இந்த மனிதனின் வாழ்க்கையில் அன்பும் பரிவும் பாசமும் கொண்டு வாழும் நிலையில் பிறருடைய துயர்களைக் கேட்டறிந்து தான் அவர்களுக்கு நாம் உதவி செய்கிறோம்.
உதவி செய்தாலும் அவருடைய துயரமான உணர்வுகளை நுகரப்படும் பொழுது துயரத்தை ஊட்டும் அணுக்களாக உடலுக்குள் நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.
மீண்டும் மீண்டும் அவர்களுடைய துயர்களை எண்ணும் பொழுது அந்த அணுக்கள் நமக்குள் பெருகி நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை நம்மை அறியாமலேயே மடியச் செய்து விடுகின்றது.
1.அப்போது நல்ல குணங்களை நாம் காக்க முடியாது போய் விடுகின்றது.
2.உயிரான ஈசனை நாம் மறந்து விடுகின்றோம்
3.மனித உடலில் இருந்து வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்த மறந்து விடுகின்றோம்
4.பற்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளில் இருந்து விடுபடத் தெரியவில்லை.
அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?
ஒவ்வொரு நிலைகளிலும் நீங்கள் தெளிந்து தெரிந்து அந்த அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத் தான் இப்போது உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.
ஆக... ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வதைத்தான் “தொட்டுக் காட்டுவது...” என்று சொல்வது.
1.உணர்வுகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள் அது எப்படி இயங்குகின்றது...? தீமைகள் விளைவது எப்படி...? என்ற நிலையில்
2.தீமையிலிருந்து விலகும் அருள் உணர்வுகளை யாம் (ஞானகுரு) உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது
3.இந்த இரண்டையும் கலந்து நீங்கள் நுகர்கின்றீர்கள்
நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுவாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது. இந்த அணுக்கள் உடலில் பெருகிவிட்டால் இதற்கு முன்னாடி உடலில் உருவான தீமை என்ற உணர்வின் அணுக்களை வளராது இது தடுக்கும்.
நல்ல பண்பு கொண்ட மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் சந்தர்ப்பத்தால் பிறருடைய வேதனையைக் கவர்ந்து கொண்டால் அது வலிமை பெற்று விடுகிறது.
வேதனைப்படுகின்றான் வேதனைப்படுகின்றான் என்று மீண்டும் எண்ணும் பொழுது அந்த வேதனை உணர்வே நமக்குள் இரையாகி வேதனைப்படச் செய்யும் அணுக்களாக வளர்க்கப்படும் பொழுது நல்ல அணுக்கள் வாழ முடியாதபடி கடும் நோயாக வந்து விடுகின்றது.
நோய் வளர்ந்து விட்டால் அந்த நோயை நீக்கும் உபாயம் வேண்டுமல்லவா...!
1.வேதனையால் உருவான நோயின் அணுக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து கலந்து விட்டால்
3.அதே உணர்வு ஓம் என்று பிரணவமாகி இந்த உணர்வின் கருவாக அதை மாற்றுகின்றது.
அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோய்வாய்ப்பட்டவர் உடலில் படர வேண்டும் அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
நமக்குள் அதை வளர்த்துக் கொண்ட பின் அந்த அணுவின் தன்மையாக விளைகிறது. விளைந்த பின் நோயுற்றவரிடம் இதை வாக்காகச் (சொல்லாக) சொல்லி அவருக்குள்ளும் இது விளையப்படும் பொழுது
1.நம்முடைய பார்வையும் நம்முடைய சொல்லும் அவருடைய நோயை நீக்கக்கூடிய தன்மையாக வரும்
2.நமக்குள் நோய் வராது தடுக்கும் சக்தியும் பெறுகின்றோம்.
மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம்மை மாற்றுகின்றது. அதை மாற்ற... கொடுத்த சக்தியைப் பயன்படுத்திப் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற நிலையில் இந்த ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்றி... உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்தச் சக்தியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
மனிதனின் நிலைகளில் உயர்ந்தவன் அகஸ்தியன் அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நமக்குள் சேர்த்துக் கொண்டால் தீமைகளை நீக்கி நோய்களை நீக்கி அது நமது ஆன்மாவைத் தூய்மை ஆக்குகின்றது.
1.அந்தத் தூய்மையான உணர்வுகள் வளர வளரத் துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் வருகின்றது
2.இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் வளர்த்துக் கொண்ட அருள் உணர்வு கொண்டு
3.உயிர் அங்கே துருவ நட்சத்திரத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து... ஆறாவது அறிவு கொண்ட நிலையை ஏழாவது நிலையாக ஒளியாகப் பெறச் செய்யும்.