வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான் அவனை நேரடியாகத் தாக்கவில்லை என்று இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். காரணம் என்ன…?
அதாவது குகை மீது இருக்கும் பாறையைத் தன் காண்டீபத்தால் தாக்கி வாசலை மூடிவிடுகின்றான்.
1.குகையில் கல்லைப் போட்டு மூடியவுடனே அதற்குள் வாலி அடைபட்டுவிடுகின்றான்… அவன் வளர்ச்சி குன்றுகிறது.
2.அவனைக் கொல்லவில்லை… அவன் செயலாக்கத்தைக் குறைக்கின்றான் என்ற நிலையைக் காட்டுகின்றனர்.
உதாரணமாக… வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் இங்கே வாலியாகின்றது. அதே சமயத்தில் நாம் நுகர்ந்த அந்த வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவில் முன்னாடி நிற்கின்றது.
1.ஆன்மாவில் இருப்பதைத் தான் நாம் சுவாசிக்க முடியும்.
2.சுவாசித்ததைத்தான் உயிர் இயக்கி அதனதன் உணர்ச்சிகளாக நமக்குள் தூண்டும்.
3.அதன் வழியிலே தான் நம் எண்ணம் சொல் செயல் எல்லாமே இருக்கும்.
அப்போது அந்த வேதனையான உணர்வலைகள் உள்ளே புகாதபடி தடுக்க வேண்டுமல்லவா…!
பல கோடித் தீமைகளை வென்றவன் தான் அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக உருவானது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் அதைச் செலுத்தினோம் என்றால் அதற்கப்புறம் மற்ற தீமைகள் உள்ளே செல்லாது.
1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவுகளைக் கூட்டப்படும் போது
3.இங்கே வலிமை பெறுகின்றது… மற்றதை ஈர்க்கும் சக்தி குறைகிறது.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்ட பின் அந்தச் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதன் வழி நம் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் சேர்க்க வேண்டும்.
அப்படி நினைவைச் செலுத்தினால் நம் உடலில் துருவ நட்சத்திரத்தின் சக்தி வலிமை பெறுகின்றது.
1.இந்த வலிமை பெறப் பெற இதனின் அழுத்தம் ஆக ஆக
2.வேதனை என்ற உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றுவிடுகிறது.
காலையிலிருந்து இரவு வரை நாம் கவர்ந்ததெல்லாம் (சுவாசித்தது)
1.சாதாரணமாக ஒரு சாண் நீளம் உடலைச் சுற்றி நமக்குள் ஆன்மாவாக இருக்கின்றது.
2.அதிலிருக்கும் வேதனை என்ற உணர்வின் தன்மையை மாற்றத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கச் சொல்கிறோம்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்து நம் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற வலுவைக் கூட்டக் கூட்ட
1.ஆன்மாவில் இருக்கும் தீமையான உணர்வுகள் நகர்ந்து நகர்ந்து சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து விடுகிறது.
2.நம் பிடிப்பில் இல்லாததால் சூரியன் அதைக் கவர்ந்து சென்றுவிடுகிறது
3.நம் ஆன்மா தூய்மை அடைகிறது.
நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்று இராமாயணத்தில் வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார். அதாவது வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான்… அவனை நேரடியாகத் தாக்கவில்லை.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து… சுவாசத்தில் வரும் தீமை புகாதபடி இங்கே அடைக்கப்பட்டு… அந்தச் சக்தி உடலுக்குள் வலிமையான பின் நம் ஆன்மாவிலிருந்து தீமைகளைப் பிரித்துவிடுகிறது… பிளந்து வெளியே தள்ளிவிடுகிறது.