என் இசையில் நீ இசைப்பாய்... என் நினைவில் நீ வருவாய்... உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன் உன்னிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணிப் பாடலைப் பாடுகின்றோம்.
அதனின் உட்பொருளே...
1.“உயிரான ஈசன்” நீ எப்படி ஒளியாக இருந்து எல்லாவற்றையும் அறிவிக்கின்றாயோ...
2.இருளை அகற்றி நீ எப்படி என்றுமே ஒளியாக இருக்கின்றாயோ...
3.அதன் உணர்வாக என்னை நீ இயக்குதல் வேண்டும்.
4.அதன் வழியே நான் வாழ வேண்டும்...
5.பொருளறிந்து செயல்படும் தன்மை நான் பெற வேண்டும்
6.இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி எனக்கு வேண்டும்.
ஒளி பட்டால் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப்போல எனக்குள் இருளை நீக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும். ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலான சிவம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
உயிரால் இயக்கப்பட்ட நிலையும்... உணர்வால் என்னை உருவாக்கிய நிலையும்... மகிழ்ச்சி என்ற உணர்வின் சக்தியை நான் எண்ணும் பொழுது என் இசையில் நீ இயக்குகின்றாய்
1.என் நினைவில் நீ எப்பொழுதும் வர வேண்டும்.
2.”நீ இருக்கின்றாய்...” என்ற நிலையில் அந்தப் பயம் எனக்குள் வரவேண்டும்.
3.தவறு என்ற உணர்வு எனக்குள் வராது தடுத்து நிறுத்தும் அந்த ஆற்றல் பெற வேண்டும் ஈஸ்வரா.
என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்... என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா...! என்று உயிரே வேண்டுகிறோம்.
ஆனாலும்... அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கின்றோம்.
1.அந்த ஆசையினால் நமக்குள் தீமை என்ற உணர்வுகள் வந்து சேர்ந்து விடுகின்றது.
2.தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகிறோம்
3.இந்த உடலின் ஆசைதான் நமக்குள் வருகின்றது
4.”உயிரான ஈசன் இருக்கின்றான்...” என்ற நிலை மறந்துவிடுகின்றது.
வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் கடும் வேதனை உருவாகின்றது. அவனால் அமைக்கப்பட்ட இந்த உடலான கோவிலில் “அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர...” ஈசனான நிலையை நாம் வணங்க மறுக்கின்றோம். அவன் அறிவை நாம் தெளிவாக்கும் நிலையையும் இழந்து விடுகின்றோம்.
ஆகவே இந்த உடலின் இச்சைக்கு நாம் செல்லாதபடி அருள் ஒளி பெற்று இருளை அகற்றிடும் சக்தி பெற்று... உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும். இருளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.
உயிர் எவ்வாறோ... நீ எப்படி இருக்கின்றாயோ என் உணர்வுகள் அனைத்தும் ஒளிமயமாக மாறுதல் வேண்டும்
தீமையைப் பிளக்கும் நரசிம்மா என்ற நிலையில் வரும் தீமைகளை மாற்றி விட்டால் கல்கி. இந்த உயிர் ஒளியாக உள்ளது. அதைப் போல் நம் உணர்வின் தன்மை பத்தாவது நிலை ஆகும் போது தான் கல்கி.
1.பூமியின் ஈர்ப்பை விடுத்து விண்ணுலகம் செல்கிறது...
2.எதுவுமே தன்னை ஈர்த்து விடாது பறந்து செல்கின்றது.
3.குதிரை மேல் பறந்து சென்று வாளை வீசித் தப்பிச் செல்வதாக உருவம் அமைத்து
4.அருவ நிலையில் நாம் உயர்ந்த சக்திகளை எப்படிப் பெற வேண்டும்...? என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
வான் வீதியில் தோன்றிய “உயிர்” மனிதனான பின் இனி பிறவி இல்லா நிலை அடைவது தான் கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் “துருவ நட்சத்திரம்...”