ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2022

முதுமையாகும் போது... “என்னை யாரும் கவனிக்கவில்லை” என்ற எண்ணத்தில் சாபமிட்டு ஆன்மா பிரிந்தால் எங்கே செல்கிறது...?

நாம் நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் கொண்டு எல்லோரிடத்திலும் பழகுகின்றோம். அன்பாகப் பழகும் பொழுது ஒரு நண்பனுக்கு நோய் என்ற நிலை வந்து விட்டால் அவருக்கு வேண்டிய உபகாரத்தை நாம் செய்கின்றோம்.

பற்றுடன் பாசத்துடன் நாம் அவரைக் காக்க உதவி செய்கின்றோம். உதவி செய்தாலும் அவருடைய உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது. அந்த அணுக்கள் நமக்குள் பெருகத் தொடங்கி விடுகின்றது.

அதே சமயத்தில் நோய்வாய்ப்பட்டவரோ தன் குடும்பத்தில் ஒன்றி இருப்பவர்களிடத்தில் எனக்கு மேல் வலிக்கின்றது... இங்கே வலிக்கின்றது... அப்படி இருக்கின்றது... சங்கடமாக இருக்கிறது... என்று எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்.

ஆனால்...
1.குறித்த நேரத்தில் எதிர்பார்த்தபடி அவருக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்றால்
2.நன்றாக இருக்கும் போது நான் இத்தனை செல்வங்களை இவர்களுக்கு தேடிக் கொடுத்தேனே.
3.பாவிகள் என்னை ஒருவரும் இப்போது கவனிக்கவில்லையே என்ற உணர்வு தான் வரும்.

காரணம் கவனிக்க முடியவில்லை என்ற இந்தச் சந்தர்ப்பம் இத்தகைய உணர்ச்சிகளை இவருக்குள் தூண்டுகின்றது. “பாவிகள்...” என்ற நிலையில் சாப அலைகள் அங்கே தொடர்கின்றது.

இத்தகைய சாப அலைகளாக இவர் தொடரப்படும் பொழுது அந்த குடும்பத்தில் உள்ளவர்களோ...
1.இவருக்கு நாம் இவ்வளவு தூரம் உபகாரம் செய்த பின்பும்
2.”இப்படி எல்லாம் பேசுகின்றாரே...” என்ற இந்த உணர்வுகளை அங்கே அவருக்குள் பரப்புகின்றது.

அவருக்குள் வெறுப்பின் தன்மை வருகின்றது.

வெறுப்பின் தன்மை வர வர அது இவரைக் கவனிப்பவர்களுக்குள்ளும் வளர்ந்து அவர்களிடத்தில் இருக்கும் நல்ல உணர்வுகளை அழிக்கும் தன்மையாக வருகின்றது.

எவ்வளவு நல்லது செய்தாலும் இப்படியே செய்து கொண்டிருக்கின்றார்... நாம் என்னத்தைச் செய்வது...? என்று வேதனைப்படுகின்றார்கள்.

இந்த வகையில் வேதனையான உணர்வின் அணுக்கள் இவர்கள் உடலிலும் உருவாகத் தொடங்குகின்றது. கருவாக உருவான பின் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது இங்கே அவரை நினைத்து வேதனை என்ற உணர்வுகள் வருகின்றது

வேதனையான உணர்வுகள் வரப்படும் பொழுது
1.அவர் எப்படி நோயாக உருவானரோ அதே நோய் இவர்கள் உடலிலும் வளரத் தொடங்கும்
2.அந்த மரபணுக்கள் இங்கே விளையத் தொடங்கி விடுகிறது.

குடும்பத்தில் யாராவது கர்ப்பமாக இருந்தால் இதை எல்லாம் எண்ணிப் பார்த்தாலே போதும்... கூர்ந்து கேட்டால் போதும்...! இதே உணர்வுகள் கருவில் இருக்கும் குழந்தைக்குள் விளைந்து விடும்.

இந்த மரபணு அங்கே ஈர்க்கப்பட்டு அந்த குழந்தைகளுக்கும் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் சக்தி இழக்கப்படுகிறது. அவர்களுக்கும் அந்த நோய் உருவாகத் தொடங்கி விடுகின்றது.

தவறு செய்யவில்லை... நுகர்ந்த உணர்வுகளை அறிகின்றோம் சந்தர்ப்பம் இதை உருவாக்கி விடுகின்றது. ஆனாலும் நண்பன் என்ற நிலைகளில் நுகர்ந்து பார்க்கும் பொழுது பற்று இங்கே வந்து விடுகின்றது.

அத்தகைய பற்று வந்துவிட்டால் இந்த உடலை விட்டு அவர் செல்லும் பொழுது
1.இத்தனை செல்வத்தைத் தேடி வைத்தேன்... என்னைக் கவனிப்பார் யாரும் இல்லை என்ற சாபமும்
2.நண்பன் மீது பற்றும் வரப்படும் பொழுது அந்த உயிரான்மா நண்பனுடைய உடலுக்குள்ளேயே வந்துவிடும்.

உங்கள் நண்பர் போய்விட்டார் என்று கேள்விப்பட்டால் உடனே “ஆ...“ நேற்று கூட நான் பேசினேனே என்ற இந்த உணர்வின் வேகம் கொடுக்கப்படும் பொழுது அந்த ஆன்மா இங்கே வந்து விடுகின்றது.

இந்த உடலுக்குள் வந்தால் அதே உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு அதே நோயை இங்கேயும் மாற்றும்.

மனிதனுடைய எல்லை அது அல்ல…!