ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2022

உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் நாம் பிறப்பு எடுக்கவில்லை

இந்தப் பூமியின் இயற்கைக் கதியுடன் வளர்ந்த பலா மரம் அது வளர்ந்து பலன் தருகிறது. அதனுடைய பலனாக ஒவ்வொரு தருணத்திலும் காய்த்துப் பல ஆண்டுகள் அந்த மரத்தினுடைய பலனை வெளிப்படுத்தியபின் அந்த மரம் பட்டு விடுகின்றது.

1.அந்த மரத்தின் பலனான பலாப் பழத்தின் சுவை பக்குவப்படும் நாள் இரண்டு தினங்களே (அறுத்த பின்)
2.அதனுடைய மணமும் சுவையும் அந்த இரண்டு தினங்களுக்குத் தான்...!
3.அந்த நேரத்தில் அந்தக் கனியை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்கின்றான்.

இரண்டு தினங்களுக்கு மேல் அப்படியே வைத்திருந்தால் அழுகிய துர்நாற்றமும் ஈ கொசு எறும்பு போன்ற பூச்சிகள் மொய்க்கத் தொடங்குகிறது. அதற்குப் பிற்பட்ட நாளில் அந்தக் கனியிலேயே புழுக்கள் புழுத்து விடுகின்றது.

பலாக் கனியின் பயனை இரண்டு நாளில் சுவையாக மனிதன் உட்கொள்கின்றான். அதே சமயத்தில் அந்த இரண்டு நாளிலேயே அதனைத் தன் உணவுக்காகப் பல நாட்கள் கெடாமல் பக்குவப்படுத்தும் வழியையும் மனிதன் செய்து கொள்கின்றான்.

பலா மரத்தின் கனியின் சுவையைச் சுவைப்பதற்காக மனிதன் அதனை மீண்டும் மீண்டும் பயிர் செய்கின்றான். மனித இனத்தின் உணவின் பெருக்கத்திற்கு வித்தாக்கி வளர்க்கின்றான்.

மனிதனின் பக்குவத்தால் பலா மரத்தின் வளர்ச்சியின் விகிதங்கள் பூமியின் இயற்கையில் கூடுகின்றது. ஏனென்றால் பலா மரம் தானாக வளரக்கூடிய நிலை அதிகம் இல்லை.

1.மனிதனின் செயல்பாட்டினால் பூமியின் இயக்கத்தில் தாவரத்தின் இனப் பெருக்கத்தை வளர்த்துக் கொள்வது போல்
2.உலோகக் கனி வளங்களின் வளர்ச்சியை மனிதனின் செயலால் இந்தப் பூமியின் இயக்கத்தில் வளர்க்க முடியவில்லை.

அதே போல் பூமியின் ஜீவ ஜெந்துக்களின் இன விருத்தியையும் நீர் நிலைகளில் வளரும் முத்துக்கள் போன்ற சில இனங்களையும் மனிதனின் செயல்பாட்டால் வளர்க்க முடிகின்றது.

1.பூமியில் உருவாகும் அனைத்துத் தனிமங்களையும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தும் மனிதனால்
2.அந்த உலோகத் தன்மையைத் தன்னுடைய செயலால் வளர்க்க முடியவில்லை விளைய வைக்கவும் முடியவில்லை.
3.ஆனால் இந்தப் பூமியின் ஜீவ நாடியே பூமிக்குள் விளையும் உலோகங்கள் தான்...!
(அதை விஞ்ஞானிகள் இது வரை உணரவில்லை)

ஆக இன்றைய மனிதனுடைய திறமை உயிரினங்களையும் தாவரங்களையும் தனக்கு உணவாக்கிக் கொள்ளும் தேவைக்காகச் செயல்பட்டு
1.அதனுடைய பெருக்கத்தின் வளர்ச்சிக்காகத்தான்
2.இன்றைய மனிதனின் ஞானச் செயலும் விஞ்ஞானமும் இந்தப் பூமியில் வளர்த்து வாழ்கின்றது.

இந்தப் பூமியின் ஜீவ நாடியான உலோகத்தை அழித்து வாழும் மனிதனின் ஞானம் அந்த உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும்
1.மெய் அறிவை மெய் ஞானத்தில் கூட்டினான் என்றால்
2.இந்தப் பூமியையே ஆட்சி செலுத்தும் “உயர் ஞானியாக” ஆகலாம்.

உலோகத்தின் சத்தைக் கொண்டு தான் இயற்கையின் கதியை இந்தப் பூமியின் பெருக்கத்தின் ஜீவ நாடியாக்க முடியும் என்பதனை மனிதனின் மெய் அறிவு இனிமேலாவது விழிப்படைதல் வேண்டும்.

ஏனென்றால் மனிதன் என்பவன் உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் இந்தப் பூமியில் பிறப்பு எடுக்கவில்லை. ஞானத்தின் பகுத்தறிவை மெய்யின் விழிப்படைந்து மனிதன் இந்தப் பூமியின் இயக்கத்தின் செயல் சூட்சமத்தில் சுழல வேண்டும்.

சூரியனும் பல கோள்களும் இந்தப் பூமியின் தொடர்புடன் சுழலும் பொழுது இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியில் வாழும் மனிதன் “இந்த மெய்யை அறிதல் வேண்டும்...!”