ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 4, 2021

நல்ல குணங்களைப் பாதுகாக்கும் வலிமையான சக்தியை நாம் நேசிக்கின்றோமா...?

 

நாம் வேலை அதிகமாகச் செய்தால் குளிக்காமல் படுக்கப் போவதில்லை. துணியில் அழுக்குப்பட்டால் துவைக்காமல் அதைப் போடப் போவதில்லை. கையில் அழுக்குப்பட்டால் கழுவாமல் நாம் உணவு உட்கொள்ளப் போவதில்லை.

இதைப் போன்று தான் ஒவ்வொரு நிமிடத்திலும் பிறர்படும் தீமைகளைக் கேட்டால் நம் ஆன்மாவில் படும் அத்தகைய அழுக்கினைத் துடைக்க வேண்டும்.

1.ஈஸ்வரா... என்று புருவ மத்தியில் எண்ணி
2.“மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்...” என்று
3.நம் கண்ணின் நினைவினை விண்ணிலே செலுத்தி அதைக் கவர்ந்து
4.உள்முகமாக உயிர் வழியாகக் கொண்டு வந்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
5.இப்படிச் செய்தால் இது நல்லதைச் சிந்திக்க இடம் கொடுக்கும்.

ஆனால் சிந்தனையற்ற செயலை ஒருவன் செய்கிறான்... நாம் பார்க்க்கின்றோம். அதனால் வரும் எதிர்ப்பு உணர்வையோ வேதனைப்படும் செயலையோ நாம் நுகர்ந்து விட்டால் அடுத்து ஒரு வேலையைச் செய்தால் என்ன ஆகும்...?

ஒரு கணக்கைப் பார்த்தோம் என்றால் கிடக்குது போ...! என்று இந்த உணர்வு தான் வரும்... சரியாக வராது. அந்த வேலையை வெறுக்கும் நிலை தான் வரும்.

அதே சமயத்தில் வெறுப்பால் அந்த வேலையைச் செய்யவில்லை என்றால் மேலதிகாரி வந்தவுடனே “ஏம்பா...? இந்த வேலையைச் செய்யவில்லை...!” என்று சொன்னவுடனே வேதனையான உணர்வு நமக்குள் வரும்.

காரணம்... சந்தர்ப்பம் இவ்வாறு இயக்குகிறது.

இதைப் போன்ற நிலைகளை
1.நாம் உடனுக்குடன் தூய்மைப்படுத்தினால் தான் சிந்தனையும் நிலைக்கும்
2.நம் செயல்களும் சீராக இருக்கும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் எந்தத் தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் அடுத்த கணமே ஈஸ்வரா... என்று இங்கே புருவ மத்தியில் வேண்ட வேண்டும்.
1.மனிதால் மட்டும் தான் இப்படி எண்ண முடியும்.
2.மற்ற உயிரினங்கள் எதிரிகளைப் பார்த்தால் அதனின்று தப்பிக் கொள்ளத் தான் எண்ணும்
3.விண்ணை நோக்கி எண்ணும் நிலை இல்லை.

உயிரினங்களில் தன்னைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி... அதிலே விளைந்த உணர்வு தான் “ஒட்டு மொத்தமாக” நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது நம் உயிர்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்து இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அகற்றுதல் வேண்டும்.

இதைத் தான் கார்த்திகேயா...! என்று சாஸ்திரப்படி காட்டுகிறார்கள். சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்கு வள்ளி திருமணத்தையும் காட்டுகின்றனர்

ஏனென்றால் வள்ளியை முருகன் காதலிக்கின்றான்.
1.இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.வலிமைமிக்க சக்தியான அந்தப் “பாதுகாக்கும் சக்தியை” தனக்குள் நேசிக்க வேண்டும்.

முருகு... மாற்றி அமைக்கும் உடல் பெற்றவர்கள் நாம்.
1.நம் ஆறாவது அறிவைத் தான் முருகன் என்றும்
2..தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்றும் காவியப் படைப்பு வருகின்றது.

நம்மைப் பாதுகாக்கும் உணர்வை நாம் நேசித்தோம் என்றால் மனிதனாக வளர்ந்த நிலையில் அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோம் என்று பொருள்.

நம்மை ஏசுவோரையோ கேவலப்படுத்துவோரையோ நாம் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைந்து நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை அது தின்றுவிடும்.

வேதனைப்படும்படி ஒருவர் சொன்னார் என்றால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது தின்றுவிடும். பார்க்கலாம் டி.பி. வந்தால் எலும்புகளை எல்லாம் அது தின்கிறது.

அதை எல்லாம் மாற்றுவதற்குத் தான் நம்மைப் பாதுகாக்கும் உணர்வினை எடுக்கும்படி காவியப் படைப்புகள் உணர்த்துகின்றது.

1.மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்தால் அது நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வருகிறது.
2.அந்த அருள் உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் உயிர் அதைத் தெய்வ ஆணையாக
3.நமக்குள் அந்தக் காத்திடும் தெய்வமாக... தெய்வச் செயலாக நம் உடலை இயக்கும்.

தீமைகளிலிருந்து விடுபடுகிறோம்.. அருள் சக்திகளையும் பெறுகின்றோம்... அது பெருகப் பெருக பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு அடுத்த நிலையான ஒளிச் சரீரமும் பெறுகின்றோம்.