ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2022

தாய் தந்தையரிடம் எத்தனை பேர் நாம் அருள் ஆசி வாங்குகின்றோம்...?

மனிதனாக வருவதற்கு முன் நாம் பாம்பாக இருந்திருப்போம்... தேளாக இருந்திருப்போம்.. நமது தாய் அவர்களைப் பாதுகாக்க நம்மை அடித்துக் கொன்று இருப்பார்கள்...
1.இந்த (நம்) உயிர் அவர் உடலுக்குள் சென்றிருக்கும்
2.போன உடனே அவர்கள் உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி வருகின்றது.

கருவாக ஆன பிற்பாடு தேளாக இருந்த... பாம்பாக இருந்த நம்மை... மனிதனாக உருவாக்குகின்றது நமது தாய். அப்போது நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்...?

நம் தாய் தந்தையினுடைய உயிர் தான்...! கடவுளாக இருந்து மனிதனாக நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள்தான்.

அம்மா அப்பாவைக் கடவுளாக நாம் மதித்துப் பழகுதல் வேண்டும் யாராவது நாம் நினைக்கின்றோமா...?

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தாயைத் திட்டுபவர்கள் தான் உண்டு. எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் உடனே தாயைத் திட்டுவார்கள்.
1.இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்...
2.உண்மையை உணர்தல் வேண்டும்.

பத்து மாதம் நம்மைச் சுமந்து உருவாக்கியவர்கள் தாய். பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும்... ஒரு நாளைக்குத் தலையிலே கல்லை வைத்துத் தூக்கிப் பாருங்கள். சுமக்க முடிகிறதா என்று...!

ஆனால் பத்து மாதம் நம்மைச் சுமக்கின்றது.

சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்... தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வையே எண்ணி எடுக்கின்றது.

இத்தனை அவஸ்தைகளும் பட்டுப் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.

விவரம் தெரிவதற்கு முன் நாம் நெருப்பைத் தொட முயற்சிப்போம். டேய்... டேய்... நெருப்புடா...! என்று நம்மைப் பாதுகாக்கின்றது... அந்தத் தெய்வமாக இருக்கின்றது.

இது நல்லது இது கெட்டது இது அசுத்தம் என்று அனைத்தையும் சொல்லிக் கொடுக்கக்கூடிய குரு யார்...?

நம் தாய் தான். ஆனால் எத்தனை பேர் நாம் தாயை மதிக்கின்றோம்...?

1.தாயை மதிப்பவர்கள் சிறிது பேர்தான்.
2.தாயின் அருள் வேண்டும்... எனக்கு நல்லது நடக்க வேண்டும்...! என்று வேண்டுபவர்கள் கொஞ்சப் பேர் தான்.

அந்த தாயின் உணர்வைப் பெறச் செய்வதற்குத் தான் குருநாதர் காட்டிய வழியில் இதை உணர்த்துகின்றோம்,

எத்தனையோ துன்பங்கள் பட்டு என்னை நீங்கள் வளர்த்தீர்கள். எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் அங்கே மறைய வேண்டும்.
1.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெற வேண்டும்
2.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் அவர் பெற வேண்டும்.
3.தாய் தந்தையர் என்றென்றும் எங்களுக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று
4.தாய் தந்தையரை நாம் வணங்கி எண்ண வேண்டும்.

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று தாய் தன் எண்ணத்தால் எடுத்துப் பதிவாக்கியிருக்கின்றது. நமக்குள்ளும் அந்தப் பதிவு உண்டு. இந்தக் காற்றிலும் அது உண்டு.
1.எவ்வளவு துயரப்பட்டாலும் சரி...
2.அம்மா... எனக்கு நோய் நீங்க வேண்டும் அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.தாயும் இதே மாதிரி என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றது
4.அந்த உணர்வை நுகர்ந்தீர்கள் என்றால் உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.

உதாரணமாக... காட்டுக்குள் செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். புலியோ யானையோ துரத்தி வரும் நேரத்தில் அம்மா...! என்று சொன்னால் போதும். அந்தப் புலியானாலும் யானை ஆனாலும் உங்களைத் தாக்காது.

என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் போகச் சொல்லி “தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது...?” என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர்.

போய்க் கொண்டே இருப்பேன். திடீரென்று புலி வந்தால் உடனே நான் “ஐய்யய்யோ...” என்று சத்தம் போடுவேன்.

அப்பொழுதுதான் குரு உணர்த்துவார்
1.டேய்...! உன் அம்மா எங்கேடா போனது...?
2.உன் அம்மாவை நினைடா...! என்பார்.

நினைத்து நான் அம்மா... என்று சத்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வரும் புலி அப்படியே நின்றுவிடும். இது எல்லாம் அனுபவத்தில் பெற்ற உணர்வு.

நீங்களும் இதே போல் தாயின் அருள் சக்தி பெற்று… ஞானிகள் காட்டிய வழியில் சென்று அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடுங்கள்.