ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 9, 2022

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது… அனுபவம் இல்லை என்றால் அருள் ஞானத்தைப் பெற முடியாது

இன்ஜினியரிங் படித்து எல்லாவற்றிலும் மள மள என்று தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கி வந்திருப்பார்கள். ஆனால் தொழிலுக்குச் சென்று வேலை பார்க்கும் இடத்தில் என்ன செய்கின்றார்கள்…?
1.படித்ததைத்தான் சொல்லிச் செயல்படுத்த முடிகிறதே தவிர
2.இடைவெளியில் தவறுகள் வந்தால் என்ன செய்வது…? என்று தெரியாது.

ஆனால் இங்கே ஃபிட்டராக வேலை செய்பவருக்கு இன்னது ஆனது. அதனால் தான் அந்த இயந்திரம் தேய்மானம் ஆனது என்று அனுபவத்தில் சொல்லி விடுவார்கள்.

அவர் அந்த இன்ஜினியரிடம் சென்று சார்…! இந்த மாதிரி இருக்கின்றது இப்படிச் செய்தால் சரியாகிவிடும்…! என்பார்.

ஆனால் அவரோ “நான் படித்துக் கொண்டு வந்து விட்டேன் எனக்கு எல்லாம் தெரியும்… நீ எனக்குச் சொல்வதா…!” என்று சொன்னால் என்ன ஆகும். அந்த அனுபவ அறிவைப் பெற முடியாது.

படித்ததைத் தான் சொல்ல முடியுமே தவிர அங்கே இயந்திரத்தில் உள்ள தேய்மானத்தைச் சரி செய்து கொண்டு வர முடியாது.

ஏனென்றால் கீழே வேலை செய்பவர்கள் தன் அனுபவத்தின் நிலைகள் கொண்டு சொல்கின்றார்கள். இப்படி வாழ்க்கையில் நாம் சிந்தித்துச் செயல்படுத்தினோம் என்றால் தான் சரியாக இருக்கும்.

இன்ஜினியரிங்கில்… படித்ததை வைத்துத் திருப்பிக் கொண்டு வந்தால் சரியாக வராது. அவசியம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதே போன்று தான்
1.யாம் (ஞானகுரு) சொன்னதை எல்லாம் பாடமாக வைத்துக்கொண்டு அதையே எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
2.ஆனால் சந்தர்ப்பத்தில் வரக்கூடிய தீமைகளை நான் சொல்லிக் கொடுத்த முறைகள் கொண்டு
3.அதை மாற்றி அமைத்த அனுபவம் மிகவும் முக்கியமாகத் தேவை.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று அதை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும். “அந்த அனுபவத்தின் நிலைகள் கொண்டு” செயல்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளில் அனுபவம் இல்லாதபடி அந்த இன்ஜினியருடைய செயல்கள் சீராக வராது. இதே போல் டாக்டராக வருபவர்களும் எல்லாம் படித்து விட்டுத் தான் வருகின்றார்கள்.

ஆனாலும் மருந்து கொடுக்கப்படும் பொழுது அனுபவம் அவசியமாகிறது. காரணம்… ஒரே நோயாகத் தெரிந்தாலும் கூட அந்த உடலில் இன்னொரு நோய் இருப்பது அது தெரியாதபடி செயல்படுத்தினால் என்ன ஆகும்…?

ஆஸ்த்மா நோய் இருக்கும். ஆனால் இரத்த கொதிப்புக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று அதை அடக்கினால் ஆஸ்த்மாவிற்கு ஒத்துக் கொள்ளாது.

இந்த மருந்தைக் கொடுத்தால் அவருக்கு நோய் அதிகமாகிவிடும்…!

ஆனால் இதற்கு மருந்து கொடுத்தோம்… இப்படி ஆனது…! அதற்கு மருந்து கொடுத்தோம்… அப்படி ஆனது…! என்று அனுபவத்தில் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு ஆஸ்த்மா நோயைப் பற்றிச் சிந்தித்து இரண்டையும் சமப்படுத்தக்கூடிய மருந்தாகக் கொடுத்தால் அவருடைய நோயைக் குணப்படுத்த முடியும்.

1.ஆக இன்ன நோய்க்கு இன்ன மருந்து தான் கொடுக்க வேண்டும் என்று டாக்டருக்குப் படித்திருந்தாலும்
2.இந்த அனுபவம் இல்லை என்றால் பலன் இல்லை.

இரத்தக் கொதிப்பை அடக்கக் குளிர்ச்சியானதைக் கொடுத்தால் ஆஸ்த்மாவிற்கு ஒத்துக் கொள்ளாது. கர்… புர்… என்று மூச்சு இரைச்சலாகும். அப்போது எந்த நோயை நீக்க முடியும்…?

ஆனால் அனுபவரீதியில் கண்டவர்கள் என்ன செய்கிறார்கள்..?

இரத்தக் கொதிப்பினை இத்தனை நொடிகளில் நிறுத்தினோம் என்றால் இதனுடைய வலு குறையும். அந்த நொடிக்குள் அதைச் சரி செய்துவிட்டு அடுத்து அந்த உஷ்ணத்தை மேலே ஏற்றிக் கொடுத்தால் அது ரெண்டு நோயையுமே அது கட்டுப்படுத்தும்.

இப்படிச் சமப்படுத்திக் கொடுக்காதபடி ஆஸ்மா நோய் உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்பிற்குண்டான மருந்தைக் கொடுத்தால் அது வேலையாகாது.

இந்த மாதிரி ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமாகச் செயல்படுத்த வேண்டும். இது எல்லாம் அனுபவ ரீதியிலே அறிந்து செயல்படுத்த வேண்டிய முறைகள்.

இதே போன்றுதான்
1.உங்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்கின்றோம்
2.என்னுடைய அனுபவத்தை உங்களிடம் சொல்கின்றேன்.

அனுபவங்களைச் சொல்லி எந்த நிமிடத்தில் அந்தக் குறைகள் வந்தாலும் உடனுக்குடன் அதைச் சீர்படுத்த ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்…! (ஏற்கனவே பல முறை பதிவு செய்துள்ளேன். அதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்)

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்துச் சுத்தப்படுத்துங்கள்…! உங்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்

அனுபவத்திலே ஒவ்வொன்றாகத் தெரிந்து கொண்டு அதிலே வளர்ச்சி பெற்று வருபவர்கள் தான் தொழிற்சாலையில் வேலை செய்யக்கூடிய ஃபிட்டர்கள்.

படித்து வந்தததைக் காட்டிலும் இவர்கள் தன் அனுபவத்தால் சொல்கிறார்கள். ஆனால் இன்ஜினியர் இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார். அவர் சொன்னபடி இயந்திரத்தை ஓட்டும் போது தேய்மானமாகிறது.

ஆனாலும் அந்த ஃபிட்டருக்கு அனுபவம் இருக்கிறது. இயந்திரம் இப்படிச் சாய்வாக இருக்கின்றது. அதை நேராக்கினால் சரியாகிவிடும் என்று அவர் சொல்கிறார்.

ஆனால் இன்ஜினியரோ நான் படித்து வந்திருக்கின்றேன் நீ சொல்வதைச் செய்தால் எப்படிச் சரியாகும்…? என்றால் அது எப்படி இருக்கும்…!

சில பேருக்கு இந்த உபதேசங்களை கொடுக்கப்படும் பொழுது “நான் எல்லாத் தியானமும் படித்திருக்கின்றேன்… எனக்கு எல்லாம் தெரியும்… குண்டலினி யோகா செய்திருக்கின்றேன்… இந்த யோகம் செய்து இருக்கிறேன்…!” என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆனால் அந்த நுணுக்கம் எதிலிருந்து வருகின்றது என்றால் அது தெரியாது…! சொன்ன பாடத்தை அவர்களால் ஒப்படைக்க முடியவில்லை.

படித்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். ஆனால் படிக்காதவர்கள் யாம் சொன்ன தியானத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லும் பொழுது
1.நான் எத்தனையோ படித்திருக்கிறேன் என்னிடமே வந்து நீ சொல்லுகின்றாயா…? என்றால்
2.இவர் கண்டுபிடித்த உணர்வை அறிய முடியாது போய்விடுகிறது.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…!

இது எல்லாம் இயற்கையின் நியதிகள். ஆக அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சி கொண்டு செய்தோம் என்றால் நமக்குச் சரியான பக்குவம் வரும்.

அந்த அனுபவம் இல்லை என்றால் எதையுமே சீராக்க முடியாது.

குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அதிலே பெற்ற அனுபவங்களை வைத்துத் தான் உங்களுக்கு உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).