மனிதனுடைய வாழ்க்கையில் வரும் ஆசை எல்லாம் சாகாக் கலை…!
1.என்னை அவன் இப்படிப் பேசினான்… இருக்கட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன்…! என்றால் இது சாகாக் கலைதான்
2.காரணம் உடலை விட்டுச் சென்றால் அவனுடைய உடலுக்குள் சென்று இதே வேலையைச் செய்யும் (அழியாதபடி).
எந்த ஆசையின் தன்மையை இந்த உடலில் பெற்றானோ சாகாக்கலையாக அடுத்த உடலில் வந்த பின் அந்த வேலையைச் செய்யும்
ஆனால் நம் குருநாதர் நமக்குக் காட்டியது வேகா நிலை.
இராமலிங்க அடிகள் கூட இதைப்பற்றிப் பாடி இருக்கின்றார் சாகாக்கலை… வேகாநிலை… போகாப்புனல்…! வேகா நிலை பெற்று விட்டால் நாம் இன்னொரு உடலுக்குள் போக மாட்டோம்.
வேகா நிலையைப் பற்றிச் சொன்னால் இல்லை சாகாக் கலைதான் பெரிது…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்
நாடி சாஸ்திரங்களிலோ வைத்தியரீதியிலே பார்த்தோம் என்றால்
1.காயகல்பம் செய்து இந்த உடலை நாங்கள் அழியாது வைத்திருக்கிறோம்
2.போகர் 12000 எல்லாம் படித்துவிட்டு இப்படி வாதம் செய்வர் பலர் உண்டு.
ஆனால் அதை அவர் எழுதினாரா...?
பின்னாடி வந்தவர்கள் அதனுடைய தத்துவத்தை எடுத்து இந்த உணர்வின் தன்மையை நாடிகளாக எழுதி வைத்திருக்கின்றார்கள்.
இயற்கையில் ஒன்றுடன் ஒன்று சேர்க்கும் போது தங்கம் எப்படி உருவாகின்றது...? அதைப் போல் உன் மனதை நீ எப்படித் தங்கமாக்க வேண்டும்...? என்று போகன் அன்று சொல்லி இருந்தால்
1.புறத்தில் தங்கம் செய்வதிலேயே ஆசைகளைக் கொண்டு செல்கின்றார்கள்
2.இருக்கிற சொத்தை எல்லாம் இழந்து ஆண்டியாகச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
3.தங்கம் செய்ய முடியும் என்ற இந்த ஆசை பேய் மனமாக மாறிச் சுற்றுபவர்கள் இன்று நிறைய உண்டு.
செய்து செய்து பார்த்த பின்… என்னிடமே (ஞானகுரு) அதைக் காண்பித்து தங்கமாக வந்து விட்டதா...? பார்த்துச் சொல்லுங்கள்…! என்று என்னைச் சுற்றியவர்களும் உண்டு.
ஏனென்றால் குருநாதர் ஒரு சமயம் ஒரு இரும்புக் கரண்டியும் ஈயக் கட்டியையும் எடுத்து வா என்று சொன்னார். காட்டிற்குள் அழைத்துச் சென்றார். பல குப்பைகளை எடுத்து வரச் சொல்லி அதை எல்லாம் போட்டு வேக வைடா… தீயை வைத்து ஏரிடா...! என்றார்
அவர் சொன்ன இடங்களிலே தேடித் தேடித் தேடி... இந்த இடத்தில் இந்தக் குப்பையை எடு... இன்ன இடத்தில் இந்தக் குப்பையை எடு...! என்று எனக்கும் தெரியாமலே இதைச் செய்தார்.
அவர் சொன்ன இடத்திலிருந்து குப்பைகளை எடுத்துக் கொண்டு வந்தேன். போட்டு எல்லாவற்றையும் எரித்த உடனே இந்த உணர்வுகள் பட்டவுடனே ஈயம் தங்கமாக மாறிவிட்டது
ஆசாரியிடம் கொடுத்து உறைத்து பார்த்த பின் அடேயப்பா... இது உயர்ந்த தங்கமாக இருக்கின்றது இதிலே இன்னும் செம்பைச் சேர்க்கலாம்... உயர்ந்த தங்கமாக இருக்கிறது..! என்று சொல்லுகின்றார்.
அட... நீ இந்தச் சாமியாரிடம் (குருநாதரிடம்) சுற்றிக் கொண்டிருப்பது எதற்கு...? என்று இப்பொழுது தான் எனக்குத் தெரிந்தது நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா என்று அந்த ஆசாரி சொல்கின்றார்.
அதற்குப் பின் நான் என்ன செய்தேன்...?
குருநாதர் எந்தெந்த இடத்தில் குப்பைகளை எடுத்து வந்து அதைச் செயல்படுத்தச் சொன்னாரோ அதே மாதிரி நானாகவே செய்து பார்த்தேன் தங்கமாகிவிட்டது.
தங்கமான பின் கொண்டு போய் விற்று விட்டு வந்தேன் வந்த பின் குருநாதர் என்ன சொன்னார்...?
இங்கே வாடா...! என்றார்.
என்னிடம் இருந்து காசை எல்லாம் வாங்கிக் கொண்டார். இங்கே எத்தனையோ பேர் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் காசைக் கொடு என்றார். எனக்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் கொடுத்தார்
1.இனிமேல் இந்த மாதிரியான வேலையைச் செய்யாதே.
2.இதைத் தெரிந்து கொண்ட பின் உன் எண்ணம் எங்கே செல்கின்றது...? உன் ஆசை எங்கே செல்கின்றது...?
3.உன் மனதைத் தான் நான் தங்கமாக்கச் சொன்னேன்
4.தங்கத்தைச் செய்ய வேண்டும் என்று நீ ஆசைப்பட்டால் உன் மனம் பித்தளை ஆகிவிடும்… இரும்பாகப் போகும்… துருப்பிடித்து விடுமடா...!
5.இந்த வேலையை இனிமேல் செய்யாதடா...! என்று காசை எல்லாம் பிடுங்கிக் கொண்டார்.
ஆசை யாரை விட்டது…! குருநாதர் தங்கத்தைச் செய்தார். நான் பார்த்தேன்… எனக்கும் அந்த ஆசை வருகிறது.
ஏனென்றால் இரண்டாம் தடவை நான் தங்கம் செய்து விற்கும் போது “தங்க நகை செய்பவர்கள்... நீங்கள் எதை எதைச் செய்ய வேண்டுமோ செய்து கொடுங்கள். நாங்கள் விற்றுத் தருகின்றோம்... உங்களுக்கு வேண்டிய கட்டடம் எல்லாம் கட்டித் தருகிறோம்...!” என்று சொல்கின்றார்கள்.
இப்படியும் ஆள்கள் வருகின்றார்கள்... உடலின் இச்சைக்கு நிறையப் பேர் வருகின்றார்கள். காரணம்
1.இந்த ஆசை எப்படித் தூண்டுகின்றது...?
2.மனிதன் எப்படி வாழ்கின்றான்...? என்ற நிலைகளை எல்லாம் அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன்...?
உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் என்ற உணர்வுகளை வளர்த்துப் பிறவில்லா நிலைகள் அடையும் நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேசம்.
அதன் வழி நீங்கள் செயல்பட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கணவனும் மனைவியும் பெற்று வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ்ந்து… நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி… நஞ்சினை வென்று பேரருள் பேரொளி பெற்று… பெருவீடு பெருநிலை என்ற நிலையை அடைதல் வேண்டும்.
உங்கள் பார்வையில் உங்கள் குடும்பத்தில் தீமைகள் அகற்றப்பட வேண்டும். உங்கள் பார்வையில் உங்கள் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும்.
கல்வியில் சிறந்த ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானம் பெற்றிடும் அருள் சக்தி பெற்ற குழந்தைகளாக வளர்ந்திட வேண்டும். அதன் வழி நீங்கள் எல்லோரும் வாழ வேண்டும் என்று நான் (ஞானகுரு) வேண்டிக் கொள்கிறேன்.