்லை என்றால் சொத்தைக் காக்க முடியுமா…?
ஆதே போன்று வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் வெளியிலே போய்விட்டு வந்தபின் வெறுப்பாக இருப்பார்கள்.
அப்போது வீட்டிர்குள் வந்த பின் பெண்கள் எதாவது கேட்டால் பதில் வெறுப்பாக வரும்.
எப்பொழுது பார்த்தாலும் என் வீட்டுக்காரர் எரிந்து எரிந்து விழுகின்றார். கொஞ்சம் சாந்தமாகத் தான் சொன்னால் என்ன…! என்று கேட்பார்கள்.
நானா கோபமாகப் பேசுகின்றேன்…! நீ தான் என்னைக் கோபமாகப் பேசத் தூண்டுகிறாய்…! என்று மீண்டும் அங்கே சண்டை உருவாகும்.
சண்டை போட்ட பின் என்ன செய்வார்கள்…? சரி… கணவர் கோபமாக இருக்கின்றார்… “கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யலாம்…” என்று செய்யப் போனால்…
1.கணவர் எண்ணிய வேகத்திற்குச் செய்யவில்லை என்றால்
2.ஏறுக்கு மாறாகச் செய்கின்றாய்…! என்று மீண்டும் சண்டை வரும்
இது எல்லாம் உணர்வுகளின் இயக்கம்.
இப்படிச் சண்டையிட்ட உணர்வுகள் கலவை ஆன பின் அடுத்து சம்பாதிக்க வெளியிலே சென்றாலும்… எடுத்துக் கொண்ட உணர்வுகள் அங்கே வியாபாரத்தைத் தடைப்படுத்தும்… குழந்தைகளிடம் வெறுப்பாகப் பேசச் சொல்லும்… நண்பர்களாக இருந்தாலும் பகைமையாக்கிவிடும்…!
ஆக… சம்பாதிக்கக்கூடிய நிலையை நாம் தெளிவாக வைத்திருக்கிறோமா…?
இதெல்லாம் சந்தர்ப்பம்…
1.மோதலின் உராய்வினால் வரக்கூடிய உணர்வுகள்
2.நம்மை இப்படி எல்லாம் மாற்றி அமைக்கின்றது.
நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்..! எல்லா நல்லதும் செய்து இப்படி ஆகிவிட்டது.. “எனக்குக் குடும்பத்தில் நிம்மதியே இல்லை…!” என்று தொழிலை விட்டுவிடுவார்கள். சிந்தித்துச் செயல்படும் நிலை இல்லாது போய் வெளியிலேயும் வெறுப்பு… வீட்டிலும் வெறுப்பு…!
இது எதனால் வருகின்றது…?
1.கோபத்தையும் வெறுப்பையும் எனக்குள் விளைவை வைக்கின்றோம்…
2.பொறுமை இல்லாது பொறுப்பை இழந்து இங்கே பேசப்படும் பொழுது தொழிலும் மட்டமாகின்றது
3.வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரியிடம் கெட்ட பேர் வருகின்றது.
குடும்பப் பற்றுடன் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் இப்படி உணர்ச்சி வசப்பட்டுச் செய்தார் என்றால் அந்தக் குடும்பம் முழுவதும் வெறுப்பு வளர்கின்றது.
அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?
நாம் வேகமாகச் சமையல் செய்ய வேண்டும் என்று அடுப்பிலே நெருப்பைக் கூட்டினால் என்ன ஆகும்…?
அடியில் இருப்பது கருகிவிடும் நடுப்பகுதியில் இருப்பது ஒரு மாதிரி வேகும்… குழைந்து போகும். மேலே இருப்பது சுத்தமாகவே வேகாது போய்விடும். இந்த மூன்று நிலையில் வரும்.
ஆகவே கோபம் வருகிறது என்றால்…
1.அது எதனால் வருகின்றது என்று தியானத்தைச் சீராக கடைப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்
2.அதை மடக்கித் திருப்பி ஆத்ம சுத்தி செய்யச் சொல்லும்
3.இது உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் முழுமையாகத் தெரியாதபடி “நானும் தியானம் தான் செய்கிறேன்…” என்று சொல்லிக் கொண்டு
1.எதைச் செய்தாலும் வீட்டிலே தொல்லைகள் வருகின்றது
2.எப்பொழுது பார்த்தாலும் சண்டை வருகின்றது
3.யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று இப்படிச் சொல்பவர்களும் உண்டு.
காரணம் இது எல்லாம் பூர்வ புண்ணியத்தில் வருவது. பூர்வ புண்ணியத்தின் வழியில் வந்தாலும் அதை மாற்றுவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டினால் அதை மாற்றிக் கொள்ள முடியும்.
அறியாது இயக்கும் இது போன்ற தொல்லைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறக்கூடிய சக்தியை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
ஆனால் செய்து பார்த்தேன்… முடியவில்லை என்று விட்டு விட்டால் என்ன ஆகும்…! ஆகவே நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.