ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2022

நம்முடைய பசி எதிலே இருக்க வேண்டும்...?

 

சிவன் ராத்திரி அன்று நீ விழித்திரு... பசித்திரு... தனித்திரு... என்று சொல்வார்கள்.

வேதனை என்ற உணர்வுகள் தனக்குள் புகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தனித்திரு... விழித்திரு. ஆனால் அதைப் பெற வேண்டும் என்று பசித்திரு

அதாவது...
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் பசித்திரு
2.தீமைகள் உன்னைப் பற்றிடாது தனித்திரு...!
3.தீமைகள் புகாது விழித்திரு...!

கஷ்டம் என்று வந்தால்... விழித்திருந்து நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும். ஆக... அதைப் பெற வேண்டுமென்று பசித்திருக்கும் போது தீமைகளைப் பற்றிடாது தனித்திருக்க முடியும்.

அதை எல்லாம் உங்களால் பெற முடியும்.

தனித்திரு என்றால் வீட்டில் இருக்கும் மனைவி பிள்ளைகளை விட்டு விட்டுச் சாமியாராகப் போவதல்ல... அது எல்லாம் அறியாமை...!

ஆகவே... மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லோரும் பெற்று... தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழும் நிலையும் உடலில் அமைதியும் சாந்தமும் விவேகத்துடன் வாழ்ந்து இந்த உடலுக்குப்பின் பிறவியில்லை என்ற நிலையை அடையுங்கள்.
1.இந்த மனித உடலில் இப்போது இதை பெறத் தவறினால்
2.இனி அடுத்து மனித உடல் துரிதமாகக் கிடைக்குமா... என்பது சந்தேகமே...!

காரணம் உலகம் விஞ்ஞான அறிவால் மாசுபடும் நிலை வந்துவிட்டது.

கடவுளின் அவதாரத்தில் வராகன்... சாக்கடையிலிருந்து எப்படி நல்லதை நுகர்ந்ததோ... இந்தச் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து அதற்குள் மறைந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுக்கப் பழக வேண்டும்.

கண்ணின் நினைவைத் துரித நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வருவதை உயிர் வழி கவர்ந்து உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்யுங்கள்.

காலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் உடலில் ஒவ்வொரு அணுக்களுக்கும் அந்த வீரியத் தன்மையைச் செருகேற்றிக் கொள்ள வேண்டும்.

இருளை நீக்கி... சிந்தித்து செயல்படும் ஆற்றல் பெற்று அமைதியான வாழ்க்கையும் அருள் ஞானத்துடன் வாழ்ந்தும் சாந்தமும் விவேகத்துடன் இந்த வாழ்க்கை வாழும் அருள் சக்தி பெறுங்கள்.

இதைப் படிப்போர் அனைவரும் இந்த உடலுக்குப்பின் ஏகாந்த நிலை பெற்று... எதிர்ப்பே இல்லாது ஒளியின் உணர்வாக மாறி... என்றும் ஏகாந்த நிலை பெற எனது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்கள் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
1.அருள் வழியில் இருளை அகற்றி... மெய் ஞான உலகுடன் நீங்கள் ஒன்றி நீங்களும் வளர்ந்து உலக இருளை நீக்கி...
2.அனைவரையும் மெய் ஞான வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞான அன்பர்களாக நீங்கள் அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).