ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 24, 2021

மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றலை குருநாதர் எனக்குக் கொடுத்த விதம் - ஞானகுரு

 

வாடிய மரத்திற்கு உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிற மாதிரித் தான் குருநாதர் எனக்கு (ஞானகுரு) சக்தி கொடுத்தார்.

காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் பல அனுபவங்களைக் கொடுத்தார்.
1.காட்டிலே இடைஞ்சல்கள் வரும் போது அந்த ஞானிகளின் சக்திகளை நீ சேர்த்துக் கொண்டால் அந்தக் கெடுதல் நீங்கும்.
2.நான் சொல்லும் முறைப்படி எடுத்தால் அந்தத் தீமை நீங்கும்

வரும் துன்பங்களிலிருந்து விடுபடும் சக்தியை உனக்குள் பதிய வைக்க வேண்டும் அல்லவா... அதற்காகத் தான் “இதை எல்லாம் செய்கிறேன்” என்று சொல்வார்.

ஏனென்றால் குருநாதர் என்னைத் திட்டுவார்... உதைப்பார்... எல்லாம் செய்வார். ஏண்டா நமக்கு இப்படித் தொல்லை கொடுக்கிறார்...? என்று அவர் மீது வெறுப்பு வரும். அவரை விட்டு ஓடிப் போகலாமா...! என்ற எண்ணம் தான் வரும்.

எங்கேடா நீ தப்பப் போகிறாய் என்பார்...! இப்படி எல்லாம் பல கஷ்டங்களைக் கொடுத்துத் தான் எனக்கு உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.

ஒரு பாறை வழுக்கலாக இருக்கும். கவனம் இல்லை என்றால் விழுந்து பல் எல்லாம் போய்விடும். அங்கே ஒரு பொருளைக் காட்டுவார். போய் எடுக்கச் சொல்வார்.

காட்டிலேயும் மலைகளிலேயும் இப்படிப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

ஒரு சமயம் இமயமலைக்குச் செல்லும் போது அங்கே பனியாக இருக்கிறது. கிடு... கிடு... என்று நடுக்கமாக இருக்கிறது. வெறும் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு அங்கே போகச் சொல்கிறார்.

அங்கே போனால் எல்லாம் “பாதை” மாதிரித் தெரியும். மரத்தின் மீது பனி... கட்டியாக உறைந்திருக்கும். ஏமாந்து கையையோ காலையோ வைத்தோம் என்றால் “டபக்...” என்று படுபாதாளத்திற்குப் போய்விடுவோம்.

போடா...! என்பார். அதையும் காட்டுவார்... இதையும் செய்யச் சொல்வார். ஆனால்...
1.இந்த இடத்தில் உன்னைக் காப்பாற்ற வலு வேண்டுமல்லவா...
2.அந்த வலுவை எப்படி எடுக்க வேண்டும்...? என்று சொல்வார்.
3.நான் சொன்னபடி நினைக்கவில்லை என்றால் கீழே போய்விடுவாய்
4.நான் சொன்ன உணர்வை எடுத்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வாய்...! என்பார்.

ஆபத்து வரும் நேரத்தில் இந்த மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என்பார் குருநாதர்.

அவர் சொன்னபடி போகும் போது ஒரு இடத்தில் மேலே மரத்தின் மீது பனி இருக்கிறது. அந்தப் பக்கம் திடு... திடு... திடு... திடு... என்று பனி உடைந்து கீழே விழுந்து கொண்டுள்ளது (AVALANCHE).

அங்கே காலை வைத்தவுடன் பொரு...பொரு... என்று இருந்தது “டபக்” என்று ஒரு கால் இறங்கிவிட்டது. கால் உள்ளே இறங்கிய பின் எந்த எண்ணம் வருகிறது...? ஐய்யய்யோ... செத்துப் போய்விடுவோமே...! என்ற எண்ணம் தான் வருகிறது.

1.நான் என்னடா சொன்னேன்...?
2.நீ என்னடா பண்ணுகின்றாய்...! என்று குருநாதர் கேட்கிறார்.

ஏனென்றால் அந்த உணர்வு என்ன செய்கிறது...? குருநாதர் கொடுத்த அந்தச் சக்தியைப் பயன்படுத்த முடியவில்லை.

மனிதன் நாம் இந்தப் “புவியின் ஈர்ப்பில்” இருக்கும் போது நமக்குள் உணர்வு இது தான் உடனடியாக வருகிறது. நல்லதை நினைக்க முடியவில்லை.

இதை எல்லாம் நீங்களும் கேட்கின்றீர்கள். தியானத்தில் உட்கார்ந்து ஈஸ்வரா...! என்று எண்ணினால்
1.மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை
2.எண்ணத்தை நிலை நிறுத்த முடியவில்லை என்று சொல்வீர்கள்.

அப்படி எல்லாம் ஒன்றும் நிறுத்த முடியாது. ஏனென்றால் பல அலைகள் ஓடிக் கொண்டிருக்கும்.

இங்கே யாம் உபதேசிக்கும் உணர்வின் அலைகளைக் கேட்டால் உங்களுக்குள் நல்லதாகும். இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிய வைத்து நீங்கள் மீண்டும் எண்ணி “அந்த உயர்ந்த சக்தியை...” மகரிஷிகளின் ஆற்றலை எடுக்கப் பழக வேண்டும்.

உங்களுக்குள் எப்பொழுது மனம் கெடுகின்றதோ அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்... அந்த நல்ல உணர்வுகள் எனக்குள் வளர வேண்டும்... என்று அதை எண்ணி உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நேரத்திலும்...
1.குருநாதர் எனக்குக் காட்டியது போல்
2.நீங்களும் ஆத்ம சுத்தி செய்வதில் தான் எல்லாமே இருக்கிறது.