ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2022

27 நட்சத்திரங்களின் சக்தியை ஒருங்கிணைத்துப் பெறச் செய்யும் நிலைக்காக உருவாக்கப்பட்டது தான் முருகன் சிலை

1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் இருக்கும்
2.நாளுக்கு நாள் விஷங்களை மாற்றி… மாற்றி… மாற்றி… மாற்றி… விஷத்தையே மாற்றிடும் சக்தி பெற்ற பின் தான் மனிதனாக உருவாக்கியது.

அதே போல் ஒவ்வொரு தாவர இனச் சத்திற்குள்ளும் மனிதனாக உருவாகக் காரணமான “நஞ்சினை வென்றிட்ட… நஞ்சை வென்றிடும்…” இந்த உணர்வின் சத்துக்கள் உண்டு.

மனிதனுக்கு மூலமாக இருந்த அத்தகைய விஷத்தை வென்றிடும் அருள் சக்தியின் தன்மைகளைச் சாரணையாக முருகன் சிலைக்குள் ஏற்றினான் போகன்.

விஷம் கொண்ட ஜந்துக்கள் தன் இரைக்காக நுகர்ந்தறிந்து வரும் போது தன்னைக் கொன்று புசித்திடாத நிலைகள் இருப்பதற்காகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனின் தாய் தந்தையர் பல விதமான மூலிகைகளைத் தாங்கள் படுத்திருக்கும் குகைகளின் பக்கத்தில் பரப்பி வைத்திருந்தார்கள்.

அதைக் கருவுற்ற அகஸ்தியனுடைய தாயாரும் நுகர்ந்ததால் அகஸ்தியன் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் சக்தியாக அது பெருகியது.

நஞ்சை மூலமாக வைத்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகள் மின்னல்களாக (கதிரியக்கங்கள்) தாக்கும் பொழுது மற்றொன்றுக்குள் ஊடுருவி அதை வீழ்த்திவிடும். அத்தகைய வீரிய சக்தி கொண்டது.

தாய் கருவிலேயே நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றதனால்
1.வீரிய சக்தி கொண்ட நட்சத்திரங்களின் மின்னல்களையும் அகஸ்தியன் அடக்கி
2.தனக்குள் அணுவின் தன்மையாக ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அகஸ்தியன் பெற்ற பேராற்றல்களை இரண்டாவது நிலைகள் கொண்டு தான் போகன் 5000 ஆண்டுகளுக்கு முன் அறிந்துணர்ந்தான்.

நமது பிரபஞ்சமும் கோள்களும் நட்சத்திரங்களும் உருவானது எப்படி…? என்று அகஸ்தியன் கண்ட உணர்வை அவனும் தனக்குள் கண்டுணர்ந்து நஞ்சினை வென்றிடும் சக்தியாகப் பெற்றான்.

நவபாஷாணங்களை எடுத்து உருவாக்கி…
1.27 நட்சத்திரங்கள் மின்னலாகத் தாக்கப்படும் பொழுது அந்த மின் கதிர்களை நவபாஷாணத்திற்குள் ஊடுருவச் செய்து
2.அதன் வழி கொண்டு 27 நட்சத்திரங்களின் ஒருக்கிணைந்த உணர்வினைப் பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற ஒரு சிலையை (முருகன்) உருவாக்கினான்.

அது தான் போகன் உருவாக்கிய ஆறாவது அறிவின் சக்தி கொண்ட நிலைகள்.

மனிதரான பின் நாம் எப்படி வந்தோம்…? மனிதனான பின் இத்தனை அறிவையும் நாம் எப்படித் தெரிய முடிந்தது…? என்பதை அவன் கண்டுணர்ந்தான். அதை உணர்வதற்காக நாடு முழுவதற்கும் சென்றான்.

ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களும் அதனின் அறிவாக எப்படிப் பெறுகின்றனர்…? என்ற நிலையை அறிவதற்காக உலகம் முழுமைக்கும் “ககன மார்க்கமாகச் சென்று…” எல்லாவற்றையும் அறியும் சக்தி பெற்றான்.

அந்த அறிவின் சக்தியைத் தனக்குள் பெற்ற பின் தான் இங்கே முருகன் சிலையை உருவாக்கி அதன் வழியில் நாம் எல்லாம் வழிபடும் நிலையாக
1.ஆறாவது அறிவின் பெருமையை
2.சிலை ரூபமாக வெளிப்படுத்தினான் போகன்.