இன்றைய சூழ்நிலையில்... வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து எடுத்துப் பழக வேண்டும். தனுஷ்கோடி...! அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.
காரணம்... நாம் கோடிக்கரையில் (மனிதப் பிறவியின் கடைசியில்) இருக்கின்றோம். இதை விட்டுச் சென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.
3.“உடலைக் கழட்டிவிட்டு விடுகின்றோம்...!”
ஏனென்றால் இந்த உடலிலிருந்து மீண்டும் இன்னொரு உடல் பெறுவதற்குப் பதிலாக இந்த உடலில் இருக்கும் பொழுதே உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.
இன்றைய உலகில்
1.விஞ்ஞான வழியில் எத்தனையோ கடும் விளைவுகள் வந்து கொண்டிருக்கின்றது
2.விஷமான உணர்வுகளும் பரவிக் கொண்டுள்ளது
3.”புதிய புதிய வைரஸ்களும்” அதிக அளவில் பரவிக் கொண்டே உள்ளது.
தீமையான உணர்வுகளை வளர்க்கும் சில குடும்பங்களிலோ ஊர்களிலோ இது அதிகமாகப் பரவுகின்றது. ஒருவருக்கொருவர் சண்டையிடுவதும்... வேதனைப்படுவதும்... மந்திர ஜாலங்களைச் செய்வதும்... மாயாஜாலங்கள் செய்து அது நடக்கவில்லை என்றால் சாப அலைகள் விடுவதும்... அதன் மூலம் சாபமிட்ட ஆன்மாக்கள் வெளியேறி... எல்லை கடந்து செல்லப்படப் போகும்போது அந்தத் தெருக்களிலே பல தொல்லைகளும் துயரங்களும் அங்கே வாழும் மக்களுக்கு ஏற்படுகின்றது.
அதிலிருந்தெல்லாம் மக்களை மீட்டிடும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும். ஆகவே... எல்லோரும் அந்த அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தைக் கடைபிடிப்போம்.
1.அவரவர்கள் வீட்டிலும் தெருவிலும் ஊரிலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பரப்புவோம்.
ஒவ்வொரு உயிரும் கடவுள் என்றும் ஆண்டவன் என்றும் ஈசன் என்றும் அவன் வீற்றிருக்கும் ஆலயம் அந்த உடல் என்றும் நமது குருநாதர் காட்டிய வழியில் அதைத் தூய்மைப்படுத்துவோம். உடலான அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்துவோம்.
மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களுக்கெல்லாம் அருள் உணர்வுகள் கிடைக்கப் பெற வேண்டும் என்று பரப்பி... மக்கள் அதைப் பெறும்படி செய்வோம்... அவர்களை மகிழ்ந்து வாழச் செய்வோம்.
அவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ந்த உணர்வைக் கண்டு நாம் சந்தோஷப்பட வேண்டும். ஏனென்றால் அந்த மகிழ்ந்திடும் உணர்வு நமக்குக் கிடைக்கின்றது.
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அவர்கள் உடலை ஆலயமாக மதித்து
2.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த குறைகள் நீங்கி அருள் உணர்வுகள் பெருக வேண்டும் என்று எண்ணி
3.இந்த வழிப்படுத்தி நாம் வாழ்ந்தாலே போதுமானது... என்றுமே அந்த உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.
கோடிக்கரையில் இருக்கும் நாம் தனுசுக்கோடியாக உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக மாற வேண்டும். எதிலுமே இருள் என்ற நிலைகள் வராதபடி ஒளியாக மாற்றிடும் சக்தி பெற அந்த முயற்சியை நாம் எடுப்போம்.