ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 5, 2022

விஷத்தை வென்றிடும் நுண்ணிய உணர்வுகள் தான் இன்று நமக்குத் தேவை

 

இந்த உலகில் நடக்கும் சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் “ஆ... இப்படி ஆகிவிட்டதா...?” என்று எண்ணாதீர்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்... தொழில் வளம் பெருக வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் அந்தத் தீமையின் உணர்வுகள் இங்கே வருவதில்லை.

சிவன் ராத்திரி அன்று “நீ விழித்திரு...” என்றால்
1.வாழ்க்கையில் எப்பொழுது பிறருடைய துயரங்களைக் கேட்டறிகின்றோமோ
2.அந்த நேரத்தில் எல்லாம் விழித்திருக்க வேண்டும்.

எப்படி...?

ஈஸ்வரா... என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை வலுப்படுத்தி உடலுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் பார்க்கும் அனைத்துக் குடும்பங்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலமும் வளமும் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் வளம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் உணர்வுகள் அவர்கள் குடும்பத்தில் வளர வேண்டும் என்று இப்படி எண்ணினால்... “அவருடைய தீமைகள் நமக்குள் புகுவது இல்லை...”

1.இந்தச் சொல்லின் தன்மையை அங்கே சொல்லி
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருப்பீர்கள்...! என்று சொல்லப்படும் பொழுது
3.இந்த உதவியை அவருக்குச் செய்கின்றோம்... அவருக்குள் தீமைகள் புகாது தடுக்கின்றோம்
4.அவர்களும் அவ்வாறு எண்ணினால் அவர்களுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது
5.நமக்குள்ளும் தீமைகள் வருவதில்லை... நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

சிவன்ராத்திரி... விழித்திரு...! அன்றைய தினம் முழுவதும் இவ்வாறு நாம் தூய்மைப்படுத்தும் உணர்வாக இருந்தோமென்றால் நம் ஆன்மாவில் உள்ள கெட்ட உணர்வுகள் அப்புறப்படுத்தப்படுகின்றது.

எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏகோபித்துச் சொல்லும் பொழுது... தீமை செய்யும் உணர்வுகளுக்குப் பூமியில் ஈர்ப்புத் தன்மை இல்லை என்றால்... சூரியன் அவைகளை இழுத்துச் சென்று அதன் உணர்வின் தன்மையைக் கருக்கி... மற்ற பிரபஞ்சத்தில் பரவச் செய்து அந்த விஷத்தின் தன்மையை மாற்றி விடுகின்றது.

அதாவது (பொதுவாக)...
1.தான் கவரும் விஷத்தைச் சூரியன் பாதரசத்தால் மோதி வெப்பத்தையும் காந்தத்தையும் உருவாக்குகிறது
2.விஷத்தைப் பலவீனப்படுத்தி அதை அகற்றி விடுகின்றது.
3.நல் உணர்வாக பரவச் செய்து விஷத்தினைக் குறைக்கச் செய்கின்றது.
4.இப்படி மற்றதுடன் கலந்து இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

உதாரணமாக... ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதைக் குடித்தவர்களுக்கு எல்லாம் மயக்கம் வருகின்றது.

ஆனால்
1.ஆயிரம் குடம் பால் அந்த விஷத்தின் தன்மையில் பட்டால்
2.இந்தப் பாலைக் குடித்தோருக்கெல்லாம் “வீரியத்தன்மை...” கிடைக்கின்றது.

இதைப் போன்றுதான் கடல் அலைகள் போலப் பரவப்படும் பொழுது விஷத்தின் தன்மை அங்கே சேர்க்கப்படும்போது அது பிரபஞ்சத்தில் மற்றதன் நிலைகளை “தீமைகளை நீக்கும்... நல்ல உணர்ச்சிகளை உருவாக்கும் சக்தியாக...” அங்கே மாற்றுகின்றது.

ஆகவே எதனின் உணர்வைச் சேர்க்கின்றோமோ அதனின் உணர்வை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.
1.அருள் ஞானிகளின் உணர்வை ஆயிரம் குடம் பாலைப் போன்று ஊற்றினால்
2.விஷத்தை வென்றிடும் ஆற்றலைப் பெற்று நாமும் மகரிஷிகளைப் போன்று ஆக முடியும்.