ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2021

“தியானத்தில் சக்தி பெறுகிறோம்...” என்பதை நாம் எப்படி அறிவது...? - ஈஸ்வரபட்டர்

 

தியானத்தின் முறை கொண்டு நம் எண்ணம் ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வழி பெறும் காலங்களில் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும்...?

குழந்தைப் பிராயத்தில் குழந்தையின் உடல் மற்றும் அங்க அவயங்கள் உறுப்புகள் எல்லாம் மிருதுத் தன்மையுடன் இருக்கின்றது. பிறகு வளர வளர உடல் உறுப்புகளும் தசை நார்களும் வலுப் பெற்று வளர்கின்றது.

அதைப் போன்று நம் ஆரம்பத் தியானத்தில் நம் எண்ண நிலை எல்லாம் வளர்ச்சி பெற்று.. ஒரு நிலை பெற்று... பக்குவம் எய்தி... அதன் ஈர்ப்பின் வழித் தொடருக்குப் பிறகு பல நிலைகளை நாம் காணலாம்.

நம் எண்ணத்தினாலேயே நாம் எடுக்கும் சுவாசத்தினால்...
1.பல மணங்களை உணரும் பக்குவமும்
2.பல சுவையின் ஈர்ப்பில் உண்ட களிப்பு நிலையும்
3.பல ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து மகிழும் நிலையும்
4.நம்மின் உருவின் உருவ நிலையைக் காணும் நிலையும்
5.இந்த உலகின் சுழற்சி ஓசையான “ஓ...ம்” என்ற ஒலி ஈர்ப்பின் அலைதனை ஈர்த்துக் கேட்கும் வழித் தொடரின் நிலையும்
6.இதன் வளர்ச்சியில் பல சித்தர்களின் நிலையுடன் தொடர் கொள்ளும் நிலையும்
7.இப்படி ஒன்றின் வளர்ச்சி கொண்டு ஒன்றின் மேம்பாட்டில் தியானத்தின் ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற்ற பிறகு
8.சித்தன் நிலையை நாம் அடைய முடியும்.

புகைப்படம் எடுப்பவன் ஓர் பிம்பத்தைப் பலவாக மறு பிம்பங்களை எப்படி எடுத்துத் தருகின்றான்...? ஒரே பிம்பத்தை நிலைக் கண்ணாடியைப் பல கோணத்தில் வைத்துக் காணும் பொழுது நம் பிம்பத்தைப் பலவாகக் (எண்ணிக்கையில்) காணுகின்றோம்.

இதைப் போல் சித்து நிலை பெற்றவர்கள் இந்த உடல் என்னும் கூட்டை...
1.இந்த உடலில் உள்ள உயிரணுவை ஜீவ உயிரை இந்த உடலிலிருந்து பிரித்து
2.இந்த உடலுக்குகந்த பிம்ப உடலின் பிம்பத் தன்மையையும்
3.இந்தக் காற்றிலுள்ள அமில சக்தியை அந்த ஜீவனுடன் கூட்டிக் கொண்டு பல இடத்தில் ஒரே சமயத்தில் செயல் புரிகின்றனர்.

இருந்த நிலையிலிருந்தே ஜீவ உயிரணுவுடன் எந்த மண்டலத்திற்கும் எந்த இடங்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் சென்றறிந்து வருவதோடு மட்டுமல்லாமல் பல சக்தி அமிலங்களையும் எடுத்து வருகின்றனர்.

விட்டுச் சென்ற உடல் கூட்டின் அவயங்களெல்லாம் அந்த ஜீவ உயிர் இல்லாமலே உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களுக்கும் அந்த உயிரைப் போன்று அனைத்து அணுக்களும் தாமாகச் சுவாசமெடுத்து இயங்கக்கூடிய சக்தி பெற்று விடுகின்றன.

எல்லா உயிரணுக்களுமே அந்த உடலின் ஜீவனைப் போன்று தானாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த உடல் பிம்பத்திற்குச் செயலாற்றவோ... எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையோ... அந்த ஜீவ உயிர் வரும் வரை இருக்காது.

“கூடு விட்டுக் கூடு பாயும் நிலை...!” என்று உணர்த்துகிறார்களே அன்றி உண்மைச் சித்தன் இந்த உயிர் ஜீவனுக்கு எத்தனை பிம்ப நிழலையும் அவனால் எடுக்க முடியும்.

அமில குணத்தைச் சேர்ந்த புகைப்படத்தை நம்புகின்றான் மனிதன். பாதரசத்தின் துணையுடன் நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தை நம்புகின்றான்.

அதே நிலை நம் கண்ணின் கருமணியிலும் உள்ளது... நீரிலும் உள்ளது. தெளிந்த நீரில் நம் பிம்பத்தைக் காண்கின்றோம்.

அதைப் போன்று தான் சித்தனுக்கு உடல் விட்டுப் பிரிந்த தன் உயிர் ஜீவனுடன் எந்நிழல் பிம்பத்தையும் இந்தக் காற்றுடன் கலந்துள்ள அமில குணத்திலிருந்து பிரித்தெடுத்து ஒரே இடத்திலிருந்து பல இடங்களுக்கும் செல்கின்றான்.

இந்த நிலையை உணர்த்தினால் மனிதன் உடலிலிருந்து உயிரை எப்படிப் பிரித்தெடுப்பது...? என்று வினா எழுப்புவான்.

ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பினால்
1.உடலின் அனைத்து அணுக்களும் தன் வசப்பட்டு
2.ஒவ்வொரு அணுவும் உயிர் ஜீவனின் சக்தி கொண்ட நிலை பெற்று
3.வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் மற்ற ஈர்ப்பின் நிலைக்கு அடிமைப்படாமல்
4.எந்த எண்ணமும் தன் எண்ணமாக எண்ணும் முறை பெற்று
5.தியான வளர்ச்சியுடன் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பில் ஒவ்வொரு நிலையும் வழித் தொடர் பெற்ற பிறகு
6.அந்தச் சித்தனின் நிலை பெறத் தக்க உயிர் ஜீவனின் எப்பிம்பமும் காணும் நிலையை எய்தலாம்.