ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2022

மனக் கவலையும் மனக்குழப்பமும் தீரவேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் தொடர்பிலேயே இருக்க வேண்டும்

ரோட்டில் சென்று கொண்டிருந்தேன்… ஒருவருக்கு விபத்து ஆகிவிட்டது… “அடிபட்டார்…” என்று ஒருவர் நம்மிடம் சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

“ஆ…!” என்று கேட்டுக் கொண்டே இருப்போம். இந்த உணர்வுகள் நமக்குள் படப்பட்டு எந்த வகையில் விபத்து ஆனது…? என்று அவர் சொன்னாரோ அதே உணர்ச்சிகள் தூண்டி நம்மை இயக்க ஆரம்பிக்கும்.

என்ன செய்வோம்…?

1.ரோட்டிலே செல்ல ஆரம்பித்தோம் என்றால் ஓரத்திலே ஒதுங்கிப் போகாதபடி
2.நம்மை அறியாமலே நடு ரோட்டிற்கு அழைத்துச் செல்லும்.
3.ஏனென்றால் பதிவான அந்த உணர்வு நம்மை அறியாமலே அங்கே இட்டுச் செல்லும்.

ஆகவே விபத்தோ மற்ற அசம்பாவிதங்களையோ கேள்விப்பட்டால் அடுத்த கணமே ஆத்ம சக்தி செய்து கொள்ள வேண்டும்.

பின் யாருக்கு அந்த விபத்து ஆனதோ மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும பெற வேண்டும் என்ற எண்ணங்களை நமக்குள் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் நல்ல குணத்துடன் பார்க்கும் பொழுது தான் பிறருடைய தீமைகளை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டே உள்ளது.

மனக் கவலையும் மனக்குழப்பமும் ஆகி… இனி எப்படி வாழ்வது…? என்ற நிலையில் நம்மைப் பல திசைகளுக்கும் ஆளாக்கி விடுகின்றது.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.துருவ நட்சத்திரத்துடன் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு இருக்க வேண்டும்
2.அதைப் பற்றுடன் பற்ற வேண்டும்
3.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் அந்த அணுக்கள் நமக்குள் பெருகிவிட்டால் நம்மை அறியாமலே அந்தச் சொல் வந்துவிடும்.

உதாரணமாக ஒரு பாடலை பாடிக் கொண்டிருக்கின்றோம். நமக்குள் அது பதிவாகிவிட்டது என்றால் அந்தப் பாடல் சரியாக வரும்… முழுமையாகப் பாடவும் முடியும்.

இருந்தாலும் அப்படிப் பாடிக் கொண்டிருக்கும் பொழுது இடைமறித்து… இடையிலே ஒன்றை தனித்துச் சொல்ல வேண்டும் என்று சொன்னால்… இரண்டாவது தரம் அந்தப் பாடல் நமக்கு நினைவு வராது.

அப்போது மீண்டும் முதலில் இருந்து பாடிக்கொண்டு வரவேண்டும்.
1.வரிசைப்படுத்தி வரும் பொழுது நமக்குள் அந்தத் தொடர்வரிசை வருகின்றது
2.இடையிலே சிக்கிவிட்டால் நமக்கு அந்த நினைவு வருவதில்லை.
3.ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி “அடுத்தடுத்து… அடுக்குகளில் வருகின்றது…!”

இதனால் தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது. அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் தீமைகள் உள்புகாதபடி நாம் விழித்திருந்து பழகுதல் வேண்டும்.

சிவன் ராத்திரி… நீ விழித்திரு. தீமைகள் வந்தால் அந்தத் தீமையான உணர்வுகள் புகாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.