ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2022

உடலில் வரும் வலிகளை எப்படித் தணிப்பது...?

முந்தைய நிலைகளில் உருவானது இனம் புரியாத நிலையில் வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டாலும் அந்த நிமிடம் என்ன செய்கிறது...? உடலில் இருந்து தான் அந்த வேதனை தோன்றுகின்றது. அந்த வேதனை உணர்ச்சிகள் ஆன பின் நம் உயிருக்கு வருகின்றது

உதாரணமாக
1.முள் குத்திவிட்டால் உடனே உயிருக்குத் தான் வருகின்றது… அப்பொழுது கண் என்ன செய்கின்றது...?
2.எங்கே முள் இருக்கின்றது…? என்று தேடுகின்றது
3.அதைக் கூர்ந்து கவனித்து நுகர்கின்றோம்.
4.ஆ... காலிலே முள் ஏறி விட்டதா… என்ன...? என்கிற அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.

இப்படித் தான் நம் உடலுக்குள் முந்தைய நிலைகள் பெற்ற உணர்வுகள் அந்த அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.

உடலில் வலி இருக்கிறது என்றால் நாம் சந்தோஷமாக இருக்க முடியுமா…?

நம் உடலிலே ஏற்கனவே உருவான அணுக்கள் (முன்னாடி வேதனைப்பட்ட்து) தன் பசிக்கு வேதனையான உணர்வுகளை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த வேதனையை நாம் அறிய முடிகின்றது.

அந்தச் சமயங்களில் நமக்குள் அந்த நினைவு வந்தாலும் ஈஸ்வரா... என்று உயிரான ஈசனிடம் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளியும் பெற வேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

அதாவது...
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போய்ச் சேராதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.

பின் கண்களை மூடி... துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ
2.அங்கே உங்கள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

உடலில் “வேதனையை உருவாக்கும் அணுவிற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

இப்படி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வாருங்கள்.
1.இதை இவ்வாறு செய்ய
2.இந்த உணர்வுகள் அந்த அணுக்களில் படர
3.விஷத்தன்மைகள் குறைந்து வலியைக் குறைக்க உதவும்.

இதைப்போல எடுத்து அந்த உணர்வின் தன்மையை நம் உடலில் செலுத்த செலுத்தச் சிறுகச் சிறுக அதனுடைய வீரிய சக்தி இழந்து நல்ல அணுக்கள் வலுப்பெறத் தொடங்கி விடுகின்றது.

இதைத் தான் “கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்...” என்று சொல்வார்கள்.

நம் உடலில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலைகள் எத்தனையோ விதமான அணுக்கள் இருக்கின்றது. அந்த அருள் ஒளியை நம் கண்ணிலே கவர்ந்து... அதே கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அங்கே “ஊடுருவிப் பாய்கின்றது...”

எங்கே வலி எடுக்கிறதோ அங்கே நேராகக் கண்ணின் நினைவைச் செலுத்தினோம் என்றால் சிறுகச் சிறுக வலிகள் தணியத் தொடங்கும்.

இதே போலத் தான் நம் நரம்பு மண்டலங்களில் கை கால் குடைச்சலோ மற்ற நிலைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் தசைகளில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளில் படர வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்தி எங்கள் உறுப்புகள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்வுகளை படரச் செய்யும் பொழுது “மின்சாரம்...” பாய்வது போல உடலுக்குள் பரவும்.

சிறுகச் சிறுக எடுத்தோம் என்றால் உடலில் வரக்கூடிய வலிகள் தணிய நேரும்.