ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 1, 2022

சுவாச நிலையைச் சீர்படுத்தித் தியானித்தால் எதையுமே எளிதில் சமப்படுத்த முடியும்

தியானத்திற்கு வரும் பொழுது “சுவாச நிலை எடுத்துத் தியானம் பெற வேண்டும் என்பது…” நம் எண்ணத்தை முதலில் அச்சுவாச நிலையினால் சமப்படுத்துவதற்காகத்தான்.

தியான நிலைக்கு அமரும் நிலையில் “முதலில் அச்சுவாச நிலையை ஈர்த்துக் கொள்...!” என்று அதனால் தான் சொல்கிறோம்.
1.நாம் தியானத்தில் அமர்ந்தவுடனே
2.சுவாசம் ஒரு நிலையில் இல்லாமல்
3.மேலும் கீழுமாக ஆடிக் கொண்டே தான் வரும்.

நம் எண்ணம் முழுவதையுமே அந்த ஜெப நிலையில் நினைவைச் செலுத்திய பிறகுதான்
1.ஒரே நேர்பட்டுச் சம நிலை பெற்று...
2.பிறகு உயர்ந்த நிலையில் நாம் இருப்பதைப் போன்ற
3.நம் உடலும் மனமும் எண்ணும்படி அந்தச் சுவாசம் உயர்ந்து செல்கிறது.

அந்த நிலையில் இவ்வுலகம்... இந்த உடல்.. எல்லாவற்றையும் மறந்து நாம் உயர்ந்த நிலையில் “பறந்த நிலையில்... சஞ்சரிக்கும் தன்மை பெற்றுச் சஞ்சரிக்கின்றோம்...!”

நம் நினைவுகள் அந்தத் துருவ நட்சத்திரத்திலும் சப்தரிஷி மண்டலத்திலும் சஞ்சரிக்கும். உடல் உணர்வு இல்லாதபடி ஏகாந்தமாக மேல் நோக்கி நாம் செல்வது போல் நிச்சயம் உணரலாம்.

1.நாம் செய்யும் தியானத்தில் இதை எல்லாம் உணர்கிறோம் என்றால்
2.அந்த மெய் ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகள்
3.அப்பொழுது நம் உடலுக்குள் சேர்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஆகவே நமக்கு முன் தோன்றிய பல மகரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து நாமும் அந்த ஜெப அருளைப் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிறவியில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
1.அந்தச் சூட்சம உலகில் கலந்துள்ள பெரியோர்கள் (மெய் ஞானிகள்) நம்முள் வந்து
2.நமக்குப் அருள் வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
3.நம் உயிராத்மாவிற்குச் சேர்க்கும் நல் சொத்தாக அந்த மகரிஷிகளின் ஆசிகளை ஏற்று நம் வாழ்க்கையை வழி நடத்துதல் வேண்டும்.

இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் அவர்கள் வாழும் அந்தச் சூட்சம உலக்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிறரின் எண்ணமும் பிறரின் தூண்டுதலும் நம்மை வந்து அண்டாமல் நம் அறிவில் நம் உணர்வில் நாம் பல உண்மைகளைப் பெற்று அறிந்திட வேண்டும்.

பால் ஊட்டத் தாய்.. பாடம் புகட்ட குரு... வாழ்ந்திட மனைவி... வளர்த்திட மக்கள்... என்று ஒன்றுடன் ஒன்றி நம்மை நாம் பிணைத்து வாழும் நிலையில்
1.”நான்” என்ற தனி நிலையில் இல்லாத நாம்
2.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பெற்று வாழ்வதே
3.நம் உயிரணுவிற்கு நாம் சேர்க்கும் அழியாச் சொத்து என்று உணர வேண்டும்.

மெய் வழியில் நாம் செல்லும் நிலையில் நம்மை இயக்கிச் செல்வதுவே
1.அந்தப் பெரியோர்களின் ஆசி தான் என்று உணர்ந்து
2.”நான்” என்ற நிலைப்படுத்தி வாழ்ந்திடாமல் நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.