கேள்வி:
நண்பர் ஒருவர் வயிற்று வலி என்று என்னிடம் வந்தார். வலி நீங்கிவிடும் என்று சொன்னேன். அவருக்கு நன்றாகி விட்டது... ஆனால் எனக்கு வயிற்று வலி வந்துவிட்டது. இதற்கு என்ன காரணம்...!
பதில்:
தியான வழியில் பொதுவாக என்ன செய்கிறார்கள்...? நமக்கு இந்த உயர்ந்த சக்தி கிடைத்தது என்று எல்லாம் செய்கின்றார்கள். ஆனால் பிறருடைய தீமையான உணர்வுகள் தனக்குள் வராதபடி முதலில் ஆத்ம சுத்தி செய்வதில்லை.
நாம் ஆத்ம சுத்தி செய்து விட்டால் அந்த நோய் நமக்கு வராது தடுக்கப்படும். அதற்குப்பின் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று சொன்னால் அவர்கள் உடலும் நலமாகும்.
அப்படி இல்லாதபடி...
1.எடுத்த உடனே அவர் உடல் எல்லாம் நலமாக வேண்டும் என்று பாசத்தால் எண்ணினால்
2.உடனே ஜிர்ர்ர்ர்ர்... என்று உங்கள் உடலுக்குள் அவர் உணர்வு வந்துவிடும்
3.அவர் நன்றாகி விடுவார் உங்களுக்கு வயிற்று வலி வரத் தான் செய்யும்.
உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆத்ம சுத்தி என்ற வலுவான ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். நாம் எடுக்கக்கூடிய உணர்வுகள் அந்தப் பக்தி மார்க்கத்தின் வழி வந்ததால் அத்தகைய பாச உணர்வின் செயலே வருகின்றது.
குருநாதரின் உடலிலே எல்லாமே உண்டு. அவரும் பக்தியின் நிலைகளில் செயல்பட்டவர் தான். அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் எத்தனையோ இருக்கிறது.
ஆனால் அவர் உடலிலிருந்து
1.அருள் ஞானத்தைப் பெற்ற உணர்வுகளும் உண்டு
2.இருளை அகற்றிய உணர்வுகளும் உண்டு
3.விஷத்தை நீக்கிய உணர்வுகளும் உண்டு
4.ஒளியான உணர்வுகளும் அவரிடம் உண்டு
இப்பொழுது யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது இருளை நீக்கும்... நஞ்சை வெல்லும்... உணர்வுகளைத் தான் உங்களிடம் கொடுக்கின்றோம் இதை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு மற்ற தீமைகள் வராது தடுக்கலாம்.
நான் தியானம் செய்தேன். பாருங்கள்... எண்ணியபடி நடக்கின்றது என்று சொன்னாலும் உங்களுக்கு வயிற்று வலி ஏன் வருகிறது...?
அதற்குத் தான் இதைச் சொல்வது. எப்போதுமே முதலில் அந்த ஞானத்தின் வழியில் அருள் சக்திகளை எடுத்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்டு அதற்குப் பின் “உங்களுக்கு நோய் நீங்கிவிடும்” என்று சொன்னால் சரியாகும்.
இல்லாமல் போனால் அவர்கள் உடலில் இருப்பதை இழுத்து உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும். அவர் நன்றாக ஆகிவிடுவார்.
ஆகவே எப்போதுமே ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும்.
1.சந்தர்ப்பத்திற்குத் தக்க அந்த உணர்வின் ஞானங்களும் வரும்.
2.அந்த ஞானத்தை அருள் வழியில் பயன்படுத்த வேண்டும்
3.நடக்கின்றது என்ற ஆர்வத்தில் பக்குவமில்லாது செய்தால் அதில் சில தீமைகளும் வந்துவிடும்.
குருநாதர் சொன்ன முறைப்படி காட்டிற்குள் நானும் செல்லப்படும்போது ஒவ்வொரு மிருகங்களுக்குத் தக்கவாறும் சில உணர்வுகளை எடுத்து அந்த ஒலி அலைகளை எழுப்பினால் எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.
யானைக் கூட்டம் இருந்தால் அதற்கென்று ஒரு ஒலி அலைகளை எடுத்துப் பரவச் செய்தால் யானைகள் அமைதியாக இருக்கும்.
இத்தகைய உபாயங்களைக் காட்டிற்குள் செய்தாலும் நாட்டிற்குள் மோசமான கரடி புலி எல்லாமே இருக்கின்றது. இதில் இருந்து எப்படித் தப்பிப்பது...?
காட்டிலே தப்பித்தாலும் நாட்டிற்குள் மனிதர்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால் முடியாது. உடனே அது நம் மீது பாயும். ஒருவருக்கு நன்மை செய்தால் உடனே பதிலுக்கு எப்படி இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று திரும்ப வரும்.
1.நீங்கள் ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள்
2.அவர்கள் அடுத்து நிமிர்ந்த உடனே நீங்கள் தாழ்ந்து விடுவீர்கள்
அதனால் நாம் எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.
மற்றவர்களைத் தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யத் தூண்ட வேண்டும்.
1.நீங்கள் இதைச் செய்யுங்கள் உடல் நலமாகும் என்று சொல்லி இந்த வாக்கினை பதிவு செய்ய வேண்டும்
2.ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதை எடுக்கச் சொல்ல வேண்டும்.
நானும் (ஞானகுரு) எத்த்னையோ பேருக்கு ஆசீர்வாதம் செய்கிறேன். இந்த உணர்வுகள் அங்கே சென்று வேலை செய்கின்றது... நோய் கீழே இறங்குகிறது. நான் அதை இழுத்துக் கொள்வதில்லை.
1.ஆனால் நீங்கள் இழுத்துக் கொள்கின்றீர்கள்.
2.அப்படி இழுப்பதால் தான் அந்த வயிற்று வலி உங்களுக்கு வந்தது.
என்னிடம் எத்தனையோ மோசமான நிலையில் வருகின்றார்கள். அதை எல்லாம் என் உடலில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்...? எனக்கு ஒர் பாதுகாப்பு கட்டிக் கொண்டு வரவேண்டும் அல்லவா.
அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.