ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 4, 2022

உடலான நிலத்தைப் பயன்படுத்தி மெய் ஞானப் பயிரை அதிலே விளைய வைக்க வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

இயற்கையின் சக்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறிக் கொண்டேதான் உள்ளது. பச்சைப் பசேலென்று மழைக் காலத்தில் புல் பூண்டு படர்ந்துள்ள பூமியில் அது வளர்ந்து பழுப்பாகி காய்ந்து சருகாகி... மீண்டும் மழையில்லாக் காலங்களில் அவ்விடத்தில் வெடிப்பு விழுந்து... அங்குள்ள மண் இறுக்கம் கொள்ள... மீண்டும் மழை வர... பிறகு அதே இடத்தில் வளரக்கூடிய புல் பூண்டுகளின் வளர்ச்சி நிலை மாற மாற... இயற்கையின் தொடர்பிலேயே பல மாற்றங்கள் நொடிக்கு நொடி மாறுகின்றது.

இதைப் போன்றே மனித உணர்வின் எண்ணம் எடுக்கும் அலை ஒலியின் பதிவு நிலையைக் கொண்டு... ஆத்மா வளர்க்கும் ஒளித் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

பூமியில் இன்றைய மனித ஞானத்தைக் கொண்டு தனக்கொத்ததை வளர்த்துப் பக்குவப்படுத்தி ஆகாரத்தையும் மற்றெல்லாச் செயற்கைத் தன்மைகளையும் பூமியின் வளத்திலிருந்து மனித வாழ்க்கைக்கு வளர்த்துப் பயன்படுத்தினாலும்...
1.எந்த மண்ணிலிருந்து தனக்கொத்ததை எடுத்து மனிதன் பயன்படுத்தினாலும்
2.அதை வெறும் மண்...! என்று தான் ஒதுக்கி விடுகின்றான்.

மண்ணிலிருந்துதான் உணவுப் பொருட்களை விளைவித்து உட்கொள்கின்றோம். ஆனால் அம்மண்ணை அவ்வுணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை.

இப்பூமியின் மண் வளத்தைக் கொண்டு வாழும் மனிதன் அம்மண்ணிலிருந்து சரீர ஜீவனை வளர்க்க தனக்கொத்ததைப் பயன்படுத்துவது போல் இச்சரீரத்தைப் பூமியின் கோளைப் போன்று இவ்வுயிராத்மா வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்.

1.ஜீவ வாழ்க்கையில் இச்சரீர உடலை ஓர் கோளாக எண்ணி…
2.இச்சரீரம் மண்ணாக… நாமெடுக்கும் உணர்வு ஜீவனாகி…
3.அஜ்ஜீவனின் பலனே ஆத்மாவின் ஒளியாக சத்தாகும் அமைப்பாய்…
4.இச்சரீரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்தும் மற்றக் கோள்களிலிருந்தும் நம் பூமியின் சுழற்சியால் அந்தந்த இடத்திற்கொப்ப ஈர்ப்பின் அமில செயல் வளர்ந்து... பல கோடித் தன்மைகள் பல உன்னத சக்திகளை பூமி வளர்த்துக் கொண்டு சுழற்சியின் கதியில் எண்ணமில்லா நிலையிலும்... பல கனி வளங்களிலும்... அபூர்வ இயற்கைத் தன்மைகளும்... இயற்கை சக்திகளும் வளருகின்றது.

இருந்த பொழுதும்
1.எல்லா நிலைகளையும் உணரவல்ல மனித உணர்வின் எண்ண ஞானம்...
2.மெய் ஞானத்தின் இயற்கை சக்தியை
3.மெய் ஞானிகள் மெய்யுணர்வில் மெய்யறிந்து மெய்யாக்கிய மேன்மையை
4.மெய் ஞானியாய் ஒவ்வொருவருமே தன் பகுத்தறிவின் உண்மை உணர்ந்து வளர்ந்திட வேண்டும்.

நம் ஜீவ உடல் உண்மையல்ல...! இயற்கையின் கதியில் ஒரு நாள் பிறப்பெடுக்கும் பூச்சியும்... ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் நாகமும்... சரீர உணர்வில் மெய்யறிய மனித நிலையின் உணர்வலையில் மோதிடும் ஞானத்தின் பகுத்தறிவால்தான் உயர் ஞானத்திற்கு செயலாக்கக்கூடிய செயல் தன்மைக்கேற்ற கோளமிது.

ஜீவ உடல் கொண்ட உயிராத்மாவிற்கு “உடல்” ஒரு இயக்கக் கோளம். ஆகவே இத்தகைய உண்மையை உணர்ந்து உய்யும் ஆத்மாக்களே....
1.மெய் ஞானிகளின் மெய்யறிய மெய் ஞானிகளின் தொடர்பைப் பெறுங்கள்.
2.வானக்கோள்களில் மறைந்துள்ள எண்ணிலடங்கா உண்மை சக்தியில்...
3.என்றுமே மங்கா ஒளித் தன்மையை வளர்க்கும் சப்தரிஷிகளின் தேவ ரிஷியாகச் செயலாக்கும் செயலுக்கு...
4.மனித உணர்வின் எண்ண உடல் கோளத்தைப் பக்குவப்படுத்துங்கள்.