ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 6, 2022

சண்டையிடுவோரை எப்படிச் சமாதானப்படுத்துவது…?

கோபப்படுபட்டுச் சண்டையிடுவோரைப் பார்க்க நேர்ந்தது என்றால் உடனே ஈஸ்வரா…! என்று சொல்லி உள்ளே புகாதபடி நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்தி விட்டு
1.சண்டை போட்ட இருவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் திறன் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி எண்ணினால் அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நமக்குள் நல்லதாக மாற்றிக் கொள்கின்றோம்.

அவர்களும் இதே பிரகாரம் எண்ணினால் சரியாக இருக்கும்.

இருந்தாலும்… சண்டை போடுபவர்களிடம் சென்று புத்தி சொன்னால் கேட்பார்களா…!

இரண்டு பேரும் சண்டை இடுகிறார்கள். ஒருவரிடம் சென்று “நீ கொஞ்சம் பொறுத்துப் போ…! என்று சொன்னால் நீ அவனுக்குத் தான் சாதகமாகப் பேசுகின்றாய் என்று இவன் நம்மிடம் சண்டைக்கு வருவான்.

சமாதானப்படுத்த முடியுமா…?

ஆனால் அடுத்தவனை பார்த்துப் நீ பொறுத்து போப்பா…! என்று சொன்னால் “நீ அவனுக்குச் சாதகமாக பேசுகிறாய்…” என்று சொல்வான். ஆக இப்படித்தான் வரும்.
1.அவர்கள் உணர்வுக்குத் தக்க நாம் ஒத்துக் கொள்ளவில்லை என்றால்
2.நம்மைத்தான் அவர்கள் குற்றவாளியாக ஆக்கிவிடுவார்கள்.

அதை நாம் நுகர வேண்டியதில்லை…!

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் உடனே ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

அவர்கள் இருவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்… ஒன்றுபட்டு வாழ வேண்டும்… என்ற உணர்வுகளை நாம் வளர்க்க வேண்டும்.

அவர்கள் சாந்தமடைந்த பிற்பாடு நாம் என்ன செய்ய வேண்டும்…?

இருவரும் சண்டையிட்டதால் கஷ்டமானது. அதனின் விளைவுகள் இப்படி ஆனது. ஆகவே நீங்கள் இப்படிச் செய்து பாருங்கள்…! என்று
1.நமக்குள் வளர்த்திருக்கும் நல்ல உணர்வுகளை அவர்களைக் கேட்க வைத்து
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்கும்படி செய்யலாம்.

இப்படித் தான் நாம் அவர்களைத் தெளிவாக்க வேண்டும். அட என்னப்பா… நீ தானே சண்டை போட்டாய்…! என்று சொல்லக்கூடாது.

உங்கள் சந்தர்ப்பம்…
1.உணர்ச்சி வசப்பட்டுச் சண்டை போட்டீர்கள்.
2.அதனால் நீங்கள் இருவரும் அன்பைக் கெடுத்துக் கொண்டீர்கள் என்ற
3.”உணர்வின் ஞானத்துடன் சொன்னால்” நாம் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நிலை வரும்.

அந்த ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அவர்களை நல்லதாக்க முடியாது.

சண்டையிட்டீர்கள்… இரண்டு பேருடைய வாழ்க்கையும் இந்த மாதிரி ஆனது. இது உங்களுக்குள் நோயாக மாறுகின்றது சிந்திக்கும் தன்மையை இழக்கின்றீர்கள்.

ஆகையினால் நீங்கள் பொறுப்புடன் இருந்து இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… உங்கள் உடலில் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். தெளிந்த மனம் வர வேண்டும் என்று எண்ணுங்கள் என்று இரண்டு பேரிடமும் இந்த மாதிரிச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

அப்பொழுது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருகின்றது… சிறிதளவு கேட்பார்கள். கேட்டால் உள்ளுக்குள் செல்லும். சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

ஆக மொத்தம் இந்த முறைப்படி அருள் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய சண்டை நமக்குள் விளைவதில்லை அருள் உணர்வுடன் நாம் எடுத்துச் சொல்லப்படும் பொழுது அவர்களும் மாறுகின்றார்கள்.

ஆகவே…
1.தியானம் என்பது வாழ்க்கையில் தீமைகள் நமக்குள் வராதபடி
2.அருள் உணர்வுகளைச் சமைத்து அந்த மெய் ஞானத்தினை நமக்குள் வளர்ப்பது தான்.

எல்லோருக்கும் தெளிந்த மனம் வருகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் விளைகின்றது. இதைச் சொல்லிக் கொண்டே வந்தால் கோடிக்கரையில் இருந்து நாம் தனுஷ்கோடியாக பிறவி இல்லா நிலை அடைகின்றோம். சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றோம்.