ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 17, 2022

பிரம்ம முகூர்த்தம்

 

2000 சூரியக் குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து எப்படி வாழ்கிறதோ ஒவ்வொரு உடலும் ஒரு பிரபஞ்சத்தைப் போன்றது தான்.

அகண்ட அண்டத்தில் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் உண்டு. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நம் பூமியைப் போன்று உயிரினங்கள் வாழக்கூடிய பூமி உண்டு.

அதில் வடிகட்டிய உணர்வு கொண்டு தாவர இனங்களும் உண்டு... உயிரணுக்களின் வளர்ச்சியும் உண்டு. அதனதன் உணர்வுக்கொப்பத்தான் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிரனங்களின் வளர்ச்சிகள் உண்டு. மற்ற பிரபஞ்சத்தில்
1.நம் பூமியைக் காட்டிலும் வளர்ச்சி பெற்ற மனிதர்களும் உண்டு.
2.நம்மைக் காட்டிலும் கூழையான மனிதர்களும் உண்டு.
3.கூழையான நிலையில் சிந்தனை வலுவானவர்களும் உண்டு.

இப்படி இந்த 2000 சூரியக் குடும்பத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

முதலில் ஒரு சூரியன் உருவாகி 27 நட்சத்திரங்கள் உருவாகி அதன் வழிகளிலே வளர்ச்சியாகிப் பெரிய அகண்ட அண்டமானது. அந்த அண்டத்திற்குள் இது ஒரு பிரபஞ்சம்.

இப்படி 2000 சூரியக் குடும்பங்கள் உருவானது ஒரு அகண்ட அண்டம் என்றால் இதைப் போன்று எத்தனையோ அண்டங்கள் உண்டு.
1.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் நாம் வாழ்கின்றோமே தவிர
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளாது வாழ முடியாது... வாழவில்லை.

அதைப் போன்று தான் மனிதனுக்கு மனிதன் இன்று தொடர்பில்லாது யாரும் இருக்க முடியாது. யாரைச் சந்தித்தாலும் நம் சந்தர்ப்பம் அவர் படும் வேதனைகளை நுகர்ந்தால் நமக்கும் வேதனை வருகின்றது... அந்தச் சந்தர்ப்பத்தின் மூலம்...!

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தைத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் சேர்ப்பிக்கும் நல்ல சந்தர்ப்பமாக உருவாக்க வேண்டும். தீமையை நீக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கினால் நமக்குள் தீமை என்ற உணர்வு வராதபடி தடுக்கலாம்.

அதற்குத்தான் உங்களுக்கு இப்போது இந்தப் பயிற்சி.

1.”பிரம்ம முகூர்த்தம்...” என்று சொல்வார்கள்
2.உயிர் ஒவ்வொன்றையும் பிரம்மம் ஆக்குகின்றது...
3.இந்த உயிரைப் போன்றே உணர்வை ஒளியாகப் பிரம்மமாக்கும் நேரம் இது.

ஆகவே இருளை அகற்றி ஒளி பெறும் அந்த நேரம்தான பிரம்ம முகூர்த்தம் என்பது.

இருளை அகற்றி அறிவென்ற தெளிவாகத் தெரியும் இந்த நேரத்தில் உங்கள் கவனம் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டும்,

1.உங்கள் உறுப்புகளை இயக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்யும் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதுதான் துருவ தியானம்.