ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 13, 2022

“எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும்...” என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்

 

1.தன் உடலில் எது இயக்குகின்றது...? என்று தனக்குத் தானே சிந்தித்து
2.தீமைகள் நம்மை இயக்கவிடாது தடுத்து அருள் உணர்வைப் பெருக்கி
3.இருளை அகற்றி வாழ்க்கையில் செவ்வென வாழ்ந்து
4.இந்த உடலுக்குப்பின் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெறும் தகுதி பெறும் சந்தர்ப்பம்தான்
5.இங்கே தியானத்தில் யாம் கொடுக்கக்கூடிய பயிற்சி.

ஆனால் சிலருடைய ஆசைகள் எப்படி இருக்கிறதெனறால் உடலைப் பார்ப்பதற்குத் தான் தியானம் செய்கின்றார்களே தவிர... உடலுக்குப்பின் நாம் எப்படி நிலையாக இருக்க வேண்டும்...? என்று எண்ணவில்லை.

அழியாத நிலைகள் கொண்டு உயிர் என்றுமே நிலையாக இருக்கின்றது. அதை நாம் தியானித்து அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இல்லை.

1.தியானம் இருந்தேன் நல்லதானது...
2.காப்பாற்றினார் கடவுள் ஆகிவிட்டது...! என்ற இந்த உணர்வுக்கு நாம் சென்றால்
3.மீண்டும் புவியின் ஈர்ப்புக்குள் தான் வருகின்றோம்.

அப்படி இல்லாதபடி எல்லோரும் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த நிலையை நாம் கொண்டு வர வேண்டும்.

வாழ்க்கையின் நிமித்தம் எத்தனையோ நினைக்கின்றோம்... எண்ணியபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் உடனே வருத்தம் வருகின்றது... அப்பொழுது வேதனை வருகின்றது.

அப்போது எந்தப் பற்று வருகிறது...? வேதனை என்ற பற்று தான் அதிகமாக வருகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்குண்டான நிலைகளை நாம் செயல்படுத்த வேண்டும்.

எப்பொழுதுமே... எதிலுமே... உடல் பற்று இல்லாதபடி... உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதே போன்று எல்லோருக்கும் அந்த அருள் பெற வேண்டுமென்ற அந்தப் பற்றினை நாம் வளர்க்க வேண்டும்.

அதைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் இருள் என்ற நிலையைப் பற்றற்றதாக மாற்றி விட வேண்டும். “இது தான் தியானம்...”

1.தியானம் இருந்தேன் கல்யாணம் நடந்தது...
2.தியானம் செய்தேன் சொத்து வந்தது... அது வந்தது... இது வந்தது... என்று வெறுமனே சொல்லிக் கொள்ளலாம்.
3.ஆனால் இதற்கு ஆசையைக் கூட்டக் கூடாது.

நலமாக வேண்டும் என்று ஆசைப்படலாம்... அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற அந்த இச்சை வரவேண்டும். இச்சாசக்தி... கிரியாசக்தி...!

அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற இச்சைப் படும்பொழுது உயிரிலே பட்டுக் கிரியையாகி அந்த ஞானத்தின் வழி நம்மை வழிநடத்தும்.

உடலுக்கு என்று நாம் இச்சைப்பட்டு அதைக் கிரியை ஆக்கினால் இந்த வாழ்க்கையின் நிலைக்குத்தான் வரும்.
1.சிறு குறையானால் தடைப்பட்டால் ஞானத்தை இழக்க வேண்டி வரும்.
2.இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருளைப் பெறுக்க வழி காட்டுகின்றோம்.

வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கி “எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவதுதான் ஏகாதசி விரதம்...”

அன்று ஒரு நாள் முழுவதும்... அந்த மாதம் முழுவதற்கும் அதில் வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்... அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டுமென்ற ஏகாந்த நிலை வரப்படும் பொழுது நமக்குள் ஏகாதசி ஆகிறது.

உடலை விட்டுப் பிரியும் சமயம் யாரிடமும் பகைமை இல்லாது சென்றால் பிறவியில்லாத நிலை அடைகிறோம்... பத்தாவது நிலை அடைகின்றோம்.... ஏகாதசி விரதம் என்ற முழுமைக்கு வருகின்றது.

ஆகவே 12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் அந்த ராசிகள் மாறப்படும் பொழுது அதை எப்படி மாற்றவேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள்.

1.வைகுண்ட ஏகாதசி...! - எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து
2.ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுளை இழுக்காதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும்.

வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெலலாம் மனித உடலுக்குள் வராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும்.

அப்படி ஆனாதையாக்கினால் காலையில் ஆறு மணிக்கெல்லாம் அந்த உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து மேலே சென்று கொண்டு விடுகிறது.

சூரியன் கவர்ந்து சென்று விட்டால் நம் ஆன்மா தூய்மை அடைகிறது... ஜீவாத்மா தூய்மை அடைகிறது... உயிராத்மா ஒளியாகிறது.. இந்தப் பரமாத்மாவும் (காற்று மண்டலம்) புனிதமாகிறது.

இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை வளர்த்து எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை கொண்டு இதையே நாம் கடைபிடித்தால்
1.ஒளி என்ற உடலும்
2.ஒளியான அறிவும்
3.இருளை நீக்கும் ஞானமும்
4.மெய்ப்பொருள் காணும் சக்தியும் நமக்குக் கிடைக்கும்.