ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 21, 2022

நம்முள் உள்ள பல உயிரணுக்களின் இயக்கத்திற்கு நாம் அடிமை ஆகிவிடக்கூடாது - ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு உடலும் மாறுபட்டாலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறப்பிலும் குழந்தை பருவம் முதல் தன்னைத்தானே உணர்ந்து வாழும் காலம் வரை நம்மை ஒருவர் வழிநடத்தித்தான் நாம் வாழும் காலம் வருகிறது.

1.அன்னை அன்னத்தை ஊட்டத்தான் செய்வாள்… அதை ஏற்று உண்ணுவது நாம் தான்
2.பள்ளியில் பாடத்தை உபாத்தியாயர் போதித்தாலும் அதை ஏற்று மதிப்பெண் பெறுவதும் நாம் தான்
3.நம்மை நாமே உணரும் காலம் வரும்வரை வழியைத்தான் நமக்குணர்த்துவர் பெரியோர்
4.ஏற்றுச் செயல்படுவது நம் செயலில்தான் உள்ளது.

ஒவ்வொரு ஜென்மத்திலும் மாறி நாம் வந்தாலும் முன் ஜென்மத்தின் நினைவு இஜ்ஜென்மத்தில் இருப்பதில்லை. முன் ஜென்மத்தின் தொடரின் அறிவுடன் தான் இஜ்ஜென்மத்தில் பிறக்கின்றோம்.

அவ்வறிவுடன் இஜ்ஜென்மத்தில் நாம் பிறந்ததின் பயனைக்கூட்டி வாழும் பக்குவத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்படும் நிலைக்கு நம்முள் உள்ள சக்தியை நாமேதான் செயல்படுத்தி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வாண்டவனும் வந்து நமக்கு அனைத்தையும் அருள்வதல்ல…!

தீய வழிக்குச் செல்பவனுக்கும் அவன் செல்லும் வழியிலேயே அவன் சக்தியை வளர்ப்பதனால் அத்தீய சக்தியே அவன் வழியில் கூடி மென்மேலும் அந்நிலையிலேயே செல்கின்றான்.

நல் உணர்வை வளரச் செய்தால் அந்நிலைதான் வளரும். ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலை அமைவதுவும் அவரவர்கள் அமைத்துக் கொண்ட நிலைதான்.

எவ்வெண்ணத்தில் நாம் உள்ளோமோ அவ்வெண்ணத்தின் வழித் தொடர்தான் நம்முடன் வளரும். வியாதியில் உள்ளவன் அவ்வெண்ணத்தையே வளர விட்டால் அவ்வெண்ணத்திற்கேப வளரும் நிலைதான் தொடர்ந்து வரும்.

ஒவ்வொரு வழி நிலையும் இதைப் போல்தான் வருகின்றது.

விஞ்ஞானத்தில் பல நிலைகளை அறிபவனும் அவன் எண்ணத்தின் வளர்ச்சிப்படிதான் அவன் வழி நடக்கிறது. ஆக எந்த ஒரு நிலையிலும் அவரவர்களின் எண்ண நிலையை வளரும் நிலைப்படுத்தி வளர விடுகின்றோமோ அந்நிலையில்தான் வாழ்க்கை நிலை அமைகிறது.

நம் எண்ணமுடன் இக்காற்றினில் கலந்துள்ள பல உயிரணுக்கள் நம் உயிரணுக்களுடனும் கலந்து விடுகின்றன. நாம் ஏற்ற ஒரே வழியில் செல்லும் பொழுது நம்முள் கலந்துள்ள அவ்வுயிரணுவும் நம்முடன் செயல்பட வருகிறது.

1.நம் எண்ண நிலையில் மாற்றம் வரும் பொழுது
2.நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளாத வழியில்
3.நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணுவின் எண்ணத்தை
4.நாம் வேறு எண்ணத்திற்குச் சென்றாலும்
5.நம்மைத் தடைப்படுத்துகிறது நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணு.

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பல உயிரணுக்கள் ஏறித்தான் உள்ளன. நம் ஆத்மாவை நாமே ஆண்டு… நம்மை நாம் உணர்வது என்பதன் பொருள்…
1.நம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல்
2.நம் ஆத்மாவின் வழியில் நமக்குகந்த சக்தி நிலையில் நாம் வாழும் நிலைப்படுத்தி
3.சீராக வாழும் பக்குவத்தை நாம் பெற வேண்டும்.