மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்… நீங்கள் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன். அதே போல் எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்களும் தியானியுங்கள்.
எல்லோரும் நல்ல நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வருகின்றது. ஒன்றுபட்ட நிலைகள் கொண்டு இவ்வாறு செய்தோம் என்றால் நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் தெருவிலும் ஊரிலும் படர்கின்றது.
கொடுமையான நோய்களோ சில விஷத்தன்மை வாய்ந்த நிலைகளோ இங்கே வராது நாம் எளிதில் தடுத்து நிறுத்த முடியும். தெருவில் வசிக்கும் மக்களையும் நாம் மகிழ்ந்து வாழச் செய்ய முடியும். குடும்பத்திலும் ஒன்றுபட்டு வாழும் நிலையினை உருவாக்க முடியும்.
ஆகவே…
1.இனி எந்த நிலை வந்தாலும் குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்..
2.என் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்வேன்.
3.பேச்சால் மூச்சால் இந்த ஊர் முழுவதும் நல்லதாக்கச் செய்வேன் என்று பிரார்த்தனை செய்து
4.அதன் வழியில் இந்த ஊர் நன்றாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்டு வாருங்கள்.
ஒருவருக்கு நோய் வந்துவிட்டது என்றாலும் யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அவரை நிற்கச் செய்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு அதே உணர்வை அவரையும் எண்ணி எடுக்கும்படி செய்யுங்கள்.
சக்கரத்திற்கு முன்னாடியே இதைப் போன்று செய்து பழகுங்கள். அதே பிரகாரம் அந்த நோய்களும் நீங்கும்… தீமைகளும் அகலும்.
இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
இப்படி நம்முடைய சக்திகளைப் பரப்பப்படும் பொழுது நாம் பாய்ச்சிய உணர்வுகள் அங்கே வேலை செய்வதைப் பார்க்கலாம்.
எப்படி…?
ஒருவன் நம்மைத் திட்டுகிறான் என்றால் அவன் திட்டிய உணர்வு நமக்குள் வந்து நம்மைத் தவறான வழிகளுக்கு அது இயக்குகின்றதல்லவா…?
இதைப் போன்று தான் நீங்கள் எங்கிருந்தாலும்
1.குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
3.தீமை செய்யும் உணர்வுகளை நீங்கள் மாற்றிப் பழக வேண்டும் என்று அருளைப் பாய்ச்சுகின்றேன்.
எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலில் சிறிது காலம் தான் இருக்கின்றோம். அந்த நேரத்திற்குள் நாம் எதை எடுத்து வளர்க்க வேண்டும்…?
அருள் சக்திகளைப் பெற்று இருளை அகற்றிடும் நிலை பெற வேண்டும். அப்போது நம் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.
ஆனால் விஷத் தன்மையானால் உடல் குறுகுகின்றது... விஷத்தின் இயக்கமாகவே மாற்றுகின்றது.
ஒளியா… இருளா…?
1.இருள் என்ற நிலைக்கு வரும் பொழுது மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்
2.ஒளி என்ற நிலையினை வளர்க்கும் போது பேரொளியாக மாறுகின்றது.
இந்த நிலையை நாம் பின்பற்ற வேண்டும்.
ஆகவே துருவ நட்சத்திரத்துடன் நாம் அங்கத்தினராக இருக்க வேண்டும் ஆயுள் மெம்பராக இருக்க வேண்டும். அதனுடன் இணைந்து என்றுமே நாம் பிறவி இல்லா நிலை அடையும் அந்த மார்க்கத்திற்குச் செல்ல வேண்டும்.
எதிர்காலத்தில்… வரும் தீமைகளை நீக்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம். எல்லோரும் அருள் உணவு பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.