ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 17, 2022

விஞ்ஞானத்தால் காண முடியாததை மெய் ஞானத்தால் அறிய முடியும் - ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானம் கொண்டு இன்று பல ஏவுகணையின் மூலமாகப் பல மண்டலங்களின் உண்மை நிலையறியத் தன் சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறியப் பார்க்கின்றான் இன்றைய மனிதன்.

1.ஒவ்வொரு மண்டலத்திலும் மாறுபட்டதன் நிலையை அறியும் ஆவலில்
2.தன் எண்ண சக்தியை விஞ்ஞானத்தில் செலுத்தி அறிந்திட எண்ணுகின்றான்.

அனைவருக்கும் பொதுவான அச்சக்தியை ஒவ்வொருவரும் உணர்ந்தே தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தினால் ஜெபம் கொண்ட நிலையில் எம் மண்டலத்திற்கும் அவரவர்களின் ஆத்மாவுடன் இவ்வுடலின் சக்தியையும் சேர்த்தே பல மண்டலங்களுக்குச் சென்று அம் மண்டலங்களில் உள்ள உண்மை நிலையை அறிந்து வரலாம்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு உதித்து வாழ்ந்ததுவோ அந்த மண்டலத்தை விட்டுப் பிற மண்டலத்தில் வாழ்வதற்கு அதற்குச் சக்தியில்லை.

1.சுவாச நிலை மாறுபடும் பொழுது வாழும் தன்மையும் அற்று விடுகிறது.
2.எம் மண்டலத்தில் இவ்வுயிரணு ஜீவன் பெற்றதோ
3.அந்நிலையிலிருந்து மாறுபட்டால் எந்த உயிரணுவினாலும் வாழ்ந்திட முடியாது.

நம் பாடத்தில் இவ்வாத்மா அழிவதே இல்லை இவ்வுடல்தான் மாறுகிறது என்றேன். அப்பொழுது இவ்வழியாத ஆத்மா பிற மண்டலத்துக்குச் சென்றால் மட்டும் அழிந்துவிடுமா...? என்பீர்.

எந்த மண்டலத்தில் எந்த உயிரணு தோன்றியதோ அவ்வுயிரணு என்ற ஆத்மாவானது அதன் சுவாசம் கொண்டு உயிர் என்னும் ஜீவனைப் பெற்ற இக்காற்று மண்டலத்திற்கு மேல் செல்லும் சக்தி அவ்வுயிரணுவிற்கு இல்லை.

இன்று விஞ்ஞானம் கொண்டு பிற மண்டலத்திற்கு எடுத்துச் செல்லும் ஜீவாத்மாக்களும் அந்நிலையில் இவர்கள் விட்டு வந்தாலும் (நாய், பூனை, குரங்கு) அந்நிலையின் சுவாச நிலைக்கும் இஜ்ஜீவாத்மாவின் சுவாச நிலைக்கும் ஏற்காத தன்மையில் அவ்வாத்மாவை எம்மண்டலத்தில் இருந்து வந்ததோ அம்மண்டலத்தின் நிலைக்கு ஏற்காத தன்மையில் உந்தித் தள்ளிவிடும். இனம் இனத்துடன்தான் சேரும்.

ஆனால் இங்கிருந்து பல உயிரணுக்களை.. உயிரினங்களை... எடுத்துச் சென்று மற்ற மண்டலத்தில் அங்கே வாழ்ந்திட முடியுமா...? என்பதனை அறியப் பல சக்திகளைச் செயலாக்குகிறார்கள்.

எந்த மண்டலத்திலும் உள்ள உயிரணு பிற மண்டலத்திற்குச் சென்று வாழ்ந்திட முடியாது. ஆனால் நம்முள் உள்ள சக்தியை அவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி ஜெபம் கொண்டால் சகல நிலையையும் அறிந்திடலாம்.

சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் எந்த மண்டலத்திலும் வாழும் நிலைக்கு வந்திட முடிந்திடும். இன்று நம்மில் இருந்து சென்ற பல சூட்சும நிலை பெற்றவர்கள் எம்மண்டலத்திலும் செல்லும் பாக்கியத்தைப் பெற்றவராய் இருக்கின்றார்கள்.

இன்று சூரியனில் சென்று வாழலாமா...? பெரும் நெருப்பு கோளமான அந்நிலைக்கு எப்படிச் செல்வது...? என்று விஞ்ஞானம் கொண்டு ஏவுகணை அனுப்புபவனும் சூரியனின் நிலையைக் கண்டு அஞ்சுகின்றான்.

சூரியனின் நிலை குளிர்ந்த நிலை. நம் பூமியைப் போல் காலை மாலை இரவு என்று மாறுபட்ட நிலை அங்கில்லை. இங்கு எப்படி நம் நிழலைக் காணுகின்றோமோ அந்நிலையும் அங்கில்லை.

அதி சுவையான நீரும்... ஆனந்த மயமான மணமும்... உள்ள பூமி அது. இந்நிலையில் உள்ளது போல் மழை நிலையும் மாறுபட்ட நிலையில் அங்கு உள்ளது. மழை உண்டு ஆனால் மாறுபட்ட நிலை. பனியான மழை. எப்பொழுதும் அந்நிலை இருந்து கொண்டே உள்ளன.

காட்சி:
அந்நிலையில் ஜீவன் பெற்று பல உயிரணுக்கள் வாழ்கின்றன. நாம் இவையெல்லாம் கதைக்குச் சொல்வதைப் போல் சொன்னதின் நிலையல்ல. உள்ளதின் உண்மையைத்தான் ஜெபம் கொண்டு அறிந்ததில் வெளியிடுகின்றோம்.

ஒவ்வொருவரின் சக்தியிலும் அறிந்திடும் தன்மையுண்டு. இப்பூமியைப்போல் பல நூறு மடங்கு பெரியவையான அச்சூரியன் சுழலும் வேகத்திலேயே அதன் ஈர்ப்புத் தன்மையும் பல மடங்கு அதிகமாகப் பெறுகிறது.

இச்சூரியனைச் சுற்றி எப்படி 48 மண்டலங்கள் அதன் ஈர்ப்பு நிலைகொண்டு வாழ்கின்றனவோ அதைப்போல் சூரியனும் பல சூரியன்களின் சக்தியின் உதவியால் வாழ்கிறது.