காட்சிகளையும் சக்திகளையும் யாம் (ஞானகுரு) கொடுத்தால் பெரியவர்களே பல தவறுகள் செய்கின்றார்கள். காரணம்…
1.“சாமி எனக்குத் தான் சக்தி கொடுத்திருக்கிறார்…!” என்ற நிலையில்
2.உண்மைகளை அறிவதற்கு மாறாகத் தவறு செய்கின்ற நிலைகளிலேயே சென்று விட்டார்கள்.
அதற்குப் பின் தான் இதையெல்லாம் நிறுத்தியது.
நீங்கள் உயர்ந்த பண்புகளை வளர்த்துக் காட்டினால் நீங்கள்தான் சாமி. உங்கள் நிலை கொண்டுதான் இங்கு சாமியின் நிலைக்கு மதிப்பு.
என் சக்தியின் நிலைகளை நீங்கள் பயன்படுத்தினாலும் உங்களை உயர்த்திக் காட்டினால்தான் எல்லோருக்கும் சந்தோஷம் கிடைக்கும்... உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும்… எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கலாம்.
ஆகவே நாம் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டும் அருள் வழியினைக் கடைபிடிக்க வேண்டும். அவர் பித்தனைப் போலத்தான் இருந்தார். பல நிலைகளிலும் பல இன்னல்களைப் பட்டார்.
1.அவருடைய நிலையைப் பிறர் பார்க்கும் போது பைத்தியக்காரனாகத்தான் காட்டினார்.
2.ஆனால் அந்த பைத்தியக்கார நிலையில் அவருக்குள் எவ்வளவு பெரிய ரகசியங்கள் இருந்தது என்று நம் நிலைகளுக்குத் தெரியாது.
அதே குருநாதரை வைத்து நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… ரசமணி செய்கிறேன்… என்று மந்திரங்கள் தந்திரங்கள் என்று அவர் பேரைச் சொல்லி இப்படியும் சில பேர் செய்திருக்கிறார்கள்.
ஆனால் அவர் உடலில் பல உணர்வுகள் உண்டு. அவர் எடுத்துக் கொண்ட நிலைகளிலும் கற்றுணரந்த நிலைகளிலும் அவர் உடலைவிட்டுச் சென்றாலும் அவர் உடலில் இருந்து பிணைத்த உணர்வுகள் உண்டு.
அதன் வழியில்…
1.தீமையை எண்ணுவோர்க்குத் தீமையே கிடைக்கும்
2.நம் குருநாதர் காட்டிய அருள் ஒளி பெற வேண்டுபவர்களுக்கு அந்த அருள் ஒளி கிடைக்கும்
3.அந்த அருள் ஞானத்தை நாம் பெறுவோம் என்றால் நமக்கு மெய்வழி காணும் நிலைகள் கிடைக்கும்.
முந்தி வந்தவர்களுக்கெல்லாம் நோயைப் போக்க வேண்டும் என்று பெரும்பகுதி யாம் செயல்படுத்தினோம். இப்பொழுதும் நோய் போகும் என்று சொன்னால் போகத்தான் செய்கின்றது.
1.ஆனால் சாமி மீது தான் நம்பிக்கை வருகின்றது.
2.சாமி கொடுக்கும் சக்தியை நாம் பெற முடியும்… நோயை நீக்க முடியும்… என்ற நம்பிக்கை வருவதில்லை
இதை எல்லாம் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். நான் உங்களுக்குச் சொல்லும் பொழுது நன்றாக ஆவது போன்று… உங்கள் பார்வையால் உங்கள் சொல்லால் அனைத்தும் நல்லதாக்க வேண்டும்.
தீமைகள் புகாதபடி தடுத்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தான் இவ்வளவு தூரம் உபதேசிக்கின்றோம்.
நீங்கள் எடுத்துக் கொண்ட சக்தியை உயிர் விளைவிக்கின்றது உடலாக மாற்றுகின்றது. எதை எண்ணுகின்றீர்களோ அதையே தான் உயிர் உருவாக்குகிறது.
திட்டியவனைப் பதிவு செய்து கொண்ட பின் “அவன் நாசமாகப் போக வேண்டும்…” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் அவனையும் கெடுக்கின்றது… இங்கே நம்மையும் கெடச் செய்கிறது.
ஆகவே ஒவ்வொரு நொடியிலும் கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ வேதனையோ எது வந்தாலும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி இங்கே அதிகமாகி விட்டால் வேதனைப்படும் உணர்வுகள் உள்புகாதபடி அதைத் தடுத்துவிடும்… விலக்கி விட்டுவிடும். அருள் ஞான சக்தியும் உங்களுக்குள் பெருகும்.
இந்த இரண்டு வேலையும் செய்யும்.
அதனால்தான் உங்கள் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…? என்று மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.
இந்த உடலில் இருக்கும் போழுதே அந்த அருளைப் பெற வேண்டும். அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவியும் இதைப் போல எண்ணுதல் வேண்டும்.
1.துருவத்தில் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றடைவோம்
2.பிறவி இல்லா நிலை பெறுவோம் என்று பிரார்த்திக்கின்றேன்.