ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 12, 2021

நாம் வாழும் உலகில் நஞ்சு பெருக் காரணமும் அதிலிருந்து விடுபடச் செய்யும் சரியான மார்க்கமும்

 

பாலில் நஞ்சு கலந்தால் அதைக் குடித்தால் நம் சிந்திக்கும் தன்மையை எப்படி இழக்கின்றோமோ... அதைப் போலத் தான் இன்றைய உலகில் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் நஞ்சுகள் அதிகரித்துள்ளதால் நல்ல சிந்தனைகளும் குறைந்து கொண்டே வருகிறது.

காரணம்...
1.பூச்சிக் கொல்லி மருந்துகளையும் இரசாயண உரங்களையும் விவசாயப் பயிர்களில் சேர்த்துச் சேர்த்து
2.பெரும்பகுதியான வித்துகளில் அந்த நஞ்சு இணைந்தே உள்ளது
3.அது நம் உடலுடன் இணையும் போது நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்திலும் கலக்ககப்படுகின்றது...
4.அத்தகைய நஞ்சால் நம் சிந்தனை இழக்கப்படுகின்றது... நாம் சிந்தித்தாலும் கூட அது தெரிவதில்லை.

நாம் எண்ணும் கோபமோ வெறுப்போ வேதனையோ இவை எல்லாம் விஷத்தால் இயக்கப்படுவது. உடலில் விஷம் கூடக் கூட “அத்தகைய தீமை செய்யும் சிந்தனையும்... அதனுடைய ஞானமும் தான் அதிகமாகப் பெருகும்...”

உதாரணமாக ஒருவரை நாம் எதிர்பாராது திட்டி விடுகிறோம் அல்லது அவருக்குக் கோபம் வரும்படியாக பேசி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.

1.அதனால் அவர் மனது புண்பட்டிருந்தாலும் கூட
2.“தான் பேசியது நியாயம் தான்...” என்று வாதிக்கும் திறன் அந்த விஷத்திற்கு உண்டு.

அந்த விஷத்தின் வலுக் கொண்டு செயல்படுத்தும் போது நாம் திட்டியதால் அவர்கள் மனம் புண்பட்டுவிட்டது என்ற சிந்தனையற்ற நிலையும் உருவாக்கிவிடும்.

அவர்கள் தவறு செய்யவில்லை... சந்தர்ப்பவசத்தால் அவர்களைத் திட்டி விட்டோம்...! என்று எண்ணினாலும் அவர்களைத் திட்டியதால் வேதனைப்படுகின்றனர் என்று சிந்தித்து அதைச் சீர்படுத்த முடியாது.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் எதுவாக இருந்தாலும் இது போன்ற விஷத் தன்மைகள் பெருகி சிந்தனையில்லாத செயல்களும் இன்று அதிக அளவில் பெருகிக் கொண்டே உள்ளது.

ஆனால்... நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினைப் பிரித்து விட்டு நல்ல உணர்வை உடலாக ஆக்கும் மணமாக மனித உடலில் ஆறாவது அறிவு இருக்கின்றது.

கடந்த காலங்களில் மனித வாழ்க்கையில் எத்தகைய வேதனையான நிலைகள் வந்தாலும் தன் ஆறாவது அறிவின் திறமை கொண்டு அந்த வேதனையை உருவாக்கிடும் செயல்களை நீக்கிடும் ஆற்றல்கள் உண்டு. அதிலே முதன்மை பெற்றவன் அகஸ்தியன்.

ஏனென்றால் மனிதனின் உணர்வுக்குள் ஆறாவது அறிவை ஏழாவதாக மாற்றுவது ஒளி.
1.ஒரு பொருளுக்குள் இருக்கும் நஞ்சினை நீக்கத் தெரிந்து கொள்வது...
2.தீயதை நீக்கி நல்லதை உருவாக்கும் ஆற்றல் பெற்றது நம் ஆறாவது அறிவு.

அதனை அடிப்படை ஆதாரமாக வைத்துப் பண்டைய காலத்தில் வாழ்ந்த அந்த மெய் ஞானி நஞ்சினை நீக்கி உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றினான். ஆக அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்த மகரிஷியின் ஒளிச் சரீரத்திலிருந்து வெளிப்படும் மிகச் சக்தி வாய்ந்த உணர்வலைகளை சூரியன் காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நம் பூமி வட துருவத்தின் வழியாக அதைக் கவர்கிறது.

அப்படி வரும் வந்த உணர்வுகளைக் கவர்ந்தோர் அனைவரும் அந்த அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை நீக்கினானோ... உணர்வை ஒளியாக மாற்றினானோ... அதைப் போல் ஒளியாக மாற்றிக் கொண்டு... முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில் வேகா நிலை கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றி சப்தரிஷி என்ற நிலை அடைந்து
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் தனக்குள் ஒளியாகச் சிருஷ்டித்து ஏழாவது நிலையை அடைந்து சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.
அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளும் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வுகளும் நமக்கு முன் இன்றும் படர்ந்து கொண்டுள்ளது.

அதை நாம் பருகினால் இன்றைய உலகில் வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபடலாம். அந்த மகரிஷிகளுடன் நாமும் ஐக்கியமாகலாம். அழியா நிலை பெறலாம்.